Mon. Feb 3rd, 2025

முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாதாரண அரசியல்வாதி அல்ல; அசகாய சூரர் என்பதை கடந்த 4 ஆண்டு கால ஆட்சியில் அவர் நிரூபித்துவிட்டார் என்பதுதான் தமிழக அரசியலில் உறிக்கிடக்கும் மூத்த அரசியல்வாதிகளின் சர்டிபிகேட். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் பத்தோடு ஒன்றாக இருந்ததைப் போல இன்று இல்லாமல்,ஜெயலலிதாவின் சபதத்தை நிறைவேற்றும் சக்தி கொண்டவராக இன்றைக்கும் இ.பி.எஸ்., காட்சியளிக்கிறார் என்பதும், இதுவரை தமிழகத்தை ஆண்ட முதல்வர்களிடம் காணப்படாத ஒரு அசாத்திய துணிச்சல், தைரியம், எடப்பாடி பழனிசாமிக்கு கைவந்த கலையாக இருக்கிறது என்கிறார்கள் தலைமைச் செயலகத்தையே கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வலம் வந்துக் கொண்டிருக்கும் மூத்த ஊடகவியலாளர்கள்.

கடந்த 2017 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை தனது தலைமையிலான ஆட்சிக்கு எவ்வளவோ சிக்கல்கள் வந்தபோதும், அதை அசால்ட்டாக தகர்த்துவிட்டு, இன்றைக்கும் தமிழகத்தில் உள்ள அனைத்துக்கட்சிகளும் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்து மிரளும் அளவுக்கு தனது ஆளுமையை இ.பி.எஸ். நிலை நிறுத்தியிருக்கிறார் என்பது 100 சதவிகிதம் உண்மைதான் என்கிறார் பிரதான எதிர்க்கட்சியில் உள்ள முக்கியமான தலைவர் ஒருவர்.

“தன்னுடைய பழுத்த அனுபவத்தில் பல தலைவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இயற்கையாகவே பல திறமைகள் வாய்க்கப் பெற்றிருந்தாலும், அந்த திறமைகள்தான் அவர்களை பல நேரங்களில் தவறான முடிவு எடுக்க காரணமாக அமைந்தது” என்று கூறும் அந்தத் தலைவர், “எடப்பாடி பழனிசாமியிடம் பிரத்யேகமாக எந்தவொரு திறனும் இல்லை என்றாலும்கூட, அறிவார்ந்த, அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனைகளை காது கொடுத்துக் கேட்கிறார்; யதார்த்த கள அரசியலை கற்பூரம் போல பற்றிக் கொள்கிறார், தன்னுடைய இமேஜைப் பற்றி கவலைப்படாமல், சொந்த கட்சியினரை மட்டுமல்ல, எதிர்க்கட்சியினரையும் அரவணைத்து செல்ல விரும்புகிறார் என்பதும் போலித்தனம் இல்லாத அவரின் அரசியலும்தான், இன்றைக்கு இந்தளவுக்கு எடப்பாடி பழனிசாமி உயர்ந்து நிற்க முக்கிய காரணம்” என்கிறார் அந்த எதிர்க்கட்சித்தலைவர்.

இப்படி பிரதான எதிர்க்கட்சி தலைவரைச் சுற்றியுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அருங்குணங்களை ரசிக்கும்போது, 40 ஆண்டு கால அரசியல் வாழ்வில், தனிப்பட்ட, தன்சார்ந்த சாதியினருக்கான ஆதாயத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மட்டும் விதிவிலக்கா, என்ன?.. எடப்பாடியின் அன்பு பிடியில் சிக்கிக் கொண்டு மீள முடியாமல் தவிக்கிறார் அவர் என்கிறார்கள் தைலாபுரத்திற்கு நெருக்கமான விசுவாசிகள். அதற்கு வெளியுலகத்தில் பேசப்படும் காரணத்தை விட, தனக்கு என்ன தேவை என்பதை தான் சொல்லாமலேயே புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுகிற முதல்வராகதான் எடப்பாடி பழனிசாமி, இந்தநிமிம் வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதால்தான், எடப்பாடி பழனிசாமியை எளிதாக புறக்கணித்து விட முடியாமல் தவிக்கிறாராம் மருத்துவர்.

