Sun. Nov 24th, 2024

தமிழ்நாட்டின் தாக்ரே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் நடிகர் சீமானை, ஆங்கிலம் மற்றும் வடநாட்டு ஊடகங்கள் வர்ணிக்கத் தொடங்கியுள்ளன.

மராட்டியத்தில் மண்ணின் மைந்தர்களுக்காக குரல் கொடுத்தவர், சிவசேனாவைத் சேர்ந்த பால் தாக்ரே. கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடியிருப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மண்ணின் மைந்தர்களுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தவர் தாக்ரே. ஹிந்தி பேசும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என எவருமே மராட்டியத்தில் உரிமை கோர முடியாது என்று முழக்கத்தை முன்வைத்து, அவர் நடத்திய போராட்டங்களால் பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மராட்டியர்களின் வன்முறைகளுக்கும் ஆளாகி அவரவர் சொந்த மாநிலங்களுக்கே திரும்பினர். அவர் மறைந்த பிறகு, அவரது வழியில் சிவசேனாவை வழிநடத்திய அவரது மகன் உத்தவ் தாக்ரே தலைமையிலான கூட்டணி ஆட்சிதான் மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

பால்தாக்ரேவுக்கு முன்பாகவே, தமிழகத்தில், தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்கள் எண்ணற்ற தலைவர்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்களாக மறைமலை அடிகள்,திரு.வி.க. ம.பொ.சி, சி.பா.ஆதித்தனர் என தமிழ் தேசியத் தலைவர்களின் பட்டியல் நீளமானது.

அந்த தலைவர்கள் முன்னெடுத்த அதே தமிழ் தேசிய கோரிக்கையை முன்வைத்து, உருவானதுதான் நாம் தமிழர் கட்சி. பத்தாண்டுகளுக்கு முன்பு தொடக்கப்பட்ட அந்த கட்சி, தொடக்கம் முதலே கூட்டணி அரசியலை விரும்பாமல், தனித்தே இயங்கி வருகிறது. தமிழர் நலன், முன்னேற்றம், பாரம்பரியம் உள்ளிட்ட அம்சங்களுக்காக தொடர்ந்து கொடுத்து வருகிறார் நடிகர் சீமான். பல நேரங்களில் சிரித்துக் கொண்டே தமிழர் உரிமைகளை முன்வைக்கிறார் சில நேரங்களில் மிரட்டலாக பேசுகிறார்.

அவரின் பேச்சும், செயலும், முன்வைக்கும் திட்டங்களும், மராட்டியத் தலைவர் மறைந்த பால்தாக்ரேவுக்கு இணையாக இருக்கிறது என்ற அர்த்தத்தில் ஆங்கிலம் மற்றும் வடநாட்டு ஹிந்தி ஊடகங்களும் வர்ணிக்கின்றன. எது எப்படியோ, உலகளாவிய அளவில் தமிழர்கள் வாழ்ந்த தேசத்தில் மட்டும் சீமான் பெயரும் நாம் தமிழர் கட்சியும் உச்சரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்றைக்கு வடநாட்டு ஊடகங்களிலும் சீமானின் பெயர் உச்சரிக்கப்படுகிறது என்று சொன்னால், அதுவே சீமானுக்கும், நாம் தமிழர் கட்சிக்கும் கிடைத்த முதல் வெற்றி என்று நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகி பெருமிதத்துடன் கூறுகிறார்.