சேலத்தில் சிட்டிங் எம்.எல்.ஏ.வான ஜி.வெங்கடாசலத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது, சேலம் வடக்கு தொகுதி அதிமுக நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது. சேலம் மாநகர் மாவட்டக் கழக செயலாளர் என்ற பதவியையும கூடுதலாக வைத்துள்ள இவர், கடந்த 5 ஆண்டுகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை மட்டுமல்ல, அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களின் கோரிக்கைகளை கூட முழுமையாக நிறைவேற்ற ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று குமறுகிறார்கள் அதிமுக தொண்டர்கள்.
முதலமைச்சர் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதும், சேலம் மாநககர் மாவட்ட மக்களிடமும், அதிமுக தொண்டர்களிடமும் செல்வாக்கை இழந்துவிட்ட ஜி.வெங்கடாசலத்திற்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதை கண்டுதான் நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம் என்கிறார்கள், சேலம் மாநகர அதிமுக நிர்வாகிகள். கடந்த 2016 ம் ஆண்டு மேற்கு தொகுதியில் போட்டியிட்ட அவர், அவரின் தொகுதி பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதால், வடக்கு தொகுதிக்கு ஜம்பு ஆகிவிட்டார் ஜி.வெங்கடாசலம்.
கடந்த ஐந்தாண்டுகளில் எம்.எல்.ஏ.வும், அவரைச் சுற்றியுள்ள ஒரு சிறு குழுவினரும் மட்டுமே, அதிமுக ஆட்சியின் பலனை முழுமையாக அனுபவித்தார்களே தவிர, அடிமட்ட தொண்டர்களுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்று கோபமாக கூறும் அதிமுக நிர்வாகிகள், சேலம் மாநகரில் உள்ள பல கோடி ரூபாய் சொத்துகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அந்த சொத்துகளை வாங்கியவர்கள் யார், அவர்களின் பின்னணி என்ன என்பதை கண்டறிய தீவிரமாக விசாரித்தால், புதிய புதிய பணக்காரர்களுக்கும் எம்.எல்.ஏ. வெங்கடாஜலத்திற்கும் உள்ள தொடர்பு வெட்ட வெளிச்சமாகும் என்று ஆவேசமாக கூறுகிறார்கள் அவர்கள்.
இதுதொடர்பாக ஆதாரப்பூர்வமான ஆவணங்களை எல்லாம், முதலமைச்சரிடமே ஒப்படைத்துள்ளோம். இன்னும் சொல்லப் போனால், அதிமுக.வுக்கு துரோகம் செய்யும் விஷயத்தில், எம்.எல்.ஏ. வெங்கடாஜலத்தைப் பற்றி தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் இளங்கோவன் ஏற்கெனவே முதல் அமைச்சரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். அப்போது அவரது முன்னிலையிலேயே வெங்கடாஜலமும், இளங்கோவனும் மோதிக் கொண்டது, அதிமுக.வினருக்கு மட்டுமல்ல, சேலம் மாநகர மக்களுக்கே நன்றாக தெரியும்.
இவரைப் போலதான், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. ஏ.பி. சக்திவேல் மீதும் நிறைய புகார்களை முதல்வரிடம் தெரிவித்தோம். அவருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்க கூடாது என்று தெரிவித்தோம். அதன்பேரில், சக்திவேலுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போது, வெங்கடாஜலத்திற்கு மட்டும் மீண்டும் எப்படி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது என்பதுதான் எங்களுக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்ட திமுக.வினர் தொடர்ந்து ஒரு புகாரை முதலமைச்சர்ருக்கு எதிராக கூறி வருகின்றனர். அவரின் பினாமியாக ஜி.வெங்கடாஜலம் இருக்கிறார் என்ற திமுக.வினரின் குற்றச்சாட்டை உறுதி செய்யும் வகையில்தான் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதா என்ற சந்தேகமும் எங்களுக்கும் எழுகிறது என்று கோபமாக கூறுகிறார் சேலம் மாநகர் அதிமுக நிர்வாகிகள்.
எவ்வளவு பணத்தை வாரி இறைத்தாலும் ஜி.வெங்கடாஜலம் மீண்டும் வெற்றிப் பெறுவது குதிரைக்கொம்பு. எதிர்க்கடசியான திமுக, அவரை தோற்கடிப்பதற்கு பதிலாக அதிமுக.வினரே ஜி.வெங்கடாசலத்திற்கு குழி பறித்து அவரை குப்புற படுகுழியில் தள்ளுவார்கள். அது உறுதி என்று சத்தியம் அடிக்காத குறையாக பொங்குகிறார்கள் சேலம் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
தேவுடா….