முதல்வர் பழனிசாமிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் இடையேயான தனிப்பட்ட மோதல் போக்கு, தேர்தல் பிரசாரத்தில் நாளுக்கு நாள் சூட்டைக் கிளம்பிக் கொண்டே போகிறது. இருவருக்கும் இடையே ரகசிய கூட்டணி இருக்கிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இருந்து கிளப்பிவிடும் அவதூறுகளால், அண்ணா அறிவாலயத்திலேயே சலசலப்புகள் அதிகரிக்க தொடங்கிவிட்டன. பிரசாரத்தின் போது இருவரும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டாலும், மறைமுகமாக இருவருக்கும் இடையே கருத்துப் பரிமாற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பதுதான் கடந்த பல நாட்களுக்கு முந்தைய ஹாட் நியூஸ்..
அதன் வெளிப்பாடுதான், அதிமுக.வின் முன்னணி அமைச்சர்கள், ஓ.பன்னீசெல்வம், எஸ்.பி.வேலுமணி, நீங்கலாக மற்ற அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக சார்பில் டம்மி வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர் என்ற விமர்சனம், பொது தளங்களிலும், அச்சு ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் றெக்கை கட்டி பறக்கின்றன. அதுவும், அதிமுக.வின் முதலமைச்சர் வேட்பாளரான பழனிசாமிக்கு எதிராக அவரது சொந்த தொகுதியான எடப்பாடியில் திமுக சார்பில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள சம்பத்குமாரைப் பார்த்து, எடப்பாடி திமுக.வினரே பிரமிப்புக் கொள்ளவில்லை.
படைபலத்தில், பணப் பலத்தில் ஜீரோவான சம்பத்குமாரால், எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து டெபாசிட் கூட வாங்க முடியாது என்று எடப்பாடி திமுக.வினரே அண்ணா அறிவாலயத்திற்கு புகார் மனுக்களை பறக்க விட்டனர். வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு கிளம்பிய எதிர்ப்புக் கடிதங்கள் அண்ணா அறிவாலயத்திற்கு வந்தபோதும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அலட்டிக் கொள்ளவில்லை.
1996 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலை நினைவூட்டி, பர்கூரில் போட்டியிட்ட அப்போதைய முதல்வர் செல்வி ஜெயலலிதாவை, இளம் வயது வேட்பாளரான சுகவனம் வீழத்தவில்லையா?. அந்த வெற்றியை பற்றி திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி கூறும்போது, யானையை சிறிய எறும்பு காதில் புகுந்து வீழ்த்திவிட்டது எனறு கூறிய உவமையைக் கூட சொல்லி, எடப்பாடி வேட்பாளருக்கு எதிராக பேசியவர்களை வாயடைக்க வைத்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
ஆனால், வேட்பாளர் அறிவிக்கப்பட்டு 15 நாட்களுக்கு மேலானப் பிறகும் எடப்பாடி தொகுதி முழுவதும் திமுக வேட்பாளர் சம்பத்குமாரின் பெயரே பிரபலமாகவில்லை என்ற தகவல் கிடைத்ததும் நொந்துப் போய்விட்டார் மு.க.ஸ்டாலின்.
கடந்த 23 ம்தேதி இரண்டாம் கட்ட பிரசாரத்திற்காக சேலம் சென்றிருந்தபோது, எடப்பாடி தொகுதிக்குட்பட்ட மேற்கு மாவட்ட திமுக செயலாளர் டி.எம்.செல்வகணபதியிடம் கடுமையான குரலில், எடப்பாடி பழனிசாமியை எளிதாக வீழ்த்திவிடுவார் சம்பத்குமார். அதற்கு நான் உறுதி என்று கூறி, அவரை வேட்பாளராக அறிவிக்க சொன்னீர். ஆனால், எடப்பாடி தொகுதிக்குட்பட்ட எந்த பகுதியிலும் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக வேட்பாளர் போட்டியிடுகிறார் என்ற சலசலப்பு கூட உருவாகவில்லை என்ற தகவல் எனக்கு கிடைத்திருக்கிறது.
