மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி தலைமையில் திமுக ஆட்சியில் இருந்த போதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும், அவரின் நம்பிக்கைக்குரிய தலைவர்களாக மறைந்த பேராசிரியர் அன்பழகன், நாஞ்சில் மனோகரன், சாதிக் பாட்சா, வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்களும் தற்போதைய மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு என பலரும் இருந்துள்ளனர்.
கொள்கை ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் கலைஞர் மு.கருணாநிதியின் சிந்தனைக்கு ஏற்ப செயல்பட்டவர்கள் பலர் இருந்தபோதும், அவரின் ஆத்மார்த்த சீடராக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமிதான் இருந்தார் என்று இன்றைக்கும் திமுக.வில் உள்ள முன்னணி தலைவர்கள் நினைவுகளைக் பகிர்ந்து கொள்கிறார்கள்
குறிப்பாக, தனது குடும்ப உறவுகளுக்குள் அவ்வப்போது எழும் முட்டல், மோதல்களை தீர்த்து வைப்பதற்கு எப்போதுமே ஆற்காடு வீராசாமியைதான் களத்தில் இறக்குவார் கலைஞர் மு.கருணாநிதி என்கிறார்கள் மூத்த ஊடகவியலாளர்கள்.

கலைஞர் மு.கருணாநிதி மறைந்த காலத்திற்கு முன்பாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு ஆற்காடு வீராசாமி, தனது இயல்பான நடவடிக்கைகளை குறைத்துக் கொண்டு வீட்டோடு இருக்கும் சூழல்நிலை உருவான காலத்தில், முன்னணி நிர்வாகிகள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு ஆகியோர், குடும்பத்திற்குள் ஏற்பட்ட மனஇறுக்கத்தை போக்க முயற்சியெடுத்த ஒன்றிரண்டு நிகழ்வுகளும் உண்டு.
ஆனால், அவர்களின் செயல்பாடுகள், ஆற்காடு வீராசாமி அளவுக்கு கனக்கச்சிதமாக அமைந்ததில்லை என்று கலைஞர் மு.கருணாநிதியே பலமுறை வெளிப்படையாக பேசியிருக்கிறார் என்று இப்போதும்கூட பழைய நினைவுகளை பகிர்ந்துகொள்கிறார்கள் அண்ணா அறிவாலய நிர்வாகிகள்
ஆத்மார்த்த சீடர்கள் அமைவதெல்லாம் தற்செயலான நிகழ்வு அல்ல. அதற்காக கொடுக்கப்படும் உழைப்பும், விலையும் அதிகமாகவே இருக்கும். அந்த வகையில், கலைஞர் மு.கருணாநிதிக்கு உற்ற தோழராக ஆற்காடு வீராசாமி திகழ்ந்ததைப் போல, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நம்பிக்கைக்குரிய தளபதியாக, சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபுதான் திகழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று விரக்தியில் விழிகளை விரிக்கிறார்கள் திமுக இளைஞரணி நிர்வாகிகள் சிலர்.

நமக்கு அறிமுகமான இளைஞரணி நிர்வாகி ஒருவரிடம், ஏனிந்த விரக்தி என்று கேட்டதுதான் தாமதம்..பொங்கி தள்ளிவிட்டார் மனிதர்.
அதிமுக.வில் இருந்து விலகி வந்த நாள் முதலே தளபதி மு.க.ஸ்டாலின் மனதில் அழிக்க முடியாத இடத்தை பிடித்துவிட்டார் பி.கே.சேகர் பாபு. அரசியலில் எப்படி செயல்பட்டால் தளபதிக்கு பிடிக்கும் என்பதை சிறிது காலத்திலேயே உணர்ந்து கொண்ட சேகர் பாபு, தளபதியை அசத்துவதற்காகவே, வடசென்னையில் அடிக்கடி நிகழ்ச்சிகளை நடத்தினார். எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலேயே சேகர் பாபு ஏற்பாடு செய்யும் ஒவ்வொரு நிகழ்வும் வித்தியாசமாக இருக்கும். பி.கே.சேகர் பாபு ஏற்பாடு செய்த எந்தவொரு நிகழ்வையும் தளபதி புறக்கணித்தாக சரித்திரமே கிடையாது.
நலத்திட்ட உதவிகளாக இருந்தாலும் சரி, கட்சிப் பொதுக்கூட்டமாக இருந்தாலும் சரி திரைப்பட இயக்குனர் சங்கர் போல, பிரம்மாண்டம் என்பதுதான் சேகர் பாபுவின் அரசியல் அஸ்திரம். பி.கே.சேகர் பாபுக்கு முன்பு இருந்த வடசென்னை முன்னணி திமுக நிர்வாகிகள் உணர்வோடு விழாக்களை நடத்தியிருந்தாலும் கூட, அந்த நிகழ்வுகளில் இல்லாத பிரம்மாண்டம் சேகர் பாபுவின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் காணப்பட்டதால், தளபதி மு.க.ஸ்டாலினே வியந்து போன தருணங்கள்தான் அதிகம்.

