Thu. Apr 25th, 2024

அதிமுக.வுடன் கூட்டணி அமைத்து 20 சதவிகித அளவுக்குக் கூட பாமக தொகுதிகளை கைப்பற்றாத போதும், வழக்கமாக பாடும் பல்லவியை பாமக நிறுவனர் ராமதாஸ்., இந்த முறை பாடவில்லை. ஒரு கட்சியோடு கூட்டணி அமைத்துப் போட்டியிடும் போது, தோல்வியைச் சந்திக்க நேரிட்டால், கூட்டணிக்கு தலைமை வகித்த கட்சியை கரித்துக் கொட்டுவது அவரின் கடந்த கால தேர்தல் வரலாறு.

ஆனால், தற்போதைய தேர்தல் தோல்வி குறித்து அதிமுக.வுக்கு எதிராக எந்தவொரு விமர்சனத்தையும் முன்வைக்காத மருத்துர் ராமதாஸ், மே 7 ஆம் தேதி புதிதாக அரியணையில் அமர்ந்த திமுக.வுக்கு எதிராகவோ, முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராகவோ எந்த விமர்சனத்தையும் முன்வைக்கவில்லை. ஆனால், அதற்கு மாறாக ஆளும்கட்சிக்கு ஆக்கப்பூர்வமான யோசனையை கூறும் எதிர்க்கட்சிப் போல செயல்பட்டு வருகிறார் ராமதாஸ்.

திமுக அரசை பாராட்டவும் தயங்க மாட்டார் என்பதற்கு கடந்த சில நாட்களாக அவர் போடும் டிவிட்டர் பதிவுகளும் காரணங்களாக அமைந்துள்ளன. அந்தவகையில், ஊரடங்கை வரவேற்றார். மருத்துவர், செவிலியர்களுக்கான ஊக்கத்தொகை அறிவிப்பை பாராட்டியுள்ளார்.

அதற்கு மேலாக, வன்னியருக்கான தனி உள் ஒதுக்கீட்டை அமல்படுத்தும் வகையில் திமுக அரசு மேற்கொண்ட ஒரு நடவடிக்கையாலும் புளாங்கிதம் அடைந்து போய்விட்டார் பாமக நிறுவனர் ராமதாஸ்..

மருத்துவர் ராமதாஸின் டிவிட்டர் பக்கம், மே 7 ஆம் தேதிக்குப் பிறகு வெறுப்பரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பண்பட்ட அரசியலுக்கு பாதை வடிவமைப்பதைப் போல மாறியிருக்கிறது என்கிறார்கள் பாமக முன்னணி நிர்வாகிகள்….