Fri. Nov 22nd, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி மூன்றாம் ஆண்டை நெருங்கி கொண்டிருக்கும் நேரத்தில் கூட உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் 6 பேர், முதல் அமைச்சர் அலுவலகத்தையே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தலை கால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் திமுக மூத்த நிவாகிகளின் பிரதான குற்றச்சாட்டாக உள்ளது. திமுக ஆட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் காரியங்களில் நந்தகோபால் ஐஏஎஸ், சமீரன் ஐஏஎஸ் போன்ற பல அதிகாரிகள் தொடர்ந்து செயல்படடு வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்துள்ள நிலையில், திராவிட மாடல் ஆட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் செயல்பட்டு வரும் ஐஏஎஸ் அதிகாரிகளை பற்றிதான் இன்றைய சிறப்பு செய்தியில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை ஐந்து ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள்தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள். மூத்த அமைச்சர்களின் சொல் பேச்சை கூட காது கொடுத்து கேட்பது இல்லை.. இப்படியாக  திமுக ஆட்சி பதவியேற்ற நாள் முதலாகவே தலைமைச் செயலகத்தில் பரவலாக கூக்குரல்கள் எழுந்து கொண்டிருக்கின்றன.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ள திமுகவின் பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகனின் துறையிலேயே ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும் போது மூத்த தலைவர் என்ற அடிப்படையில் கூட துரைமுருகனிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்கிறார்கள். அதைவிட முக்கியமாக  நீர்வளத்துறையைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி மாற்றப்படுகிறார் என்ற தகவலை கூட துறை அமைச்சர் என்ற அடிப்படையில் முன்கூட்டியே தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டுகளும், அமைச்சர் துரைமுருகனுக்கு நெருக்கமான திமுக முன்னணி நிர்வாகிகளே கவலையோடு கூறுகிறார்கள். .

தலைமைச் செயலகத்தில் ஐந்தாறு அதிகாரிகள் குழுவாக சேர்ந்து கொண்டு ஒட்டுமொத்த அமைச்சரவையையும், தமிழ்நாடு அரசின் அனைத்து துறைகளையும் தங்கள் இஷ்டத்திற்கு ஆட்டிப்படைக்கிறார்கள் என்று மூத்த அமைச்சர் துரைமுருகன் உள்பட பல அமைச்சர்கள், முதல்வர் மு.க.ஸ்டாலினிடமே நேரில் முறையிட்டிருக்கிறார்கள். அதன் பிறகும் கூட, ஐஏஎஸ் உயரதிகாரிகள் மாற்றமாக இருந்தாலும் சரி, துறை செயலாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகளிடம் பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்றி வையுங்கள் என்று அறிவுறுத்துவதாக இருந்தாலும் சரி அமைச்சர்களின் வார்த்தைகளுக்கு முதல்வர் அலுவலக ஐஏஎஸ் உயர் அதிகாரிகள் மட்டத்தில் மதிப்பே இருப்பது இல்லை என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்து வருகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது புதல்வரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை தவிர எஞ்சிய அனைத்து அமைச்சர்களும்,  முதல்வர் அலுவலகத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

இன்றைய தேதியில் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் மனவருத்தத்தில் இருப்பதைப் போலவே, தலைமைச் செயலகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர், ஒரே ஒரு ஐஏஎஸ் அதிகாரியிண்ன் அராஜகத்தை பார்த்து கொந்தளித்து கிடக்கிறார்கள்.

அரசு ஊழியர்களில், தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு சிறப்பு உண்டு.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு பணி மாறுதல் என்பதே கிடையாது. பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வு பெறும் காலம் வரை, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகங்களியே பணியாற்றலாம் என்பதுதான் நிம்மதியை அளிக்க கூடியது.