அதிமுக.வில் இருந்து விலகி திமுக.வில் சேகர் பாபு சேர்ந்த 2011 ஆம் ஆண்டில், தளபதி மு.க.ஸ்டாலினும் தொகுதி மாறி வந்து கொளத்தூரில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் சேகர் பாபு தனது முழு சக்தியையும் திரட்டி தேர்தலில் பணியாற்றியதைக் கண்டு, ஆச்சரியப்பட்டுப் போனார் தளபதி மு.க.ஸ்டாலின். அன்றைய நாளில் இருந்தே சேகர் பாபுவின் அரசியல் ஏற்றம் கன்னாபின்னாவென்று எகிற ஆரம்பித்தது. அவரின் விஸ்வரூப வளர்ச்சியால், வடசென்னையில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்த பழம்பெரும் தலைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன.
கடந்த பத்தாண்டுகளில், அதிகாலை நேரத்திலேயே மு.க.ஸ்டாலின் இல்லத்தில் முதல் நபராக ஆஜராவதை வழக்கமாக கொண்டிருந்தவர் பி.கே.சேகர்பாபு. நினைத்ததை சாதிக்கும் வரை ஓயவே மாட்டார் என்று யாரையாவது உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் நிகழ்காலத்தில் சேகர்பாபுதான் கண் முன் வந்து நிற்கிறார்.

அவரின் உழைப்பும், விசுவாசமும் வெகுவிரைவாக தளபதியின் தளபதியாக உயர்த்த வழி வகுத்தது. அதுவும் கலைஞர் மு.கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு அவரது நினைவிடத்தை அலங்கரிக்கும் பொறுப்பை ஏற்ற நாள் முதலாக இன்று வரை, சேகர் பாபுவின் உழைப்பிற்கும், ரசனைக்கும் கலைஞர் மு.கருணாநிதியின் நினைவிடம் அலங்கரிக்கப்பட்ட ஆல்பமே எடுத்துக்காட்டமாக இருந்து கொண்டிருக்கிறது.
வடசென்னை மாவட்டத்தில் இருந்து எத்தனையோ குரல்கள் பி.கே.சேகர் பாவுக்கு எதிராக அண்ணா அறிவாலய கதவுகளை தட்டியபோதும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவும், அமைச்சர் பதவியை வழங்கவும் சேகர் பாபுக்கு தடைக்கற்களாக விழுந்த போதும், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு அவருக்கு உரிய மரியாதையை வழங்கி, அங்கீகரித்து இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அமைச்சரான பிறகும், கடந்த பத்தாண்டுகளில் எப்படி இயங்கி வந்தாரோ அதுபோலவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சேகர் பாபு. முதல்வர் மு.க.ஸ்டாலின் மனதில் நிரந்தரமாக குடியேறியதைப் போலவே, அவரது குடும்ப உறவுகளிடமும் நற்சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார் சேகர் பாபு. அண்ணா அறிவாலயமோ, முதல்வரின் வீட்டிற்குள்ளோ, காலடி எடுத்து வைத்த நிமிடத்தில் இருந்து வெளியேறும் நிமிடம் வரை மௌன சாமியாகவே நிற்பார் பி.கே.சேகர்பாபு. வாயைத் திறந்து ஒரு வார்த்தைகூட பேச மாட்டார்.

வெளிப்பார்வைக்கு மௌன சாமியாக காட்சியளிக்கும் சேகர் பாபு, மிகச் சிறந்த உளவாளி என்பது திமுக தலைவருக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாகும். கலைஞரின் புதல்வராக, இளைஞரணி செயலாளராக, சென்னை மேயராக, துணை முதல்வராக, செயல் தலைவராக, திமுக தலைவராக என பல பதவிகளில் அமர்ந்த போதும், தற்போது முதல்வராக ஆட்சிப் புரிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்திலும் கூட, தளபதியின் மனதில் ஒரு எண்ணம் தோன்றுவதற்கு முன்பாகவே அதை நிறைவேற்றி முடிக்கும் சக்திப் படைத்தவர்களாக திமுக தளகர்த்தார்களாக கே.என்.நேரு, ஐ.பெரியசாமி ஆகியோர் இருந்தாலும் கூட, கடந்த 2011ல் கிடைத்த அறிமுகத்தை வைத்துக் கொண்டு, யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக உயர்ந்த இடத்தை பிடித்திருப்வர் அமைச்சர் சேகர்பாபுதான் என்பது, முதல்வர் மு.க.ஸ்டாலினோடு நெருக்கமாக இருக்கும் திமுக பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகனுக்கே நெருடலாக தான் இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மையான உண்மை.

அண்ணா அறிவாலயம், ஆழ்வார்ப்பேட்டை இல்லம், தலைமைச் செயலகம், முதல் அமைச்சர் அலுவலகம், கலைஞர் நினைவிடம் என எந்தவொரு இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்தாலும், அவர் அருகில் நிற்பதற்கு அமைச்சர் சேகர் பாபுக்கு மட்டுமே முழு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது.
கடந்த பத்தாண்டு காலத்தில் சென்னை மாவட்ட திமுக.வில், கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபுக்கு கிடைத்த செல்வாக்குப் போல வேறு எந்த முன்னணி நிர்வாகிகளுக்கும், மிகுந்த விசுவாசம் படைத்த முன்னாள் இளைஞரணி நிர்வாகிகளுக்கும் கூட கிடைத்ததில்லை என்று ஓரே மூச்சில் பேசி முடித்தார் திமுக இளைஞரணி நிர்வாகி.
True news in salem pollitics