Sun. Nov 24th, 2024

சிறப்புச் செய்தியாளர் …

திமுக வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியாகும் என்ற பதைபதைப்பில், அக்கட்சியைச் சேர்ந்த பிரமுகர்கள் இருந்ததை விட, சென்னையில் உள்ள மூத்த ஊடகவியலாளர்களிடம்தான் அதிகளவு பதற்றம் காணப்பட்டது. அதற்கு காரணம், தேர்தல் நடவடிக்கைகளில் சகலகலா வல்லவர்களைக் கொண்ட திமுக.,, 350 கோடி ரூபாய் ஊதியமாக கொடுத்து, பீகாரில் இருந்து தேர்தல் வல்லுநர் பிரசாத் கிஷோரை (ஐபேக் டீம்) தமிழகத்திற்கு வரவழைத்திருக்கிறது என்பதுதான், ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

திமுக.வினருக்கு தெரியாத தேர்தல் வித்தைகளையா, ஐபேக் டீம் கற்றுக் கொடுக்கப் போகிறது என்று, அதன் ஒவ்வொரு அசைவுகளையும் கூர்ந்து கவனித்து வந்தனர், கடந்த பல தேர்தல்களில் நேரடியான கள அனுபவம் பெற்ற ஊடகவியலாளர்கள்.

ஐபேக் டீமில், கடந்த ஆண்டு துவக்கத்திலேயே சேர்ந்த அனுபவமிக்க ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான இளம்தலைமுறையினர் களத்தில் குதித்து, குற்றம் குறை காண முடியாத திமுக வேட்பாளர்களை கண்டுபிடிக்க ரகசியமாக தேடுதல் வேட்டை நடத்தியது உள்ளிட்ட பல்வேறு பணிகளை கண்கொத்தி பாம்பாக கண்காணிக்கத் தொடங்கின சில நூறு ஊடக கண்கள்.

234 தொகுதிகளுக்கும் நேரில் சென்று ஹோட்டல்களில் அறை எடுத்து தங்கி, திமுக முன்னணி நிர்வாகிகளையே சந்திக்காமல், சல்லடை போட்டு சலித்து, தகுதியான வேட்பாளர்களை தேர்வு செய்து படு சீக்ரெட்டாக பட்டியல் தயாரித்து திமுக தலைவரிடம் வழங்கியுள்ளதாக, தகவல்களும் கசிய விடப்பட்டன.

கடந்த ஆண்டு கொரோனோ தொடங்கிய காலத்தில் ஆரம்பித்த ஒன்றிணைவோம் வா உள்ளிட்ட பல்வேறு தொடர் நிகழ்ச்சிகளுக்கும் சூத்திரதாரி ஐபேக் டீம் தான் என்பது, கிளை கழக நிர்வாகிகளுக்கும் தெரிந்தே இருக்கிறது. ஐபேக் டீமில் இருந்து பேசுகிறோம் என்று சொன்னாலே, மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் கண்ணீர் வடிக்கும் அளவுக்கு, நொந்து போயிருக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களை ஆட்டிப் படைத்திருக்கின்றனர் ஐபேக் டீமில் பணியாற்றியவர்கள்.

கிளைக் கழகச் செயலாளர்கள், வார்டு செயலாளர்கள், பகுதிச் செயலாளர்கள் என துவக்க நிலை முதல் மாவட்ட, மாநில அளவிலான நிர்வாகிகளும் ஐபேக் டீமால் வறுத்தெடுக்கப்பட்டுள்ளனர். சாதாரண நகரத்தில் உள்ள வார்டு செயலாளர் மட்டும் கடந்த ஓராண்டில் ஒரு சில லட்சம் ரூபாயை இழந்திருப்பார். மாவட்ட அளவிலான பொறுப்பில் உள்ளவர்கள் கோடிக்கணக்கில் பணம் இழந்திருப்பார்கள். இப்படி ஐபேக் டீம் ஒருபக்கம் செலவு வைத்துக் கொண்டே போக, அதே ஐபேக் டீமைச் சேர்ந்த, விரல் விட்டு எண்ணக் கூடிய ஒருசிலர், ஐபேக் டீமின் பெயரைப் பயன்படுத்தி, கோடிக்கணக்கில் வசூல் பார்த்துவிட்டனர் என்ற பகீர் தகவல் நமக்கு கிடைத்தது.

வேட்பாளர் பட்டியலில் பெயரைச் சேர்க்கிறோம் என்று ஐபேக் டீமில் பணியாற்றுபவர்கள் பண வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று திமுக ஆதரவு ஊடகங்களிலும் கூட செய்திகள் பதிவு செய்யப்பட்டன. திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகட்டும், அதைப் பார்த்த பிறகு, ஐபேக் டீமில் உள்ள கருப்பு ஆட்டை அம்பலப்படுத்துவோம் என்று காத்திருந்தோம்.