நிதித்துறை, வருவாய் துறை, சுகாதாரத்துறை,கல்வித்துறை, உணவு மற்றும் கூட்டுறவு துறை என 50க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. இந்த துறைகளுக்கு தனித்தனியாக ஐஏஎஸ் அதிகாரிகள்தான் செயலாளராக பணியமர்த்தப்படுகிறார்கள் என்றாலும் கூட இணைச் செயலாளர், கூடுதல் செயலாளர் போன்ற பணிகளிலும் ஐஏஎஸ் அதிகாரிகளே பெரும்பாலு ம் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்களுக்கு அடுத்த நிலையில் துணை செயலாளர், உதவிச் செயலாளர், கண்காணிப்பாளர், செக்ஷன் ஆபிசர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என ஒவ்வொரு துறையிலும் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள்.

புதிதாக பணிநியமனம் பெறும் எந்த துறையில் வேலை ஒதுக்கப்படுகிறதோ, அதே துறையில் தொடர்ந்து பணியாற்றி, பதவி உயர்வு பெற்று, ஓய்வு பெற்று விடுவார்கள்.

பணிக்காலம் முழுவதும் ஒரே துறையில் தொடர்ந்து பணியாற்றுவதால், கடை நிலை ஊழியர் முதல் அன்டர் செகரெட்டரி பதவி வரையிலான பணியாளர்களுக்கு, அந்த துறையின் வரலாறும் முழுமையாக அறிந்து வைத்திருப்பார்கள்.

5 ஆண்டுக்கு ஒரு முறை ஆட்சி மாறினாலும், துறைச் செயலாளர்கள் மாறுதல் பெற்று சென்றாலும் கூட, துறையில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு மாநிலம் முழுவதும் உள்ள அந்தந்த துறையைச் சேர்ந்த ஊழியர்களை வேலை செய்ய வழிகாட்டுவது என்பது தலைமைச் செயலகத்தில் நிரந்தரமாக ஒரு துறையில் பணியாற்றும்  அலுவலர்களுக்கு தான் மிகப்பெரிய பொறுப்பு இருந்து வருகிறது.

காலம் காலமாக இருந்து வரும் நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வந்து ஓட்டுமொத்த தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்களிடம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார் நந்தகுமார் ஐஏஎஸ்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்க நந்தகுமார் ஐஏஎஸ் செல்லப்பிள்ளையாக இருந்து வருகிறார்.

நேர்மையான அதிகாரி என்ற பெயரெடுத்துள்ள நந்தகுமார் ஐஏஎஸ், மக்கள் நலன் சார்ந்தோ அல்லது திராவிட மாடல் ஆட்சிக்கு நல்ல பெயர் கிடைக்கும் வகையிலேயே எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகிறார்கள் தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் அரசு அலுவலர்கள்.

கல்வி, வேளாண்மை, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட முக்கியமான துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் அன்டர் செகரட்டரி முதல் டைபிஸ்ட் வரை நூற்றுக்கணக்கான பணியாளர்களை, வேறு துறைக்கு பணி மாறுதல் செய்யும் வகையில் கறாரான உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார் நந்தகுமார் ஐஏஎஸ்.

பொது மற்றும் பணியாளர் நலத்துறையின் செயலாளராக நந்தகுமார் ஐஏஎஸ், 30 ஆண்டுகளுக்கு  மேலாக இருந்து வரும் நடைமுறை மாற்றி, அனைத்து துறைகளிலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டுகிறார்கள் தலைமைச் செயலக பணியாளர்கள் சங்க நிர்வாகிகள்.

ஏற்கெனவே பள்ளிக் கல்வித்துறையின் ஆணையராக பணியாற்றிய நந்தகுமார் ஐஏஎஸ் , தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள ஒரு அதிகாரிகளுடனும் ஆலோசித்து நடவடிக்கை எடுத்ததே இல்லை. தான்தோன்றித்தனமாக முடிவுகள் எடுத்து, அதனை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், கூடுதல் இயக்குனர், இணை இயக்குனர் என 50க்கும் மேற்பட்டவர்கள் மேல் திணித்தவர் நந்தகுமார் ஐஏஎஸ்.

பள்ளிக்கல்வித்துறை ஆணையராக நந்தகுமார் ஐஏஎஸ் ஏறக்குறையாக இரண்டு ஆண்டு காலம் பணிபுரிந்ததை இருண்ட காலம் என்றே வர்ணிக்கிறார்கள் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றி வரும் அனுபவம் மிகுந்த கல்வித்துறை அதிகாரிகள்.

