Sat. Nov 23rd, 2024

மனிதநேயப் பற்றாளரான தலைமைச் செயலளார் வெ.இறையன்பு ஐஏஎஸ், முதலமைச்சருக்கு பரிந்துரைக்க வேண்டும் எனன தன்னார்வலர்கள் உருக்கமான வேண்டுகோள்….

கொரோனோ முதல் அலை கடந்தாண்டு மார்ச் மாதம் தமிழகத்தில் பரவியபோது, அடுத்தடுத்து ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டன. இதனால், மாநிலம் முழுவதும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சென்னை உள்பட மாநிலம் முழுவதும் விளிம்பு நிலை மக்கள், வெளிமாநில, மாவட்ட கூலித் தொழிலாளர்கள் அன்றாடம் உணவின்றி தவித்தனர். அப்படிபட்ட நேரத்தில் தன்னார்வலர்கள் ஆயிரக்கணக்கானோர், உணவின்றி தவித்த மக்களுக்கு காலை, நண்பகல், இரவு என மூன்று வேளையும் உணவுகளை வழங்கினார்கள்.

ஆதரவற்றவர்களை தேடி தேடிச் சென்று உணவுகளை வழங்கியபோது, பல மாவட்டங்களில் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறிவிட்டதாக குற்றம்சாட்டி காவல்துறையினர் தன்னார்வலர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்தனர். ஆனாலும், தன்னார்வலர்கள், விளிம்பு நிலை மக்களின் துயரங்களை போக்க வேண்டும் என்பதை தலையாய கடமையாகக் கொண்டு தொடர்ந்து மக்கள் சேவையாற்றி வந்தனர். இதேபோல, சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் தன்னார்வலர்கள், உணவுகளை சமைத்து வழங்கியது ஒருபுறம் என்றால், ஏழைக்குடும்ங்களின் அன்றாட தேவைகளை சமாளிப்பதற்காக, அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களையும் மூட்டைகளாக கட்டி வழங்கினர்.

அப்போது உணவுப் பொருள்களை பெறுவதற்காக மக்கள், கூட்டமாக கூடியுள்ளனர். அந்தநேரங்களில் அங்கு வந்த காவல்துறையினர், உணவுப்பொருள்களை வழங்கிய தன்னார்வலர்களை, இதுபோன்று கூட்டம் சேர்க்கக் கூடாது என்று எச்சரித்ததுடன், மனிதநேயத்துடன் சேவையாற்றிய தன்னார்வலர்கள் மீது வழக்குகளையும் காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். இப்படி மாநிலம் முழுவதும் கடந்த கொரோனோ முதல் அலையின் போது மட்டும் ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தன்னார்வலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்…


அதுவும், திமுக தலைமையிலான ஆட்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தனித்துறைக்கு சிறப்பு அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டள்ள ஷில்பா பிரபாகர் சதீஷ், திருநெல்வேலி ஆட்சியராக இருந்த போதும், இதுபோன்ற வழக்குகள் நிறைய போடப்பட்டுள்ளன. கடந்தாண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக அவர் பணியாற்றியபோது, ஏழை எளிய மக்களுக்கு உணவுப் பொருள்களை வழங்குவதை ஒருபக்கம் ஊக்குவித்த போதும், ஊரடங்கு விதிமுறைக்கு மீறி இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவது குற்றமாகும். அதனால், சட்டத்திற்கு புறம்பாக நடைபெறும் எந்த நடவடிக்கையும் அமைதியாக வேடிக்கை பார்க்க முடியாது. எனவே, சட்டம் தன் கடமையை தவறாமல் செய்து கொண்டே இருக்கும். வழக்குகள் பதியபட்டாலும் கூட அதைப்பற்றி கவலைப்படாமல், மக்கள் சேவையை தொடர்ந்து செய்வதற்கு அரசாங்க நிர்வாகம் தடையாக இருக்காது என்று தனிப்பட்ட முறையில் கூறி, மனிதநேயமிக்க தன்னார்வலர்களை ஊக்கப்படுத்தியுள்ளார் ஐஏஎஸ் அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ்.

கடந்தாண்டு ஊரடங்கு காலத்தில் தன்னார்வலர்களின் மீது போடப்பட்ட வழக்குகளின் உண்மைத்தன்மையை முழுமையாக புரிந்து கொண்ட அவர், தற்போது முதலமைச்சரின் துறைக்கே சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்.ஸை விட பன்மடங்கு மனிதநேயமிக்க தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸிடம் தன்னார்வலர்களின் மனவேதனையை எடுத்துச் சொல்லி, அவர் மூலம் கடந்தாண்டு ஊரடங்கு காலத்தில் காவல்துறையால் போடப்பட்ட வழக்குகளை தமிழக அரசு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்கள் தன்னார்வலர்கள்.

மனிதநேயமிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலினின் அருகாமையிலேயே இருக்கும் இந்த நேரம்தான், தன்னார்வலர்களின் மீதான வழக்குகளை உடனடியாக திரும்ப பெறுவதற்கு சரியான தருணம் என்கிறார்கள் தன்னார்வலர்கள் ஆர்வமுடன்.

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது போடப்பட்ட வழக்குகளையே திரும்ப பெற் உத்தரவிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலினால், ஊரடங்கு கால வழக்குகளை ஒரு நொடியில் திரும்ப பெற உத்தரவு பிறப்பித்து விட முடியும் என்பதால், முதல்வரின் பரிசீலனைக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், இந்த வழக்கு விவகாரத்தை முன்வைக்க வேண்டும் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் தன்னார்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று முழங்கிய பேரறிஞர் அண்ணா வழியில் திமுக ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னார்வலர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி வைக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.