Sat. May 18th, 2024

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், பிரசாரம் செய்யும் இடங்களில் எல்லாம் அதிமுக மற்றும் திமுக.வுக்கு எதிராக கடுமையான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். ஆனால், கள நிலவரமோ, அதற்கு முற்றிலும் மாறாக இருக்கிறது. அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுவிடாது. அதற்காக திமுக.வுக்கு ஆதரவாக கூட செயல்படலாம் என ரகசிய உத்தரவு, சென்னையில் இருந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள் அமமுக முக்கிய நிர்வாகிகள்.

சென்னையில் பெரும்பலான தொகுதிகளில் அமமுக வேட்பாளர்கள் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டதை உன்னிப்பாக கவனித்து வரும் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர், நமக்கு கிடைத்த ரகசிய தகவலை உண்மைதான் என அடித்துக் கூறுகிறார். அவரிடம் பேசினோம். ராயபுரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் வெற்றி வாய்ப்பு நாளுக்கு நாள் பிரகாசமாக மாறி வருகிறது. அவரை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஐ ட்ரீம் மூர்த்தி, முதல் சுற்றிலேயே மூச்சிரைத்து விட்டார். அவருக்கு தெம்பு கொடுக்கும் வகையில், அமமுக வேட்பாளர் சிபி ராமஜெயம், குக்கருக்கு ஓட்டுப் போடவில்லை என்றாலும் பரவாயில்லை, இரட்டை இலைக்கு ஓட்டுப் போடாதீர்கள். திமுக.வுக்கு ஆதரவு தாருங்கள் என அமமுக.வினரிடம் வெளிப்படையாக கூறி வருகிறாராம்.

இதேபோல, சென்னை மாவட்டத்தில் அதிமுக.வை நேரடியாக எதிர்க்கும் திமுக போட்டியிடும் தொகுதிகளில் அதிமுக.வை வீழ்த்த, நேரடியாகவே திமுக.வுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்களாம் அமமுக வேட்பாளர்கள். இதேபோல, மாநிலம் முழுவதும் அதிமுக போட்டியிடும் தொகுதிகளில், ஆளும்கட்சியை வீழ்த்த அமமுக வேட்பாளர்கள் வியூகம் வகுத்து கடைசி நேர யுத்தத்திற்கு தயாராகிவிட்டனர்.

அமமுக மற்றும் தேமுதிக.வுக்கு நேரடி எதிரி திமுக. கிடையாது. அதிமுக.தான் என்று கூறும் சென்னை மாவட்ட அமமுக முக்கிய நிர்வாகி, ஒவ்வொரு தொகுதிகளிலும் அமமுக.விற்கு உள்ள 5 ஆயிரம் வாக்குகளில் பாதிக்கு மேல் திமுக வேட்பாளருக்கு இந்த முறை போட வேண்டும் என நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறோம். அவர்களும் எங்களைப் போலவே, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக் கூடாது என்று வெறியாகதான் வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினார்.

இதேபோல், முதல்வர் பழனிசாமி மாவட்டமான சேலத்திலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என்று தேமுதிக மற்றும் அமமுக.வினர் இணைந்து மறைமுகமாக திமுக.வுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர் என்கிறார் சேலத்தில் உள்ள திமுக நிர்வாகி.

வீரபாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக. வேட்பாளர் மருத்துவர் தருணன் வெற்றிப் பெற வேண்டும் என்ற இலக்கில், அமமுக வேட்பாளர் எஸ்.கே.செல்வம் அடக்கியே வாசிக்கிறாராம். அவருக்கு உறுதுணையாக தற்போதைய தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.மனோன்மணியும், திமுக வேட்பாளர் வெற்றிக்காகதான் பாடுபட்டு வருகிறராம்.

சேலத்தில் உள்ள மூன்று தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் அதிமுக.வும் ஒரு தொகுதியில் பாமக.வும் போட்டியிடுகிறது. இந்த மூன்று தொகுதிகளிலும் போட்டியிடும் அமமுக, தேமுதிக வேட்பாளர்கள், திமுக வெற்றிப் பெற்றாலும் பரவாயில்லை, அதிமுக.வும் பாமக.வும் வெற்றிப் பெற்றுவிடக் கூடாது என பகிரங்கமாகவே பிரசாரம் செய்கிறார்களாம்.

அதுவும் தேமுதிக.வின் பொருளாளரான அழகாபுரம் மோகன் ராஜ், தனது தொகுதிக்குட்பட்ட எந்த பகுதியிலும் தேர்தல் பணிமனையே திறக்கவில்லையாம். முதல் சுற்றுப் பிரசாரத்தை தொடங்கிய காலத்திலேயே கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்டவர், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாராம்.

இதைப்போலவே, ஏற்காடு, ஆத்தூர், கெங்கவள்ளி, ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய தொகுதிகளிலும் அமமுக.வினர் அடக்கி வாசித்து, திமுக வேட்பாளர்கள் மற்றும் காங்கிரஸ் வேடபாளர்களின் வெற்றிக்கு உதவி வருகிறார்களாம்.

முதல்வர் பழனிசாமி போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் சம்பத்குமார் போட்டியிடுகிறார். அங்கு அமமுக சார்பில் போட்டியிடும் பூக்கடை சேகர், தனது கட்சியினரிடம், இந்த தேர்தலில் அமமுக வெற்றிப் பெறுவதற்கான வாய்ப்பு துளி கூட இல்லை. எனவே, நம்முடைய வாக்குகளை வீணடிக்க வேண்டாம். அதனால், திமுக வேட்பாளர் சம்பத்குமாருக்கு அப்படியே போட்டு விடுங்கள்.

எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதுதான் நமது லட்சியமாக இருக்க வேண்டும். பழனிசாமியும், அதிமுக.வும் அழிந்ததால்தான் சசிகலாவுக்கும் டிடிவி தினகரனுக்கும் மறுவாழ்வு கிடைக்கும். அப்போதுதான், நமக்கு எல்லாம் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். தப்பித்தவறி அதிமுக.வும், எடப்பாடி பழனிசாமியும் வெற்றிப் பெற்றால், சசிகலா, தினகரனின் எதிர்காலம் இருண்டு போவதுடன், அரசியலில் நமக்கும் முகவரி இல்லாமல் ஆகிவிடும். இந்த தேர்தல் நம்மை பொறுத்தவரை வாழ்வா, சாவா போராட்டம் போல..அதனால் உஷாராக பணியாற்றுங்கள் என்று அழுத்தமாக கூறி வருகிறாராம்.

கூடவே, தேமுதிக நிர்வாகிகளுக்கும் கட்டளையிட்டு இருக்கிறாராம். அமமுக.வை சசிகலாவை நம்ப வைத்து கழுத்து அறுத்ததைப் போலதான் தேமுதிக.வையும் பிரேமலதாவையும் கூட்டணி பேச்சுவார்த்தையின் கடைசி நிமிடம் வரை காக்க வைத்து கழுத்து அறுத்துவிட்டார் பழனிசாமி. இருவருக்கும் பொதுவான எதிர் எடப்பாடி பழனிசாமிதான். இரண்டு கட்சியையும் ஒற்றுமையுடன் பணியாற்றினால், இரண்டு கட்சிகளுக்குமான வாக்குகள் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை அப்படியே உதயசூரியனுக்குதான் விழும் என்கிறார் எடப்பாடி அமமுக நிர்வாகி ஒருவர்.

ஏப்ரல் 6 ம் தேதிக்குள் என்ன என்ன கூத்துகள் எல்லாம் நடக்க இருக்கிறதோ…