Sat. Nov 23rd, 2024

தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்ற மே 7 ம் தேதியில் இருந்து கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தி வந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதற்கு முன்பாகவும் அதிகாரப்பூர்வமற்ற வரையில் மே 2 ஆம் தேதியில் இருந்து கொரோனோவுக்கு எதிரான போரில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டிருந்தாலும், முழு அமைச்சரவையும் கடந்த 20 நாட்களாக கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளில் போர்க்கால அடிப்படையில் செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இதனால், பரவலாக அனைத்து தரப்பினரும், குறிப்பாக அரசு அதிகாரிகள் தரப்பில் எதிர்பார்க்கப்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் தள்ளிக் கொண்டே போனது. இதனால் திமுக ஆதரவு அதிகாரிகளிடையே சோகம் தலைதூக்கிய நேரத்தில், 20 நாட்களுக்குப் பிறகு அதிரடியாக ஐஏஎஸ் உயரதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டள்ளனர்.

உயர் அதிகாரிகள் மாற்றத்தின் போது சில குறிப்பிட்ட துறைகளுக்கு எந்த அதிகாரி நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பும் பரவலாக எழுந்தது. ஏனெனில் பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட செல்வாக்கு மிகுந்த துறைகளை கைப்பற்றுவதில் உயரதிகாரிகளிடையே போட்டியும் இருந்ததுதான் காரணம்.

அந்த வகையில் நேற்றும், இன்றும் சேர்த்து 31 துறைகளின் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். உயர்மட்ட அளவில் நடைபெற்ற இந்த பணியிடம் மாற்றத்தில், பள்ளிக்கல்வித்துறைக்கு நியமனம் செய்யப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரியைப் பார்த்துதான், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் நமக்கு அறிமுகமான அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ஆர்வமுடன் அவர் மனதில் பட்டதையெல்லாம் கொட்டினார்.

நீட் தேர்வு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே பள்ளிக்கல்வித்துறை பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள துவங்கிவிட்டது. தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள், அரசுப் பள்ளிகளைச் சேர்ந்தவர்களாகதான் இருக்கிறார்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில்தான் முறையே மெட்ரிக்குலேஷன் மற்றும் மத்திய அரசு கல்வி வாரியத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிக்கூடங்கள் உள்ளன.

மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்ஈ பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இணையாக அரசு பள்ளிக்கூடங்களின் கற்பிக்கும் திறன் இல்லை. தமிழக மாணவர்களிடையே நிலவும் ஏற்றத்தாழ்வுகளால், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளை அரசு பள்ளி மாணவர்கள் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் கற்பிக்கப்படும் தரம் உயர்ந்து வந்தாலும்கூட, மாணவர்களின் குடும்ப பின்னணி, அகில இந்திய அளவிலான போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கு மிகவும் சவாலாக உள்ளது.

இந்த அடிப்படை உண்மையை புரிந்து கொள்ளும் மனப்பான்மை உள்ள ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வந்தால்தான், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும், ஏழை, எளிய மாணவர்களின் அறிவாற்றாலை மேம்படுத்தவும் திட்டங்கள் இயற்ற முடியும். அந்தவகையில், கடந்த 10 ஆண்டுகளாக பள்ளிக்கல்வித்துறைக்கு மாணவர்களின் அறிவாற்றலுக்கு தகுத்தவாறு யோசிக்கக் கூடிய உயரதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் நீங்கலாக யாரும் நியமிக்கப்படவில்லை.

சபீதா ஐஏஎஸ் (ஓய்வு)

2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, சபீதா ஐஏஎஸ்.ஸை பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமித்தார். இந்தக் காலகட்டத்தில்தான் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக காரசாரமான விவாதம், சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பெரிய அளவில் நடைபெற்று வந்தது.