பள்ளிக்கல்வித்துறையை சீரழித்ததை போல, இப்போது தலைமைச் செயலகத்தில் உள்ள அரசு அலுவலர்களிடமும் பணி மாறுதல் என்ற நடவடிக்கை மூலம் கெட்ட பெயரை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.

முதல் அமைச்சர் அலுவலக செயலாளர்கள் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்திருக்கும் நம்பிக்கைக்கு மோசம் செய்யும் வகையில்தான் ஐஏஎஸ் அதிகாரிகளின் நடவடிக்கைகள் இருக்கிறது என்று வெளிப்படையாகவே பேசுகிறார்கள் அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள்.

தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அலுவலர்களை பழிவாங்கி வருவதைப் போலவே, காவல்துறையைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் வயிற்றிலும் அடித்து விட்டார் நந்தகுமார் ஐஏஎஸ் என்று புலம்புகிறார்கள் காவல்துறை பணியாளர்கள்.

1997 ஆம் ஆண்டில் இன்ஸ்பெக்ராக பணியில் சேர்ந்தவர்களில் 150க்கும் மேற்பட்டவர்கள் 25 ஆண்டுகளாக அதே பதவியில் நீடித்து வருகிறார்கள்.

இவர்களுக்கு டிஎஸ்பி புரமோஷன் வழங்க வேண்டும். காவல் ஆய்வாளர் பதவியில் இருந்து காவல் துணை கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டால், மாத ஊதியம் கூடுதலாக கிடைக்கும் என்பதுடன் ஓய்வு பெறும் நேரத்தில் வழங்கப்படும் பணிக்கொடையும் அதிகரிக்கும்.

1997 ஆம் ஆண்டில் 25 வயதில் இன்ஸ்பெக்டராக பணியில் ஒருவர் சேர்ந்திருந்தால் இன்றைய தேதியில் 52 வயதை கடந்திருப்பார்கள். 60 வயதில் ஓய்வு கிடைக்கும் என்றால், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெறுவதற்கும் வாய்ப்பு ஒன்று.

இளமை பருவத்தை முழுவதும் இன்ஸ்பெக்டர் பணியிலேயே கடந்து விட்டவர்களுக்கு, அதிகாரி என்ற அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்றால், அது டிஎஸ்பி பதவிதான்.

26 ஆண்டுகளுக்கு மேலாக பதவி உயர்வுக்காக காத்திருக்கும் 150 இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி டிஎஸ்பி ஆக நியமிக்கலாம் என காவல்துறையில் இருந்து பரிந்துரைகள், நந்தகுமார் ஐஏஎஸ்ஸுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் போன்ற மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் வரும் அதிகாரிகளுக்கு, உரிய காலத்தில் பதவி உயர்வு வழங்கப்பட்டு விடுகிறது. ஆனால், ஐஏஎஸ் அல்லது ஐபிஎஸ் அதிகாரிகளின் கீழ் பணியாற்றும் அரசு அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றால், அந்த கோரிக்கை மீது பெரும்பாலான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் ஆர்வமே காட்டுவதில்லை.

25 ஆண்டு கால போராட்டத்திற்குப் பிறகு டிஎஸ்பி பதவி உயர்வு கிடைத்துவிடும் என்று 150 இன்ஸ்பெக்டர்கள் காத்திருந்த நேரத்தில், வெறும் 40 இன்ஸ்பெக்டர்களுக்கு மட்டுமே டிஎஸ்பியாக பதவி உயர்வு தரலாம் என்று உத்தரவு போட்டிருக்கிறார் நந்தகுமார் ஐஏஎஸ்.

பதவி உயர்வு கிடைக்காத 100க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

டிஎஸ்பி பதவியின் போதே ஓய்வு காலம் வந்துவிடும் என்ற கவலையில் இருந்து வரும் இன்ஸ்பெக்டர்கள் மீது கூட நந்தகுமார் ஐஏஎஸ் கருணை காட்டவில்லை என்பதுதான் மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளளது.

