வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 2வது முறையாக மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார். அவருடன் நெருங்கிப் பழகுபவர்கள் தனிப்பட்ட முறையில் பேசும்போது, அமைச்சர் நல்லவர், சூதுவாது தெரியாதவர், சம்பாதித்த பணத்தில் பாதிக்கு மேல் மக்களுக்கு செலவழிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர் என்று பாராட்டு மழை பொழிவார்கள். அண்மையில், திருமங்கலம் அருகில் மறைந்த முதல்வர்கள் எம்.ஜி.ஆர், செல்வி ஜெயலலிதா ஆகியோரை தெய்வமாக்கி, பல கோடி ரூபாய் செலவு செய்து கோயில் கட்டி, குடமுழுக்கு விழா நடத்தியுள்ளார். அமைச்சர் ஆர்.பி.உதயகுமார். அந்த பிரமிப்பில் இருந்தே இன்னும் மீள வில்லை அப்பாவி அதிமுக தொண்டர்கள்.
கோயில் கட்டும் அளவுக்கு அவர் பெற்றிருக்கும் இந்த பொருளாதார வளர்ச்சி, கடந்த பத்தாண்டுகளில் கிடைத்ததுதான் என்றும், 2011ல் இருந்து தர்மபிரபு, கொடை வள்ளல் என்ற பட்டங்களை சூடியிருப்பதற்கும் உதவிக் கொண்டிருப்பது மக்கள் பணம்தான் என்று அவரது வளர்ச்சியில் அக்கறையுள்ள நலம் விரும்பிகளே மனம் திறப்பதுண்டு.
இப்படியெல்லாம் வியக்கவைக்கும் குணாதிசயங்களைக் கொண்ட அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதன்முதலாக தனது தொகுதிக்குட்பட்ட பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். துவக்கமே அபசகுணமாக முடிந்தது. கப்பலூரில் வாக்குசேகரிப்புக்கு முன்பாக அங்குள்ள சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சி. திருவுருச் சிலைக்கு மாலையணிவிக்க, படை பரிவாரங்களோடு சென்றார். ஆனால், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வ.உ.சி. சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள், திருவுருவச் சிலைக்கு மாலையணிவிக்க முடியாத அளவுக்கு, அந்த பீடத்தையே பூட்டி வைத்துவிட்டனர்.
அவர்களின் எதிர்ப்புக்குக் காரணம், அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ள மக்களின் சாதி அடையாளமான வேளாளர் என்ற பட்டத்தை தேவேந்திர குல வேளாளர் மக்கள் பயன்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகளும் அங்கீகாரம் வழங்கிவிட்டதே என்ற கோபம்தான். இரண்டு அரசுகள் எடுத்த முடிவுக்கு, தனிப்பட்ட அமைச்சர் ஒருவர் எப்படி பொறுப்பு ஏற்பார்? அதைப் பற்றி கப்பலூர் மக்களுக்கு கவலையில்லை. எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த தியாகிக்கு மாலையணிவிக்காதே… திரும்பி போ ..என்று முழக்கமிட்டு அமைச்சவை விரடடி விட்டனர். அவர்களிடம் சமாதானம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், வ.உ.சி.க்கு வெண்கலத்திலான முழு உருவ சிலையை அமைத்து தருகிறேன் என்ற வாக்குறுதியை அளித்துள்ளார்.
கொந்தளித்து கிடக்கும் மக்களிடம், சாதி ஒரு பிரச்னையில்லை. எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓரினம். எல்லோரும் ஓர் நிறை. எல்லோரும் இந்திய மக்கள். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்ற முண்டாசு கவிஞர் மகாகவி பாரதியாரின் லட்சியக் கனவைச் சொல்லி, மக்களின் மனங்களை பண்படுத்துகிற துணிவு, அமைச்சர் உதயகுமாருக்கு இல்லை. அதற்கு அடிப்படை காரணம், அவர் ஒரு அரசியல்வாதி மட்டுமே, தலைமைப்பண்பை வளர்த்துக் கொண்ட தலைவர் அல்ல. அவரிடம் பல நூறு கோடி ரூபாய் இருக்கிறது. அதை வைத்து எல்லாவற்றையும் விலைக்கு வாங்க முடியும் என்ற அசாத்திய தைரியத்தை, கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சி கற்றுத் தந்திருக்கிறது.