எடப்பாடியில் திமுக தோற்றால், உங்களுக்கு அசிங்கம் இல்லை. எனக்குதான் அசிங்கம். திமுக.வுக்கும் அசிங்கம். திமுக அரிதி பெரும்பான்மைக்கு மேல் தொகுதிகளை வென்று ஆட்சி அமைத்தால் கூட, எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்திற்கு வந்துவிட்டால், இந்த தேர்தலில் திமுக பெற்ற வெற்றிக்கு ஒரு மரியாதையே இருக்காது என கடுமை காட்டியதாகவும் தகவல் உண்டு.
அதன்பிறகு 7 நாட்கள் ஆகியும், எடப்பாடியில் சம்பத்குமாரின் செல்வாக்கு, பொதுமக்களிடம் மட்டுமல்ல, திமுக.வினரிடமும் அதிகரிக்கவில்லை என்ற தகவல் மு.க.ஸ்டாலினுக்கு நாள்தோறும் கிடைத்துக் கொண்டிருந்த நேரத்தில், அவரை மேலும் சீற்றம் கொள்ளும் வகையில், தான் போட்டியிடும் சொந்த தொகுதியைப் பற்றி துளியும் கவலையின்றி பிற தொகுதிகளில் துணிச்சலாக பிரசாரம் செய்யும் முதல்வர் இ.பி.எஸ்., திமுக.வுக்கு எதிராகவும் குறிப்பாக தன்னைப் பற்றியும், தனது தந்தையும், மறைந்த திமுக தலைவர் மு.கருணாநிதியைப் பற்றியும், தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்யும் வகையில் பிரசார வியூகத்தை மாற்றிக் கொண்டததை கண்டுதான் மு.க.ஸ்டாலின் ஆவேசமாகி விட்டாராம்.
அதுவும், பழனிசாமி தாயார் பற்றி ஆ.ராசா செய்த விமர்சனமும், திமுக.வின் வெற்றி வாய்ப்பை பாதித்துவிடும் என்று மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமான ஊடகவியலாளர்கள் சிலர் கவலையோடு கூற, வெற்றிக் கோட்டை நெருங்கும் நேரத்தில், திமுக.வுக்கும், தனக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடியை உணர்ந்துகொண்டுள்ள மு.க.ஸ்டாலின், தன்னை மீறி எடப்பாடி பழனிசாமி எப்படி தேர்தலில் வெற்றி பெற்று விடுகிறார் என்று பார்க்கிறேன் என சூளுரைத்தாரம்.
அவரின் சூளுரையின் அதிர்வுகளை உடனடியாக பார்க்கத் தொடங்கிவிட்டது எடப்பாடி என்கிறார்கள் அவருக்கு நெருக்கமான திமுக நிர்வாகிகள். சேலத்தில் மார்ச் 28 ஆம்தேதி( நேற்று) மாலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மற்றும் கூட்டணித் தலைவர்கள் கலந்துகொண்ட பிரசார பொதுக்கூட்டத்தை முடித்த கையோடு, பிரசார பயணத்தில் இல்லாத எடப்பாடி தொகுதிக்கு முன்னறிவிப்பு இன்றி கிளம்பினார் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள், அவரது பயணத்தை பதிவு செய்து வரும் மூத்த ஊடகவியலாளர் ஒருவர்.
மாலை 6 மணியளவில் சேலத்தில் பொதுக்கூட்டம் முடிந்தவுடன், மேற்கு மாவட்ட டி.எம்.செல்வகணபதியை அழைத்து, எடப்பாடி தொகுதிக்கு போகலாம் என்று மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், மறுபேச்சு பேசாமல் அலறியடித்துக் கொண்டு மேடையில் இருந்து இறங்கி, அதே பகுதியில் தனியாக அமைக்கப்பட்டிருந்த வேட்பாளர் மேடைக்குச் சென்று அங்கு நின்றுக் கொண்டிருந்த எடப்பாடி திமுக வேட்பாளர் சம்பத்குமாரை என் பின்னால் ஓடி வா என்று கூறி இருவரும் மு.க.ஸ்டாலினின் பிரசார வாகனத்திற்கு ஓடியிருக்கிறார்கள்.
கூடவே சேலம் திமுக எம்.பி.பார்த்திபனும் ஓடியிருக்கிறார். மூவரின் ஓட்டத்தைப் பார்த்து, அங்கிருந்த எடப்பாடி திமுக நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து அவர்களை நோக்கி வருவதற்குள், மூன்று பேரையும் ஏற்றிக் கொண்டு மு.க.ஸ்டாலினின் பிரசார வாகனம் பறந்துவிட்டது.