பள்ளிக்கல்வித்துறையில் ஆணையராக பணியாற்றிய நந்தகுமார் ஐஏஎஸ், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வித்துறை பணியாளர்களை நாள்தோறும் துன்புறுத்தி வந்தார்.

தற்போது தலைமைச் செயலகத்தில் பொதுத் துறை செயலாளராக பணியில் அமர்ந்திருக்கும் இந்த நேரத்தில், ஆயிரக்கணக்கான அரசு அலுவலர்கள், 100 க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் வயிற்றில் அடித்துவிட்டார் நந்தகுமார் ஐஏஎஸ் என்று சாபம் விடாத குறையாக கொந்தளிக்கிறார்கள் இரண்டு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள்.

கருணையே இல்லாத நந்தகுமார் ஐஏஎஸ் போன்றவர்களால், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்குதான் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.

அரசு பணியாளர்களும் காவல்துறை அலுவலர்களும் நிம்மதியாக வேலை பார்க்க விடவில்லை என்றால், தேர்தல் நேரத்தின் போது, திமுகவுக்குதான் பாதாகமாகும் என்று எச்சரிக்கையாகவும் கூறுகிறார்கள்.

தலைமைச் செயலகத்தில் நந்தகுமார் ஐஏஎஸ் அமர்ந்து கொண்டு பொதுமக்களின் நலனுக்கு, அரசு அலுவலர்களின் நிம்மதிக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டிருப்பதை போல, சென்னை மாநகராட்சியின் கூடுதல் ஆணையராக பணியாற்றி வரும் சமீரன் ஐஏஎஸ்ஸும், மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருவதாக கூறுகிறார்கள்.

சென்னை மாநகராட்சியின் ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் களப் பணிக்கு அசராதவர் என்ற பெயர் எடுத்திருக்கும் நேரத்தில், மழைக்காலத்திலும் சாலைகளில் அலைந்து திரிந்து பொதுமக்களுக்கு தைரியத்தையும், அன்றாட வாழ்க்கைக்கும் பாதுகாப்பு அரணாக நின்று கொண்டிருக்கிறார்.

மூத்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ராதாகிருஷ்ணன் அளவுக்கு மக்கள் சேவைகளை செய்யும் பக்குவம், அவரின் தலைமையின் கீழ் பணியாற்றுகிற இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சுத்தமாகவே இல்லை.

கோவை மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சமீரன் ஐஏஎஸ், இரண்டு ஆண்டு காலத்தில் பொதுமக்கள் பாராட்டும் வகையில் ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்பதுதான் மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

மக்கள் பணியில் ஆர்வமே காட்டாத சமீரன் ஐஏஎஸ், சென்னை மாநகராட்சியின் பணிகள் துறைக்கு கூடுதல் ஆணையராக பணிமாற்றம் செய்யப்படுகிறார்கள்.

பணிகள் துறை என்பது மிகவும் முக்கியமானது. சென்னை மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதிகளில் புதிய சாலை அமைத்தால், வடிகால் கால்வாய் கட்டுமானத்தை உருவாக்குதல், பள்ளிக் கட்டடம், மருத்துவமனைகள் மேம்படுத்துதல் என்று மிகவும் முக்கியமான பணிகளை மேற்கொள்ளும் பதவியில் அமர்த்தப்பட்டிருக்கிறார் சமீரன் ஐஏஎஸ்.

முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழும் மாநகரில் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் பணியில் மிகுந்த விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டியது, மாநகராட்சி அதிகாரியான சமீரனின் முன் உள்ள முக்கிய கடமையாகும்.

