Fri. Nov 22nd, 2024

திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தூத்துக்குடியில் முகாமிட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அவரின் கால் படாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் வகையில், கடந்த 15 நாட்களுக்கு மேலாக தூத்துக்குடி மாவட்டத்தில் பம்பரம் போல சுற்றி சுற்றி வருகிறார்.

கிராமம், கிராமமாகச் சென்று கொரோனோ தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரங்களை முடுக்கிவிட்டு வருகிறார், கனிமொழி எம்.பி. குறிப்பாக இளம் பெண்கள், முதியோர்கள் ஆகியோரைச் சந்தித்து, கொரோனோவில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது, தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பது பற்றியெல்லாம் பரிவோடு எடுத்துக் கூறுகிறார். சொந்த மகளைப் போல அக்கறையோடு பேசும் கனிமொழியின் வார்த்தைகளுக்கு காது கொடுக்கும் கிராம மக்கள், கனிமொழியின் ஒவ்வொரு வார்த்தைகளையும் மனதில் தாங்கிக் கொண்டு, கொரோனோவுக்கு எதிரான போருக்கு தயாராகி வருகின்றனர்.


கிராமங்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு செல்லும் கனிமொழி எம்.பி., கொரோனோ தொற்றுக்கான முன்னெச்சரிக்கை நடவடிகைகள் மட்டுமின்றி வேறு ஏதாவது உடற்கோளாறுகள் இருக்கிறதா? என்பதையும் மருத்துவப் பரிசோதனை மூலம் கண்டறிய எடுத்து வரும் நடவடிக்கைகள், கிராமப் புறப் மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. தூத்துக்குடியிலேயே தங்கியிருப்பதால், அந்த மாவட்ட மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் உடனுக்குடன் கிடைத்து விடுகிறது என்பதால், அந்த மாவட்ட திமுக நிர்வாகிகளும் கனிமொழி எம்.பி.யை கொண்டாடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்திற்கென்று இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த கீதாஜீவனும், திமுக மற்றும் அதிமுக அரசியலில் பழுத்த அரசியல் அனுபவம் கொண்டவருமான அனிதா ராதாகிருஷ்ணனும் போட்டி போட்டுக் கொண்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் செல்ல மகள் கனிமொழி எம்.பி., தூத்துக்குடியிலேயே முகாமிட்டு இருப்பதால், ஏழைகளின் குரல்கள் உடனடியாக அம்பலத்தில் ஏறி விடுகின்றன. எந்த கிராமத்தில் இருந்து அழைப்பு வந்தாலும் அதை காது கொடுத்து கேட்டு, உடனடியாக அந்த கிராமத்து மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய, இரண்டு அமைச்சர்களும் அரசு அதிகாரிகளை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


செல்வாக்குமிக்க 3 அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி மாவட்டத்திற்குள்ளேயே சுற்றி சுற்றி வருவதால், அரசு இயந்திரமும் 24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறது. கொடுந்தொற்று காலமான இந்த கொரோனோ காலத்தில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு கிடைத்த சிறப்பு போல வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்கவில்லை என்று சொல்லும் அளவிற்குதான், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு தனித்த சிறப்பு கிடைத்துள்ளது.


தூத்துக்குடியில் இரண்டு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கும் கனிமொழி எம்.பி., ஒரு வீட்டை அலுவலகமாக மாற்றி, காலை முதல் நள்ளிரவு வரை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே முழுசக்தியையும் பயன்படுத்தி வருகிறார் என்று பெருமையோடு கூறும் தூத்துக்குடி மாவட்ட திமுக நிர்வாகிகள், கனிமொழியின் மனிதநேயத்தையும் மெய்சிலிர்க்க விவரிக்கிறார்கள். கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் என இரண்டு அமைச்சர்கள் துத்துக்குடி மாவட்டத்தில் இருந்தாலும் கூட, கலைஞரின் மகளான கனிமொழியிடம் தங்கள் கோரிக்கைகளை, குறைகளை சொல்வதற்குதான் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களும், கிராம மக்களும் ஆர்வமாக உள்ளனர்.