சேலத்தில் இருந்து 54 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள எடப்பாடிக்கு மு.க.ஸ்டாலின் வாகனம் பயணம் செய்து கொண்டிருந்த அந்த 30 நிமிட நேரத்தில், எடப்பாடி தொகுதியின் நிலவரத்தை ஸ்கேன் செய்ததைப் போல ஸ்டாலின் பேச, பேச, டி.எம்.செல்வகணபதியும், சம்பத்குமாரும் மூச்சடைத்துவிட்டார்களாம். அதற்குள் எடப்பாடி தொகுதியின் நுழைவுப் பகுதியான கொங்கனாபுரம் ஊர் வந்தவுடன் மாலை 6.40 மணியளில் திடுதிடுப்பென மு.க.ஸ்டாலின் இறங்கி நின்றதைப் பார்த்து, அங்கிருந்த பொதுமக்கள் திகைப்படைந்தனர்.
நான்கு சாலை பிரிவு கொண்ட அந்த சந்திப்பில் சிறிதுதூரம் நடந்து சென்று உதயசூரியனுக்கு மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்துள்ளார். அவருடன் ஓட்டம் நடையுமாக பின்தொடர்ந்த டி.எம்.செல்வகணபதியும், சம்பத்குமாரும் அதிர்ச்சி கலந்த திகைப்புடன், தலைவர் அடுத்து என்ன செய்வார் என்ற தவிப்புடனேயே இருந்திருக்கிறார்கள்.
அங்கு வாக்கு சேகரித்தப் பிறகு மீண்டும் வாகனத்தில் ஏறி, 10 நிமிடப் பயணத்தில் எடப்பாடி நகரின் நுழைவுப் பகுதியான வெள்ளாண்டி வலசுவில் மீண்டும் இறங்கியிருக்கிறார், மு.க.ஸ்டாலின். அங்கே சாலையோர கடையில் அமர்ந்து தேநீர் பருகியதை கண்டு அப்பகுதி மக்கள் வியப்படைந்தனர். அதே பகுதியில் கடை வீதியில் சிறிதுதூரம் நடந்து சென்று வாக்கு சேகரித்திருக்கிறார். அங்கிருந்து எடப்பாடி கடை வீதி, பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளிலும் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரித்திருக்கிறார்.
திடுதிடுப்பென ரோட்டில் நடந்தவாறே மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தைக் கண்டு அங்கிருந்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்திருக்கின்றனர். அவரின் வாக்குசேகரிப்பு புகைப்படங்கள் வாட்ஸ் அப் மூலம தொகுதி முழுவதும் தீயாக பரவியிருக்கிறது.
எடப்பாடிக்கு பிரசாரத்திற்காக திமுக தலைவர் எப்போது வருவார் என்று உள்ளூர் திமுக நிர்வாகிகள் எதிர்பார்ப்போடு காத்திருந்த நேரத்தில், எந்தவிதமான விளம்பரமும் இன்றி இரவு நேரத்தில் எடப்பாடி வீதிகளில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடந்து செல்கிறார் என்ற தகவலை கேட்ட அங்கிருந்த ஒரு சில திமுக.வினரே நம்பவில்லையாம். இளைஞர்கள் பைக் உள்ளிட்ட வாகனத்தில் பறந்து சென்றதால் ஏற்பட்ட பரபரப்பை பார்த்தே திமுக நிர்வாகிகளும் பின்தொடர்ந்து, மு.க.ஸ்டாலின் பிரசாரத்தில் இணைந்துள்ளனர்.
வீதிகளில் நடந்தவாறு சம்பத்குமாருக்கு வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலினைப் பார்த்து, எடப்பாடி திமுக கூட்டணி கட்சியினர் மட்டுமல்ல, அதிமுக.வினரும் ஆடிப் போயிருக்கிறார்கள். சின்ன தெருக்கள் வழியாக எல்லாம் நடந்து சென்று மு.க.ஸ்டாலின், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்ததால், எடப்பாடி நகரமே நேற்றிரவு பரபரப்பாகிவிட்டது.
