Sat. Apr 19th, 2025

உயிருக்கு பயந்துகொண்டு கண்ணாடி கூண்டுக்குள் அடைக்கலமான அவலக் கதையே கேட்போமா…

முதல்வர் பதவிக்கு கனவு கண்டார்.. புட்டுக்கிச்சி..
எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு ஆசைப்பட்டார். அசிங்கப்பட்டுப் போனார்.
தனிமரமாக இருக்கும் தன்னைச் சுற்றி, தானாக தோப்பு உருவாக வேண்டும் என்று திமிராக சுற்றுக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம் என்று, மனம் நொந்து பேசுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிர்ஷ்டக் காற்று அவர் பக்கம்தான் வீசியது. ஆனால், ஜெயலலிதாவை போல மக்களை கவர்ந்த தலைவர், தான்தான் என்று சதிராட்டம் செய்தார் ஓ.பன்னீர்செல்வம். விதி விளையாடிய ஆட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிர்ஷ்டவசமாக முதலமைச்சர் ஆனார். துணை முதல்வர் என்ற பதவியில் ஒட்டிக் கொண்டு நான்காண்டுகளில் செமையாக காசு பார்த்தார். கொள்ளையடித்த பணத்தில் பத்து பைசாவை கூட செலவழிக்காததால், ஒட்டுமொத்த விசுவாசிகளும் எடப்பாடி பழனிசாமியிடம் தஞ்சமடைந்தார்கள்.

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற தன் அன்பு மகன், பிரதமர் மோடி காலில் விழுவதை ரசித்தார். மத்திய அமைச்சர் பதவி தேடி வரும் என்று குடும்பமாக கனவு கண்டார்கள். எம்.பி.தொகுதி லெட்டர் பேடில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் போட்டோக்களை போடாமல் பிரதமர் மோடி படத்தை அச்சடித்த போதும் டெல்லி கோட்டை திறக்கவில்லை. மத்திய அமைச்சர் பதவி கானல் நீராகிப் போனது.

பதவியில் இருந்த காலத்தில் தேனி மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி தென் மாவட்ட மக்களையும் புறக்கணித்தார். தங்களுக்கும் ஒரு காலம் வரும் காத்திருந்த பொதுமக்கள், சட்டமன்றத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக பொங்கி எழுந்தனர். பிரசாரத்திற்கு கூட செல்ல முடியாமல் தவித்துப் போனார் ஓ.பன்னீர்செல்வம்.

சொந்த கட்சியினரும் கைவிட்ட நிலையில், தென் மாவட்ட மக்களும் கை கழுவியதால் தனிமரமாகிப் போனார் ஓ.பன்னீர்செல்வம்.
சாதிச் செல்வாக்கை அஸ்திரமாக்கி எதிர்க்கட்சித்தலைவர் பதவிக்கு குறி வைத்தார். மனோஜ் பாண்டியனைத் தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கே ஜெ.. போட்டனர். ஆத்திரத்தில் நிதானம் இழந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் இருந்து வெளியேறி வீம்பு காட்டினார் ஓ.பன்னீர்செல்வம்.

செல்வி ஜெயலலிதாவின் லட்சியமான அதிமுக சிதைந்து விடக் கூடாது என்ற கொள்கைப் பிடிப்போடு ஈகோ பார்க்காமல் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் வீடி தேடிச் சென்று வாழ்த்துப் பெற்றார். அப்போதும் கூட எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் ஒட்டுமொத்த எம்.எல்.ஏ.க்களும் அணிவகுத்து நின்றனர்.

அதிமுக செயற்குழுவைக் கூட்டி, பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்ற திட்டம் போட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் வாரிசு தான்தான் என்பதை நிரூபிக்க, புதிது புதிதாக வேஷம் கட்டுகிறார் ஓ.பன்னீர்செல்வம். முன்னாள் முதலமைச்சர் என்ற பதவியை தூக்கிப் பிடிக்கிறார். அரியணையில் திமுக அமர்ந்துவிட்டதே என்று அதிமுக நிர்வாகிகள் குமைச்சலில் பொங்கிக் கொண்டிருக்க, முதல் ஆளாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி அறிக்கை வெளியிடுகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஒருங்கிணைப்பாளரும், துணை ஒருங்கிணைப்பாளரும் ஒருங்கிணைந்து கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக தனித்து அறிக்கைகளை வெளியிட்டு அத்துமீறுகிறார் ஓ.பி.எஸ். வழிகாட்டுதல் குழு முன் வைக்கும் ஆலோசனைகளை கேட்க மறுக்கிறார். இ.பி.எஸ் உள்ளிட்ட நிர்வாகிகளின் வேண்டுகோளுக்கு அடங்காமல், தேனியில் போய் அமர்ந்து கொண்டு அரசியல் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

தனது வீட்டில் தனக்கு முன்னாள் கண்ணாடியிலான தடுப்பு வேலியை அமைத்துக் கொண்டு அதிமுக நிர்வாகிகளை சந்திக்கிறார். உயிர் பயத்தால், அதிமுக நிர்வாகிகளையே கண்ணாடி தடுப்புக்கு அந்த பக்கம் அமர வைத்து பேசி அனுப்பும் ஓ,பி.எஸ்., அதிமுக எனும் இரும்புக் கோட்டைக்கு எப்படி தலைவராக முடியும் என்று ஆவேசமாக கேள்வி கேட்கிறார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.

சொந்த பிரச்னைக்காகவா அவரை தேடி வருகிறோம். பொதுமக்கள் பிரச்சனை, கட்சி விவகாரம் பற்றிதானே பேச வருகிறோம். எங்கள் உயிர் ஓ.பி.எஸ்.ஸுக்கு இளக்காரமாக போய்விட்டதா…அவர் உயிரு அவ்வளவு உசத்தியா.. அவருக்கு உயிர்ப்பயம் இருப்பதை போலதானே எங்களுக்கும் உயிர் மேல் ஆசை இருக்கும். போன் பண்ணி அனுமதி கேட்கும்போதே பிரச்னை தீரும் வகையில் பதில் சொல்ல வேண்டியதுதானே. அதற்குப் பதிலாக நேரில் வரச் சொல்லிவிட்டு, கண்ணாடி தடுப்புக்கு அந்தப்பக்கம் ஓ.பி.எஸ். அமர்ந்து கொண்டு எங்களை மணிக்கணக்கில் பேச சொல்லி கேட்கிறார்.

பொதுச்சேவைக்கு வந்துவிட்டால் உயிர் பயம் இருக்கக் கூடாது. மக்களோடு நெருங்கிப் பழகுகிற குணம். அதைவிட்டுவிட்டு தீண்டாமை சுவர் போல ஓ.பி.எஸ். வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் கண்ணாடி தடுப்புச் சுவரைப் பார்த்தாலே ஆத்திரம் ஆத்திரமாக வருகிறது. ஓ.பி.எஸ்.ஸை தேடிச் செல்வதையே அவமானமாக கருதுகிறோம் என்று கொந்தளிக்கிறார்கள் தேனிச் சென்று திரும்பும் அதிமுக நிர்வாகிகள்…