பொதுமக்கள் கூறும் குறைகளை காது கொடுத்து கேட்பதில் கனிமொழி எம்.பி. காட்டும் சிரத்தையைப் பார்த்துதான், அவரிடமே நேரடியாக பேச திமுக தொண்டர்களும், கிராம மக்களும் அதீத ஆர்வம் காட்டுகிறார்கள். பெரிய குடும்பத்து பெண் என்ற பகட்டு இல்லாமல், சராசரி குடும்பத்து பெண் போலவே அவரது உடை,நடை, பாவனை எல்லாம் இருப்பதால்தான், ஆக்சிஜன் தயாரிப்புக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க ஆதரவு தந்த திமுக மீது, தூத்துக்குடி மாவட்டத்தில் குறிப்பிட்ட ஒரு பிரிவினரிடம் எழுந்த கோபம் கூட இப்போது தணிந்து இருக்கிறது.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு , உடல் ஊனமுற்றவர்களுக்கு தகுதியான அரசு வேலை கிடைத்திருக்கிறது என்றால், அதற்காக பெரிதும் பாடுபட்டவர் கனிமொழி எம்.பி என்பதை தூத்துக்குடி மக்கள் என்றைக்கும் மறக்க மாட்டார்கள்.

அதேபோல, அப்பாவி மக்களை குருவி சுடுவதைப் போல சுட்டுக் கொன்றவவர்கள் திமுக ஆட்சியில் கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்று கனிமொழி அளித்துள்ள உறுதிமொழியும் தூத்துக்குடி மக்களின் மனதில் பால் வார்த்துள்ளது என்று கூறும் திமுக நிர்வாகி, தூத்துக்குடி மாவட்ட மக்களின் வேதனைகளை தீர்த்து வைத்து கொண்டிருக்கும் கனிமொழி எம்.பி.க்கு, நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள ஒரு விஷயம்தான் அவரின் மனதை நன்கு அறிந்த திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு பெருத்த வருத்தத்தை தந்து கொண்டிருக்கிறது என்று கூறி பொடி வைத்து பேசினார், நல்லரசோடு தொடர்பில் இருக்கும் திமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.
தூத்துக்குடி வந்த நாள் முதல் இன்று வரை இங்கேயேதான் தங்கியிருக்கிறார். பக்கத்து

மாவட்டங்களில் உள்ள திமுக முன்னணி நிர்வாகிகள் கனிமொழி எம்.பி.யை தங்கள் மாவட்டத்திற்கு ஒருமுறை விசிட் அடித்து கொரோனோ தடுப்பு பணிகளை மேற்பார்வையிடுங்கள் என்று அழைத்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அவர்களின் அழைப்பை நாசூக்காக புறக்கணித்து வருகிறார் கனிமொழி. 40 நிமிட நேர பயணத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து கூட கனிமொழிக்கு அழைப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன.

ஆனால், தூத்துக்குடி மாவட்ட எல்லையை தாண்டிச் செல்ல கனிமொழி எம்.பி. ஏனோ தயக்கம் காட்டுகிறார். தென்மாவட்டங்களில் உள்ள திமுக முன்னணி தலைவர்களின் அழைப்பை ஏற்று தென் மாவட்டங்கள் முழுவதும் கனிமொழி சுற்றுப்பயணம் செய்தால், கொரோனோவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரங்கள் மட்டுமல்ல, திமுக சார்பில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகளும் இன்னும் வேகமெடுக்கும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள திமுக நிர்வாகிகள் உற்சாகமாக களப் பணியாற்றுவார்கள்.


திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், மதுரையோடு தனது அரசுமுறைப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பி விட்டார்.

திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ., உதயநிதி ஸ்டாலினும் சென்னையிலேயே சுற்றி சுற்றி வந்து கொரோனோ நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்கள். இப்படிபட்ட சூழ்நிலையில் தூத்துக்குடியில் முகாமிட்டிருக்கும் கனிமொழி எம்.பி.யை தென் மாவட்டங்களில் ஒரு ரவுண்ட் சுற்றி வர திமுக தலைமையே வேண்டுகோள் பிறப்பிக்கலாம்.

திமுக.வினரிடம் செல்வாக்கு மிக்க தலைவரை, தூத்துக்குடி மாவட்டத்திலேயே முடக்கிப் போட்டிருப்பதை பார்க்கும்போது தங்க கூண்டில் கிளி அடைக்கப்பட்டிருப்பதைப் போலதான் கனிமொழி எம்.பி.யின் நிலை இருக்கிறதோ என்ற சந்தேகம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து திமுக நிர்வாகிகளிடம் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. ஒரு நிமிடம் கூட சோம்பல் முறிக்காமல் ஓடியாடி மனிதநேயத்தோடு சேவையாற்ற தயாராக இருக்கும் கனிமொழி எம்.பி தென் மாவட்டம் முழுவதும் சுற்றி வந்தால், தென் மாவட்ட மக்களும் நிம்மதியடைவார்கள். திமுக நிர்வாகிகளின் ஆதங்கம், தலைமைக்கு எட்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி என்கிறார்கள் தூத்துக்குடி மாவட்ட திமுக முன்னணி நிர்வாகிகள்.