எடப்பாடியில் மு.க.ஸ்டாலின் வீதியில் நடந்து வாக்கு சேகரிக்கிறார் என்ற தகவலே, அந்த ஊரில் இருந்து சேலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கு சென்றிருந்த ஆயிரக்கணக்கான நிர்வாகிகளுக்கே காலதாமதமாகதான் தெரிய வந்திருக்கிறது. அவர்கள் சேலத்தில் இருந்து அடித்துப்பிடித்து எடப்பாடி வருவதற்குள், அங்கு பிரசாரத்தை முடித்துக் கொண்டு பக்கத்து ஊரான ஜலகண்டாபுரத்தை நோக்கி மு.க.ஸ்டாலின் கிளம்பிவிட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிமிடத்தையும் வீணடிக்காமல் ஸ்டாலின், சம்பத்குமாருக்கு மட்டுமே செலவழித்திருக்கிறார் என்று திகைப்பு நீங்காமலேயே பேசுகிறார் எடப்பாடி திமுக நிர்வாகி.
மு.க.ஸ்டாலின் திடீர் பிரசாரத்தைப் பார்த்து மிரண்டு போயிருக்கும், முதல்வர் பழனிசாமியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தைச் சேர்ந்த அதிமுக பிரமுகர், எடப்பாடி பழனிசாமி, 10 ஆண்டுகளாக எடப்பாடி தொகுதியில் அடைந்திருக்கும் புகழை, ஆதரவை ஒருமணிநேரத்தில் தூள் தூளாக்கிவிட்டார் மு.க.ஸ்டாலின். இந்தளவுக்கு எளிமையாக, சம்பத்குமார் வெற்றிக்காக வீதிகளில் நடந்துவந்து உதயசூரியனுக்கு வாக்கு சேகரித்த செய்தி, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை மக்கள் மனங்களில் நங்கூரம் போல நிலைத்து நிற்கும்.
குடிசைக்குள் நுழைந்து வாக்கு சேகரித்தது, இந்த கடையில்தான் டீ குடித்தார்., இந்த தெருக்களில் நடந்து சென்று வாக்குசேகரித்தார் என்று அடுத்தடுத்த நாட்களிலும் மக்கள் வியந்து பேசுவார்கள். மு.க.ஸ்டாலின் மீதான மயக்கத்தில் இருக்கும் மக்களை, மனம்மாற்றி மீண்டும் அதிமுக.வுக்கு ஆதரவாக திரும்ப நாங்கள் கடுயைமாக போராட வேண்டியிருக்கும்.
முதல்வர் பழனிசாமியின் பத்து வருட செல்வாக்கை ஒருமணிநேரத்தில் மு.க.ஸ்டாலின் தூளாக்கிவிட்டதை முதல்வர் எப்படி எடுத்துக் கொள்வாரோ தெரியவில்லை. வரும் நாட்களில் அவர் தனது பிரசார பயணத்தை மாற்றி எடப்பாடி தொகுதிக்குள்ளேயே இரண்டொரு நாள் முகாமிடும் அளவுக்கு நெருக்கடி கொடுத்துவிட்டார் மு.க.ஸ்டாலின் என்றார் அந்த அதிமுக நிர்வாகி.
எடப்பாடியில் வாக்கு சேகரித்த மு.க.ஸ்டாலின், ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் செட்டிமாங்குறிச்சி என்ற கிராமத்திலும் சாலையோரம் மக்கள் திரண்டிருந்ததைப் பார்த்துவிட்டு அங்கேயும் இறங்கி வாக்கு சேகரித்திருக்கிறார். பின்னர் ஜலகண்டாபுரம் நகருக்குள் நுழைவதற்கு முன்பாக கட்டிநாயக்கன்பட்டி கிராமத்தில் இறங்கிய மு.க.ஸ்டாலின், அங்கிருந்த தாழ்த்தப்பட்டோர் காலனிக்குள் சென்று அங்குள்ள குடிசைக்குள் திடீரென்று நுழைந்திருக்கிறார்.
