முதலை முதல்ல வைத்தாரா?
அதே என்னுடைய மதிப்பிற்குரிய ஆசிரியர் தான் நேற்று மீண்டும் அழைத்தார்.
எப்படியோ சமாளிச்சிட்ட. நல்ல முயற்சி அப்படின்னு ஒரு ஷொட்டு போட்டார். இருந்தாலும், உன் கிட்ட ஒரு குறளைப் பற்றி கேட்கனும்ப்பான்னார்.
மறுபடியுமா சார்?
கவலைப்படாதே. முதல் குறளைப் பற்றி கொஞ்சம் சொல்லு.
அப்பாடா, தப்பிச்சிட்டேன். சார் அதுதான் எல்லாருக்கும் தெரியுமே.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு”
சரி, அதற்கு என்ன பொருள்?
சார், ‘அ’ என்ற எழுத்து தமிழுக்கு முதல் எழுத்து போல, இந்த உலகத்துக்கு இறைவன் தான் முதல். – அப்படின்னு சொல்லிட்டு லேசா காலரைத் தூக்கப் போனேன்.
கொஞ்சம் இருப்பா. அப்போ, இங்லீஷ்காரனுக்கு “A” முதல் எழுத்து. வேற ஒருத்தனுக்கு வேற இருக்கும். ஆனா “எழுத்தெல்லாம்” ன்னு பொதுவாதானே சொல்லியிருக்கார், தமிழ் எழுத்தெல்லாம்ன்னு சொல்லியிருக்கனுமில்லையா? சிக்கலாயிருக்கே. யோசனை பண்ணுன்னு சொல்லிட்டு நடைய கட்டிட்டார்.
நொந்து நூடுல்சாயிட்டேன். அப்போதான் தம்பி, தம்பி ன்னு ஒரு குரல் கேட்டுது. யாருன்னு திரும்பிப் பார்த்தா ஒரு பெரியவர். காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோயிலிலிருந்து வரேன். என்னப்பா சிக்கல்? ன்னு கேட்டார்.
எனக்கு நம்பிக்கையில்லை. இருந்தாலும் தலைவலி தீர்ந்தா சரின்னுட்டு அவர் கிட்ட சொன்னேன். அவர் சொன்னார்:
அதாவது, “அ” என்ற ஒலி இயல்பா வாயை திறந்தாலே வரும். இந்த ஒலியை இப்படி, அப்படி மாற்றினால் மற்றைய ஒலியெல்லாம் பிறக்கும். அதனால் “அ” என்ற ஒலி எல்லா எழுத்துக்களுக்கும் ஒரு முதல் (capital). அதே மாதிரி இந்த உலகத்துக்கு முதல் (capital) ஆதிபகவனாகிய இறைவன் – இதை தான் திருவள்ளுவர் சொல்கிறாரப்பான்னு நச்சுன்னு ஒரு போடு போட்டார்.
நான் தடாலுன்னு அவர் காலிலே விழுந்துட்டேன். யார் சார் நீங்க? ன்னு கேட்டேன். நான் தான் பரிமேலழகரப்பான்னார். விழுந்தவன் இன்னும் எழுந்துக்கவேயில்லை.
நன்றி. மீண்டும் சந்திப்போம் வேறு ஒரு குறளுடன்.
உங்கள் அன்பு மதிவாணன் (98840 77204)