சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி…..
திமு.க ஆட்சிக்கு வந்திடுச்சி… அதிமுக எதிர்க்கட்சி ஆகிடுச்சி..
அவ்வளவுதான் வி.கே.சசிகலா நடராஜனின் அரசியல் முடிஞ்சிப் போச்சி….
இப்படிதான் இன்றைய தேதியில் அரசியல் கள ஆய்வாளர்கள் எல்லாம் வி.கே.சசிகலாவைப் பற்றி மதிப்புரையை எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் நீறு பூத்த நெருப்பாக, அரசியல் அரிதாரம் பூசிக் கொள்ளும் ஆர்வத்தில்தான் வி.கே. சசிகலா இருந்து கொண்டிருக்கிறார் என்று அவரது நெருங்கிய வட்டாரத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர்கள் கூறிக் கொண்டே இருக்கிறார்கள்.
அதை தொடர்ந்து நாம் காது கொடுத்து கேட்காத போதும், ஆவேசமாக அவர்கள், இன்றைய தேதியில் சசிகலாவின் வருகை, அரசியலில், அதிமுக.வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆணித்தரமாக வாதிட்டார்கள்.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோற்றதற்கான காரணத்தை ஆராயாமல், எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இ.பி.எஸ்.ஸும், ஓ.பி.எஸ்.ஸும் அடித்துக் கொண்டதை அதிமுக.வின் அடிமட்ட தொண்டர்கள் ரசிக்கவில்லை. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தென்மாவட்ட அதிமுக.வினர் என்றைக்குமே ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதேபோல மற்றொரு முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வத்தை, கொங்கு மற்றும் வடக்கு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
இன்றைய தேதியில் ஆளும்கட்சியாக உள்ள திமுக.வை மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு இருந்த போர்க்குணத்தோடு எதிர்க்கக் கூடிய ஆளுமை மிகுந்த தலைவராக வி.கே.சசிகலா நடராஜனால் மட்டுமே உருவெடுக்க முடியும். அதனால், தனது அரசியல் துறவறத்தை கலைத்துவிட்டு மீண்டும் அரசியலுக்கு வர வேண்டும் என்று பல்லாயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் விரும்புகிறார்கள்.
அவர்களின் ஆசையை, விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் சின்னம்மா (வி.கே.சசிகலா) உடனடியாக நேரடி அரசியலுக்கு வந்து அனாதைகளாக இருக்கும் அதிமுக தொண்டர்களை அரவணைத்து, வழி நடத்த வேண்டும் என்பதுதான் பெரும்பான்மையானோரின் எண்ணமாக இருக்கிறது என்றார் நமது நட்பு வட்டத்தில் இல்லாத அதிமுக பிரமுகர் ஒருவர்.
அவரின் எண்ணம் போலவா ஒட்டுமொத்த அதிமுக தொண்டர்களின் நினைப்பும் இருக்கிறது என்று விசாரணையில் குதித்தோம். அந்த வேளையில், அரசியல் சார்ப்பற்ற நமது நலம் விரும்பி ஆடியோ ஒன்றை நமக்கு அனுப்பி வைத்தார்.
அதில், ஒலிக்கும் குரலை கேட்டு, எதிர்முனையில் இருப்பவர் உணர்ச்சிப் பெருக்கில் கொந்தளிக்கிறார். வார்த்தைகளை முழுதாக கூட அவரால் உச்சரிக்க முடியவில்லை. ஆனந்த கண்ணீர் பெருக, சின்னம்மா…சின்னமா… என்று அரற்றுகிறார். அதன் மூலம் அந்த குரல் வி.கே.சசிகலாவினுடையதுதான் என்று நம்மால் உணர முடிகிறது.
கட்சியை சரி பண்ணிவிடலாம்..கவனமாக இருங்கள் என்று ஆழ்ந்த நிதானத்தோடு அவர் கூறும் வார்த்தைகளில் ஏதோ சூட்சுமம் ஒளிந்திருக்கிறது என்பதை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆக மொத்தத்தில், அதிமுக.வினரால் சின்னம்மா என்று அழைக்கப்படுகிற வி.கே.சசிகலா நடராஜன், விரைவாக அரசியல் அரிதாரம் பூசுவார் என்பது மட்டும் உறுதியாகிறது.
அப்படியே ஆக்டிவ் அரசியலுக்கு வி.கே.சசிகலா வந்தால், இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கதி என்னவாகும்?
காலம்தான் பதில் சொல்லும்…..