அப்போது, அந்த வீட்டில் இருந்த கணவன், மனைவி ஆகியோர் குழந்தையுடன் அமர்ந்து ஆசுவாசமாக தர்ப்பூசணி சாப்பிட்டிக் கொண்டிருந்திருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் நுழைந்ததைப் பார்த்து அந்த தம்பதியினர் அதிர்ச்சியாகி, என்ன செய்வதே என்றே தெரியாமல் தவித்து தடுமாறியபோது, அவர்களை அமைதிப்படுத்தி, என்ன தொழில் செய்கிறீர்கள், எவ்வளவு வருமானம் வருகிறது என்றெல்லாம் விசாரித்து இருக்கிறார், திமுக தலைவர்.
பின்னர், அங்கிருந்த அவர் புறப்பட்டபோது, ஜலகண்டாபுரம் நகரில் உள்ள ஒரு கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவையொட்டி கூட்டம் அதிமாக இருக்கிறது என்று கூற, நகருக்குள் செல்லாமல் வழியில் சவிரியூர் ஊரிலும் வாக்கு சேகரித்துவிட்டு, மாற்றுப் பாதையில் வனவாசி சென்று அங்கேயும் வீதியில் இறங்கி வாக்குசேகரித்துவிட்டு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நங்கவள்ளிக்கு சென்று பேருந்து நிலையத்தில் இறங்கி, அங்கேயும் நடந்து சென்று வாக்கு சேகரித்துவிட்டே, எடப்பாடி தொகுதி பிரசாரத்தை நிறைவு செய்து இருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலினின் ஒருமணிநேர பிரசார யுக்தியில் இருந்து மீள முடியாமல், நள்ளிரவில் இருந்து தூக்கத்தை இழந்துவிட்டு, இன்று காலையிலும் அந்த வியப்பில் இருந்து விலாகமல் இருக்கும், நமக்கு அறிமுகமான எடப்பாடி நகர திமுக நிர்வாகியிடம் பேசினோம். அவர், மறைந்த வீரபாண்டியாரின் அதிதீவிர பக்தரும் கூட.
எடப்பாடிக்கு எதிராக செல்வாக்குமிக்க வேட்பாளர் சம்பத்குமார் இல்லை என்று கூறி நேற்றிரவு வரை சோம்பல் காட்டிய திமுக நிர்வாகிகள் கூட, நள்ளிரவில் இருந்து உற்சாகமாகிவிட்டார்கள். எடப்பாடி மட்டுமின்றி, தொகுதிக்குட்பட்ட ஜலகண்டாபுரம், வனவாசி, நங்கவள்ளி என தொகுதியின் முதல் எல்லையில் தொடங்கி தொகுதி எல்லை முடியும் இடம் வரை மின்னல் வேக பிரசாரத்தை தலைவர் மேற்கெண்டதைப் பார்த்து, பிரமிப்பு நீங்காமல் இப்போதும் இருக்கிறோம்.
எல்லா விமர்சனங்களையும் கடந்து சம்பத்குமார் வெற்றிப் பெற வேண்டும் என தலைவர் சபதம் எடுத்ததைப் போல, எடப்பாடி தொகுதிக்கு என ஒருமணிநேரம் செலவிட்ட, மு.க.ஸ்டாலினின் உழைப்பையும், தீவிரத்தையும் கண்டு எங்களுக்கு வெட்கமே ஏற்பட்டுவிட்டது. எடப்பாடி பழனிசாமி எத்தனை ஆயிரம் கோடி கொட்டினாலும், அவரை இந்த முறை வீழ்த்திக் காட்ட வேண்டும் என்ற வெறிதான் இன்று காலையில் இருந்தே ரத்தத்தை சூடாக்கிக் கொண்டிருக்கிறது.
பிரசாரம் முடிவடைவதற்கு இன்றும் ஒரு வார காலம் இருக்கிறது. இந்த ஒருவார காலத்திலும் உயிரைக் கொடுத்து வேலைப் பார்த்து சம்பத்குமாரை வெற்றிப் பெற வைப்போம். எங்களின் இந்த வெறித்தனமான பிரசாரம், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கேலி, கிண்டல் எழுந்து விடக் கூடாது என்ற ஒரே காரணம்தான், நள்ளிரவு முதல் எங்கள் தூக்கத்தை கெடுத்துவிட்டது. தலைவரின் சபதத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம் என்று பொங்கினார் எடப்பாடி திமுக நிர்வாகி.
சபாஷ் சரியான போட்டி…..