Mon. Nov 25th, 2024

கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி வாழ்த்துச் சொல்லாதவர்…முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் இன்று சந்திப்பு..

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான சீமான், தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அவருடன் இயக்குனர் பாரதிராஜாவும் இருந்தார். கொரோனோ தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். பின்னர் தலைமைச் செயலக வளாகத்தில் ஊடகவியலாளர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். கொரோனோ தொற்று பரவல் அச்சுறுத்தல் உள்ள நிலையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்துவதில் உள்ள அச்சுறுத்தல் குறித்து முதல்வர் கவலை தெரிவித்தார்.

கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசின் நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளது. எல்லா துறைகளும் விரைவாக இயங்கி வருகின்றன. குறிப்பாக சுகாதாரத்துறையின் செயல்பாடுகளும், அந்த துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் செயல்பாடும் பாராட்டுதக்க வகையில்தான் உள்ளது. தனது தந்தை மரணமடைந்தபோது முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய ஆறுதல் மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இவ்வாறு நடிகர் சீமான் கூறினார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் 97 வது பிறந்தநாளையொட்டி, அதிமுக உள்பட ஒன்றிரண்டு அரசியல் கட்சித்தலைவர்கள் தவிர அனைத்து அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் நேற்றைய தினம் வாழ்த்துச் செய்தி வெளியிட்டிருந்தனர். ஆனால், கலைஞர் மு.கருணாநிதி பிறந்தநாளையொட்டி நேற்றைய தினம் வாழ்த்துச் செய்தி எதுவும் தெரிவிக்காத நடிகர் சீமான், நேற்றைய தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த 6 முக்கிய அறிவிப்புகள் குறித்தும் கூட கருத்து தெரிவிக்கவில்லை.

திமுக.வை தமிழினத்திற்கு எதிரான கட்சியாக சித்தரிப்பதில் தேர்தல் முடிவுகள் வெளியே வந்த பிறகும் தீவிரமாக இருந்து வரும் நடிகர் சீமான், இன்றைய தினம் திடீரென்று கொரோனோ நிவாரண நிதி கொடுக்கும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததின் பின்னணியில் உள்ள மர்மம் என்ன என்பது குறித்து வெகு விரைவில் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துவிடும் என்று கூறுகிறார்கள் அரசியல் திறனாய்வாளர்கள்.