நீதிமன்ற படிக்கட்டுகளை எல்லாம் ஏறி இறங்கிய பின்புதான் சமச்சீர் கல்வித் திட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டது. அதிலும் பல்வேறு மாற்றங்களை செய்து அதிமுக அரசு அமல்படுத்தியது. அப்போது பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்தவர் சபீதா ஐஏஎஸ் அதிகாரி. அன்றைக்கு முதல்வர் செல்வி ஜெயலலிதாவோடு மிக நெருக்கமான அதிகாரியாக அவர் இருந்ததால், ஜெயலலிதா மறையும் வரை சபீதா சொன்னதே வேத வாக்கு என்பதுதான் பள்ளிக்கல்வித்துறையில் எழுதி வைக்காத சட்டமாக இருந்தது.

மேலும், 2016 ஆம் ஆண்டில் ஜெயலலிதா மறையும் வரை பள்ளிக்கல்வித்துறை செயலாளராகவே நீடித்து வந்த சபிதா ஐஏஎஸ், 2011 முதல் 2016 வரை 9 அமைச்சர்களோடு பணியாற்றியுள்ளார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்களோடு அணுசரணையாக செல்லாமல் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதத்தோடு செயல்பட்டதால், 2011 ஆம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்ராக நியமிக்கப்பட்ட என்ஆர்.சிவபதி முதல் அதற்கடுத்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சி.வி.சண்முகம், வைகைச் செல்வன், கே.சி.வீரமணி உள்பட 9 அமைச்சர்கள் சவீதா ஐஏஎஸ்.ஸோடு மல்லுக்கட்டிய நேரத்தில், அவர்கள்தான் அமைச்சர் பதவியை இழந்தார்களே தவிர, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதவியில் இருந்து சபீதா ஐஏஎஸ் மாற்றப்படவே இல்லை.

இப்படி சர்வ வல்லமையோடு திகழ்ந்த சபீதா ஐஏஎஸ், அதே ஆணவப்போக்கோடுதான் பள்ளிக்கல்வித்துறையில் உள்ள அதிகாரிகளையும் பந்தாடினார். அவரின் அதிகார திமிரால் பல அதிகாரிகள் மனஉளைச்சலுக்கு ஆளானதால், சபீதா பதவி வகித்த சுமார் 5 ஆண்டு காலமும் பள்ளிக்கல்வித்துறையின் தரம் தாழ்ந்துப் போகும் நிலைக்கு சென்றுவிட்டது. 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் குறுகிய காலமும் அதன்பிறகு 2013 ம் ஆண்டில் இருந்து 2017 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக சவீதா பணியாற்றிய காலம், இருண்ட காலம் என்றுதான் சொல்ல வேண்டும்.

உதயச்சந்திரன் ஐஏஎஸ்.

2017 ஆம் ஆண்டில் சபீதா மாற்றப்பட்ட பிறகு , உதயச்சந்திரன் ஐஏஎஸ் தான் பள்ளிக்கல்வித்துறையை சீர்ப்படுத்தி மேலும் பல்வேறு முன்னேற்ற திட்டங்களை செயல்படுத்த தொடங்கினார். இந்தியாவிலேயே தமிழக பள்ளிக்கல்வித்துறை முதல் இடத்தை நோக்கி சென்றது. ஆனால், ஆட்சியாளர்கள் அவரை தொடர்ந்து பணியாற்ற விடாமல் அவரை இடமாற்றம் செய்தனர். சென்னை உயர்நீதிமன்றம் தலையிட்ட போதும்கூட, உதயச்சந்திரன் ஐஏஎஸ்.ஸை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறையிலேயே செயல்பட அப்போதைய எடப்பாடி பழனிசாமி அரசு அனுமதிக்கவில்லை. அவருக்குப் பிறகு இரண்டு அதிகாரிகள் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டனர்.

 

ஒட்டுமொத்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் உதயச்சந்திரன் ஐஏஎஸ் பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட குறுகிய காலமே, பொற்காலமாக இருந்தது. 4 ஆண்களுக்குப் பிறகு மீண்டும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பள்ளிக்கல்வித்துறைக்கு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கல்வித்துறையில் அவருக்கு உள்ள தனித்த ஈடுபாட்டை, சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையராக இருந்த போது நிரூபித்திருக்கிறார். அதனை கருத்தில் கொண்டுதான் காக்கர்லா உஷா ஐஏஎஸ்.ஸை தேர்வு செய்து இருக்கிறார்கள் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அவர் பொறுப்பு வகித்த போது, சமுதாய கல்லூரி திட்டத்தை அறிமுகப்படுத்தினார். வளர்ந்து வரும் தொழிற்சாலைகளில் பணியாளர்களின் தேவைக்கு ஏற்ப, பள்ளி விடுமுறை காலங்களில் தொழில் திறன் வாய்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ள மாணவர்களுக்கு தொழிற் பயிற்சி திட்டத்தையும் அறிமுகப்படுத்தியவர் காக்கர்லா உஷா ஐஏஎஸ்.தான். தொழிற் பயிற்சி முடித்த மாணவர்களுக்கு உடனடியாக பிரபல நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்று தருவதிலும் ஆர்வமுடன் செயல்பட்டவர் அவர்.