தன் மீது காதலாக இருக்கும் மருத்துவர் ராமதாஸை முழுமையாக நம்பி, புது ரூட் எடுத்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்பதுதான் கொங்கு சமூக பிரபலத் தலைவர்களின் தற்போதைய சந்தோஷத்திற்கு காரணமாம். மீண்டும் தனது தலைமையிலான ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்கும், அதற்காக என்ன விலை வேண்டுமானாலும் கொடுப்பதற்கும் இ.பி.எஸ்., போட்டிருக்கும் புதிய தேர்தல் கணக்குப் பற்றி, பா.ம.க. தலைமைக்கும் தெரிவித்துவிட்டு, சம்மதத்திற்காக காத்திருக்கிறாம், இ.பி.எஸ். தரப்பு..


இ.பி.எஸ்.ஸின் புதிய ஃபார்மூலாவை கேட்டு திகிலடித்துக் கிடக்கிறதாம் பா.ம.க. தலைமை. அது என்னவென்றால், “தமிழகத்தை பா.ஜ.க. ஆள வேண்டும் என்பதையே ஒற்றை குறிக்கோளாக வைத்துகொண்டு ஆட்டிப்படைக்கும் மத்திய அரசை கண்டு இனிமேல் நான் (எடப்பாடி பழனிசாமி) பயப்பட மாட்டேன். மிரட்டி, மிரட்டியே பணிய வைக்கிற மோடி வேண்டாம். அதே போல உட்கட்சிக்குள் இருந்துகொண்டே சமுதாய பலத்தை காட்டும் ஓ.பி.எஸ்., வேண்டாம், சசிகலா வேண்டாம். சென்னை நீங்கலாக வடக்கு மற்றும் மேற்கு மண்டலங்களை மட்டும் குறி வைத்து அ.தி.மு.க.வும், பா.ம.க.வும் இணைந்து ஒற்றுமையாக தேர்தலை சந்தித்தால், குறைந்தது 90 தொகுதிகளை எளிதாக தட்டி தூக்கிவிடலாம். தெற்கு மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் குறைந்த பட்சம் 30 சீட்டுகளைப் பிடித்தால் கூட போதும். மீண்டும் எனது தலைமையில் ஆட்சி அமைத்துவிட முடியும் என்று உறுதியாக நான் நம்புகிறேன். கொங்கு மண்டலத்திற்கு நான் கியாரண்டி. வடக்கு மண்டலத்திற்கு நீங்கள் (மருத்துவர் ராமதாஸ்) கியாரண்டியா? என்று சொல்லுங்கள்” என்பதுதான் இ.பி.எஸ்.ஸின் புதிய தேர்தல் ஃபார்முலாவாம்…
கடந்த 19 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்படுவதற்கு முன்பாகவே தைலாபுரம் தோட்டத்திற்கு இ.பி.எஸ். பார்முலா அனுப்பி வைக்கப்பட்டுவிட்டதாம். டெல்லியில் பிரதமர் மோடி, உள்துறை அமித்ஷா ஆகியோருடான சந்திப்பின்போதே, ஒருங்கிணைந்த அ.தி.மு.க.தான் எங்களுக்கு முக்கியம் என்று கறாராக சொல்லப்பட்டதாம். அதன் பிறகும் டெல்லியில் உட்கார்ந்து கொண்டு, பத்திரிகையாளர்களிடம் ,”அ.தி.மு.க.வில் சசிகலாவை சேர்ப்பதற்கு 100 சதவிகிதம் வாய்ப்பில்லை “என்று விஸ்வரூபம் காட்டிய இ.பி.எஸ்.ஸை கண்டுதான் பிரமித்து விட்டாராம் பெரிய அய்யா.

உண்மையிலேயே இ.பி.எஸ். ஃபார்முலா விளையாட்டாக சொல்லப்பட்டது இல்லை, அதில் சீரியஸாகதான் இருக்கிறார் இ.பி.எஸ். என்று யோசிக்க தொடங்கிவிட்டாராம் தைலாபுரம் தலைவர். தன்னிடம் முழுமையாக சரணாகதி அடைந்துள்ள இ.பி.எஸ்.யை, தனது அரசியல் அபிலாஷைகளுக்கு முழுமையாக பயன்படுத்திக் கொள்ள, இதுதான் சரியானநேரம் என்று தைலாபுரம் தலைவரும் ரெடியாகிவிட்டார் என்பதுதான், அ.தி.மு.க. மேல் மட்டத்தில் இருக்கும் மூத்த தலைவர்களின் ஹேப்பி மூட் டைலாக்….