Sat. Nov 23rd, 2024

திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் உள்பட அக்கட்சியினர் போட்டியிடும் 5 தொகுதிகளில் சட்டமன்றத் தேர்தலை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவிடம் அ.திமு.க மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மனு கொடுத்துள்ளார்..

தமிழக சட்டமன்றத்திற்கு நாளை காலை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் பாபுமுருகவேலு ஆகியோர் இன்று காலை தலைமைச் செயலகத்தில் உள்ள தமிழக தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து தி.மு,கவுக்கு எதிராக புகார் கொடுத்தனர்.
,
அந்த மனுவில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதி, பொதுச்செயலாளர் துரைமுருகனின் காட்பாடி, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு போட்டியிடும் திருச்சி மேற்கு, எ.வ.வேலு போட்டியிடும் திருவண்ணாமலை ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கப்படுவதாக புகார் கூறியிருந்தனர். தேர்தல் நடத்தைகளுக்கு மாறாக 5 தொகுதிகளிலும் பணம் விநியோகிகப்பட்டுள்ளது வீடியோ ஆதாரங்கள் மூலம் தெரிய வருவதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்றும் புகாரில் வலியுறுத்தியிருந்தனர்.

மேலும், முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையை சுட்டிக்காட்டியுள்ள அதிமுக, எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து ரூபாய் 25 கோடி கண்டறியப்பட்டதாகவும், அந்த தொகை முழுவதும் வாக்காளர்களுக்கு வழங்கி வாக்குகளை விலைக்கு வாங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த பணம் என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்காளர்களுக்கு பணபரிமாற்றத்திற்கான கூகுள் பே வசதி வழியாகவும் நவீன முறையில் பணம் கொடுக்கப்பட்டுள்ளதற்கான ஆதாரமும் புகாரில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், வாக்குக்கு பணம் தரும் கலாச்சாரத்தை முதல் முறையாகத் திருமங்கலம் இடைத்தேர்தலில்தான் திமுக அறிமுகப்படுத்தி வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியது. அதே நடைமுறையை இந்த தேர்தலிலும் அவர்கள் கடைபிடித்துள்ளனர். திமுக எவ்வளவு பணம் செலவு செய்தாலும் சரி, அதிமுகதான் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெறும். அதில் மாறுபட்ட கருத்துக்கே இடம் கிடையாது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பிரபல தனியார் தொலைக்காட்சி, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை புறக்கணித்துவிட்டு பிரச்சாரம் , கருத்துக்கணிப்புகளை தொடர்ந்து வெளியிட்டுவருகிறது. இது தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு சவால் விடும் வகையிலான நடவடிக்கை. எனவே அந்த தொலைக்காட்சி மீது உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

அதிமுக.வின் புகாரால் 5 தொகுதிகளில் தேர்தல் ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அதிமுக வட்டாரத்தில் எழுந்துள்ளது.