அதுமட்டுமின்றி மாநகராட்சிப் பள்ளிகளில் மாணவ, மாணவியர் ஆங்கிலத்தில் சரளமாக பேசும் வகையில் ஸ்போக்கன் வகுப்புகளையும் முதல்முறையாக அறிமுகப்படுத்தியவர் காக்கர்லா உஷா ஐஏஎஸ்.தான். மாநகராட்சி பள்ளி மாணவர்களும் தனியார் பள்ளிகளுக்கு இணையான திறமைகளோடு வளர வேண்டும் என்பதற்காக, நடமாடும் நூலகம் உள்ளிட்ட பல்வேறு புதுமையான திட்டங்களை அறிமுகப்படுத்தி விளிம்பு நிலை மாணவர்களின் ஞானத்தை பெருக்க பெரிதும் பாடுபட்டார். இதையெல்லாம் கடந்து மனிதநேயத்தோடு, மாநகராட்சி மகளிர் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தி, பெண் குழந்தைகளின் பெற்றோர்களை நிம்மதியடைய வைத்தவர் காக்கர்லா உஷா ஐஏஎஸ்.

சென்னை ஆட்சியராக அவர் பணியாற்றிய போதும் அரசுப் பள்ளிகளின் தரம் உயர,  தனித்த அக்கறை எடுத்துக் கொண்டவர். அதையும் கடந்து அவரது மனிதநேயத்திற்கு சிறப்பான ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கடந்த 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த போது, தன்னார்வலர்களை ஒருங்கிணைப்பது, துணை ராணுவம் மற்றும் காவல்துறையினருடன் இணைந்து மீட்புப்பணிகளை துரிதப்படுத்தியது, நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொய்வின்றி சென்ற சேர முழுவீச்சில் பணியாற்றியது போன்றவற்றை சொல்லலாம்.

இப்படிபட்ட மனிதநேயம் கொண்ட காக்கர்லா உஷா ஐஏஎஸ், பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பள்ளிக்கல்வித்துறைச் சேர்ந்த அனைத்து அதிகாரிகளுக்கும் மகிழ்ச்சியான ஒன்றுதான். முதலமைச்சர் அலுவலகத்தின் முதன்மைச் செயலாளராக பணியை தொடங்கியுள்ள உதயச்சந்திரன் ஐஏஎஸ்.ஸின் கருத்தாக்கத்திற்கு சிறப்பான கதை, திரைக்கதை, வசனம் என எல்லாவற்றையும் மேற்கொள்ளும் திறமை கொண்டவர் என்பதும், துரிதமாகவும் செயல்படக் கூடிய அசாததிய திறமைப்படைத்தவர் காக்கர்லா உஷா ஐஏஎஸ்.

அவரின் பணிக்காலத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு முத்திரைகளை பதிக்கும் என்ற ஆழமான நம்பிக்கை எங்களுக்கு பிறந்திருக்கிறது. அதைவிட துறை அமைச்சருடனும், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடனும் முரண்டு பிடிக்காமல் அணுசரித்தும், அரவணைத்தும் செல்லும் மனப்பான்மையும் கொண்டவர் காக்கர்லா உஷா ஐஏஎஸ் என்பதால், வரும் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை சிறப்பானதொரு ஒரு பொற்காலத்தை நோக்கி செல்லும் என்பதில் யாருக்குமே துளியும் சந்தேகமே இல்லை என்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தார் பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர்.

காக்கர்லா உஷா ஐஏஎஸ்…..