Sat. Nov 23rd, 2024

பிரதமர் மோடியுடனான கலந்துரையாடல் கூட்டம் என்பது ஒரு வழிப்பாதையாகவே இருக்கிறது. அவர் பேசுவதை மட்டுமே மாநில முதல்வர்கள் கேட்க வேண்டுமே தவிர, மாநில முதல்வர்கள் கூறும் ஆலோசனைகளை காது கொடுத்து கேட்கவே மோடி அனுமதிப்பதில்லை. ஒரே நாடு என்று கூறுவது அனைத்து மாநில முதல்வர்களையும் அவமானப்படுத்தும் செயல் என்று ஆவேசமாக கூறியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

கோவிட் பாதிப்பு குறித்து பத்து மாநிலங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக பிரதமர் மோடி கலந்துரையாடினார். பிரதமரின் இந்த கூட்டம் குறித்து கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி.

பிரதமர் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக உணருகிறாரா? மாநில முதல்வர்களின் ஆலோசனைகளை கேட்பதற்கு பிரதமர் ஏன் தயாராகவில்லை. முதலமைச்சர்களின் கருத்துகளை கேட்க விருப்பம் இல்லை என்றால் எதற்காக முதலமைச்சர்களுடனான ஆய்வுக் கூட்டத்தை கூட்ட வேண்டும். மாவட்ட ஆட்சியர்களுடனான கலந்துரையாடல் என்பது அந்தந்த மாநில முதல் அமைச்சர்களை அவமானப்படுத்தும் செயல் அல்லவா

மாநிலத்தில் தேவையான அளவிற்கு படுக்கை வசதிகளுடன் கூடிய சிகிச்சை மையம் இருக்கிறதா, ஆக்சிஜன் இருக்கிறதா, தடுப்பூசி இருக்கிறதா என்பது பற்றி பிரதமர் கேட்பதே இல்லை. மாநிலத்தின் தேவைகள் குறித்து நிறைய பேசுவதற்காக தயாராக தான் இருந்ததாகவும் ஆனால் அதற்கு பிரதமர் அனுமதி வழங்கவே இல்லை என்றும் மம்தா ஆவேசமாக தெரிவித்தள்ளார்.

பிரதமரின் செயல் நாகரிகமற்ற முறையில் இருந்தது. நிறைய மாநில முதலமைச்சர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், ஒருத்தரை கூட பேச அனுமதிக்காதது எவ்வளவு அராஜகமான நடவடிக்கையாக இருக்கும். நாங்கள் என்ன கொத்தடிமைகளா அல்லது கோமாளிகளா. மத்திய அரசு, மாநில சுயாட்சி கட்டமைப்பையும், கூட்டாட்சி தத்துவத்தையுமே சிதைக்கப் பார்க்கிறது.

இவ்வாறு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.