கப்பலூரில் பிரசாரத்தை தொடங்குவதற்காக மக்கள் கூட்டத்தை கூட்ட, தலைக்கு 200 ரூபாய் விதம் ஆயிரம் பேருக்கு அமைச்சர் உதயகுமார் பணம் கொடுத்திருக்கிறார். ஆனால், உள்ளூர் அதிமுக நிர்வாகிகள், அதில் தலா 100 ரூபாயை ஆட்டையைப் போட்டது மட்டுமின்றி, 600, 700 பேருக்குதான் பணத்தை வழங்கியிருக்கிறார்கள். அதாவது, ஆத்து தண்ணீர் அள்ளி குடி. ஒன்றும் குற்றம் இல்லை என்ற மனப்பான்மை ஆட்சியின் மேல்மட்டத்தில் இருந்து அடிமட்டம் வரை பாய்ந்திருக்கிறது. ஆட்சியில் இருப்பவனுக்கும் வெட்கமில்லை. அன்றாடம் உழைத்து பிழைப்பவனுக்கும் வெட்கமில்லை. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூத்தக்குடி…
இரண்டாவது நிகழ்வு, அதே தொகுதியில் போட்டியிடும் அமமுக கூட்டணி வேட்பாளரும் மருது சேனை தலைவருமான ஆதிநாராயணின் ஆவேசப் பேச்சும்தான், திருமங்கலம் தொகுதியில் அனலை ஏற்படுத்தியிருக்கிறது. அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரைப் போல திருமங்கலம் தொகுதியில் பிரசாரத்தை தொடங்கிய அவர், தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு செய்தியாளர்களிடம், உதயகுமாருக்கு எதிராக பொங்கி தள்ளினார்.
முக்குலத்தின் துரோகி உதயகுமார். அவரை தோற்கடித்து திருமங்கலத்தில் உள்ள தேவர் சிலை சுவற்றில் கட்டி வைப்பேன். யார், யாருக்கு தைரியம் உள்ளதோ, அவர்கள் வந்து உதயகுமாரை அழைத்துச் செல்லட்டும் என்று கண்கள் சிவந்தார். அதை விட அவர் உக்கிரமாக சொன்னதுதான்,
அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், 5000 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் செய்திருக்கிறார் என பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். முறைகேடாக சேர்க்கப்பட்டுள்ள சொத்தை லஞ்ச ஒழிப்புத்துறை பறிமுதல் செய்ய வேண்டும் என்று ஆவேசம் காட்டினார்.
பிரசாரத்தின் முதல்நாளே, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராக வெள்ளாள, வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்களும், முக்குலேத்தோர் சமுதாய மக்களும் கடுமையான எதிர்ப்பை காட்டியுள்ளனர். தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களுக்கு மேல் இருக்கிறது. அமைச்சருக்கு எதிராக என்னென்ன பிரச்னைகள் வெடிக்குமோ என்ற அச்சத்தில் அப்பாவி வாக்காளர்கள் பயத்தில் இருக்கிறார்கள்.
அமைச்சருக்கு அதைப் பற்றியெல்லாம் எந்த கவலையும் இல்லை. ஆதி நாராயணன் கூறியது உண்மையாக இருக்கும் பட்சத்தில், 200 500 ஆகலாம்..500, 1000 மாக அதிகரிக்கலாம். 1000, 2000 ம் ஆகலாம்.
எல்லாவற்றுக்கும் ஓர் விலை இருக்கிறது. கவலை எதற்கு…
தூள் கிளப்புங்கள் அமைச்சரே…