திமுக தலைவர் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல், ஆகா, ஓகோ, அற்புதம் என்று சொல்லும் அளவிற்கு எல்லாம் ஒன்றும் இல்லை என்கிறார்கள் திமுக ஆதரவு முன்னணி ஊடகவியலாளர்கள். 173 பெயர்கள் கொண்ட வேட்பாளர் பட்டியலில் 70, 80 சதவிகிதம் பழைய முகங்களாகதான் இருக்கிறார்கள். ஆனால், இந்த பட்டியலை ஆராய்ந்து பார்த்தால், ஐபேக் டீம் ஒன்றும் புதுமைப்படைத்துவிடவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

ஆனால், வேட்பாளர் பட்டியலில் பெயர் சேர்க்கிறேன் என்று கூறி, குறிப்பாக, ஈரோடு முதல் கோவை வரை உள்ள திமுக பிரபலங்களிடம் ஐபேக் டீம் பெயரைச் சொல்லி, அதில் பணியாற்றிய பிரபு தமிழன் என்பவர் கோடிக்கணக்கில் பணம் வசூலித்துள்ளதாக நமக்கு ஆதாரப்பூர்வமான தகவல் கிடைத்தது. அதை நாம், நமக்கு அறிமுகமான திமுக மாவட்டச் செயலாளர்களிடம் விசாரித்து உறுதிப்படுத்திக் கொண்டோம்.

இதில் என்ன கொடுமை என்றால், பிரபு தமிழன் என்பவர் ஊடகவியலாளரே கிடையாது என்பதுதான். இளைஞரான அவர் சென்னையில் கடந்த 1999 ஆம் ஆண்டில் கப்பல் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்திருக்கிறார். அதேகாலகட்டத்தில் டைம்ஸ் ஆப் இண்டியா நிறுவனம் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இணைய தள செய்தி நிறுவனத்தை சென்னையில் தொடங்கியது. அடிப்படை ஊடக அறிவே இல்லாத பிரபு தமிழனுக்கு, ஆங்கிலப் புலமை இருந்ததால், அந்த நிறுவனம் அவரை பணியில் அமர்த்தியது. அங்கும் 5, 6 மாதங்கள் மட்டுமே பணியில் நீடித்த அவர், கடந்தாண்டு ஐபேக் டீம், சென்னையில் பணியைத் தொடங்கிய போது, அதில் ஒருவராக பிரபு தமிழன் இணைகிறார்.

ஐபேக் டீம் செல்வாக்கை வைத்து, தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டியவர்களிடம் லட்சங்களில் பேரம் பேசி பிரபு தமிழன், கோடிக்கணக்கில் வசூலித்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை உறுதி செய்துகொள்ள, ஐபேக் டீமில் பணிபுரிந்து வரும் ஊடகவியலாளர் ஒருவரை தொடர்பு கொண்டோம். பிரபு தமிழனுக்கு எதிராக குற்றச்சாட்டு குறித்து அவர் எந்த பதிலும் நமக்கு தெரிவிக்கவில்லை. ஆனால், 5, 6 மாதத்திற்கு முன்பே, அவரை பணியில் இருந்து ஐபேக் டீம் நீக்கி விட்டது என்ற தகவலை மட்டும் உறுதிப் படுத்தினார்.

அவரின் நீக்கத்திற்கான நேரடியாக காரணத்தை ஐபேக் டீம் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஐபேக் டீமில் இருந்து நீக்கப்பட்ட பிரபு தமிழன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் என்ற விசாரணையில் முனைப்புக் காட்டினோம்.

அப்போது இரு வேறான தகவல் கிடைத்தது. முதல் தகவல், திமுக தலைமையின் வேண்டுகோளை ஏற்று, தேர்தல் பிரசாரத்திற்கு தேவையான கருத்தாக்கங்களை உருவாக்கி தருவதற்காக ஒப்பந்த அடிப்படையில் ஒரு குழு செயல்படுவதாகவும், ஆனந்த விகடனின் முன்னாள் ஆசிரியர் இரா.கண்ணன் மேற்பார்வையில் அந்த குழு இயங்குவதாகவும் அதில் பிரபு தமிழன் பணியாற்றி வருவதாகவும் ஒரு ஒதகவல் கிடைத்து. மற்றொரு தரப்பு தகவலோ பிரபு தமிழன் தற்போது அங்கும் பணியில் இல்லை என்று கூறுகின்றனர். இதை உறுதிப்படுத்திக் கொள்ள இரா.கண்ணனின் நட்பு வட்டாரத்தில் விசாரித்தோம். பிரபு தமிழன் வேலை கேட்டு அணுகியது உண்மை. ஆனால், அவருக்கு பணி வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற விளக்கம் கிடைத்தது.

பிரபு தமிழனுக்கு எதிராக உள்ள குற்றச்சாட்டுகளில் முழு உண்மை இருக்கிறது என்று நம்பிக்கை வந்ததால்தான், இதனை செய்தியாக வெளியிட்டுள்ளோம். திமுக ஆட்சிக்கு வந்தால், பிரபு தமிழனுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் கொடுப்பதற்கு பாதிக்கப்பட்டோர் தயாராக இருப்பதாகவும் நமக்கு தகவல் தெரிவிக்கபபட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று பிரபு தமிழன் மறுப்பு தெரிவித்தால், அவரின் கடிதத்தோடு நமக்கு கிடைத்த ஆதாரங்களையும் சேர்த்து வெளியிட தயாராக இருக்கிறோம்….