இளம்வயதில் ஐஏஎஸ் ஆனதால், களப்பணியில் அனுபவம் இல்லை என்றாலும் கூட, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் ராதாகிருஷ்ணனின் அன்றாட செயல்பாடுகளை பார்த்தாவது மக்கள் சேவை என்றால் என்பதை கற்றுக் கொள்ள சமீரன் ஐஏஎஸ்  ஆர்வம் காட்டிருந்தால், திராவிட மாடல் ஆட்சிக்கு நற்பெயரை உருவாக்கி தந்திருக்க முடியும்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்ஸுக்கு உள்ள அரசு நிர்வாக அனுபவத்திற்கு, தலைமைச் செயலகத்தில் முக்கியத் துறைக்கு அவர் பொறுப்பு ஏற்று ஏசி அறையில் அமர்ந்து கொண்டே மக்கள் பணிகளை மேற்கொள்ள முடியும். ஆனால், சென்னை மாநகராட்சி ஆணையராக பணி மாற்றம் செய்யப்பட்ட போது ஒருநாள் கூட  தாமதிக்காமல் ஆணையர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பம்பரம் போல சுறுசுறுப்பாக மாநகர் முழுவதும்  சுற்றி, அடிப்படை கட்டமைப்புகளை விரைவாக முடிக்க, உற்சாகப்படுத்தி கொண்டிருக்கிறார்.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களும் சென்னை மாநகரைப் பொறுத்தவரை மழைக்காலம் ஆகும். சென்னையின் இதயப் பகுதிகளில் சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டிருந்தாலும் கூட கனமழை பெய்யும் போது, தண்ணீர் தேங்கி, போக்குவரத்திற்கு பெரும் சவாலாக மாறிவிடுகிறது.

கடினமான காலத்தில் ஆணையர் பதவியேற்று இருந்தாலும் கூட, நாள்தோறும் காலம் நேரம் பார்க்காமல் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ்.

மக்கள் சேவையில் கொஞ்சம் கூட அலுத்துக் கொள்ளாமல் பணியாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் போன்ற அதிகாரிகளைதான் மக்கள் கொண்டாடுவார்கள்.

இளம்வயதிலேயே களப் பணிக்கு பயப்படும் சமீரன் ஐஏஎஸ்,  ஏஸி அறையிலேயே அமர்ந்து கொண்டு, தனக்கு கீழ் பணியாற்றும் மாநகராட்சி அலுவலர்களை, பணியாளர்களை விரட்டி கொண்டிருப்பதும், அதிகாரி என்ற திமிரில் அநாகரிமாக நடந்து கொள்வதும், பொதுமக்கள் சேவையில் கடும் பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை சமீரன் ஐஏஎஸ் உணர்ந்து கொள்ளவேண்டும்.

மழைக்காலங்களில் அடிப்படை கட்டமைப்புகளை நிறைவேற்றும் ஒப்பந்ததாரர்களை மரியாதைக்குறைவாக நடத்துவது, கான்ட்ராக்ட் பணிகளை முடித்த பிறகும் செலுத்த வேண்டிய நிதியை தராமல் இழுத்துடித்து ஒப்பந்ததாரர்களை வெறுப்பு ஏற்றிக் கொண்டிருக்கிறார் சமீரன் ஐஏஎஸ் என்கிறார்கள் மாநகராட்சி பொறியாளர்கள்.

சமீரன் ஐஏஎஸ் போன்ற ஆணவம் மிகுந்த அதிகாரிகள், மாநகராட்சி நிர்வாகத்தில் நீடித்தால், ஒட்டுமொத்மாக மாநகராட்சி பணிகள் முடங்கிவிடும் ஆபத்து உள்ளது. என்னதான் உயிரைக் கொடுத்து ஆணையர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் பணியாற்றினாலும், கொஞ்சம் கூட சேவை மனப்பான்மை இல்லாத சமீரன் ஐஏஎஸ்ஸின் செயல்பாடுகளால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் மீதும், திராவிட மாடல் ஆட்சி மீதும் சென்னை மக்களுக்கு  கடுமையான அதிருப்திதான் ஏற்படும் என்று ஆழ்ந்த கவலையோடு கூறுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

தலைமைச் செயலகத்தில் உள்ள முதல் அமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றும் உயர் ஐஏஎஸ் அதிகாரிகளின் அனுகிரகம் பெற்ற சமீரன் ஐஏஎஸ் போல இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர், பல்வேறு மாவட்டங்களில் ஆட்சித்தலைவராக பணியாற்றி வருகிறார்கள்.

முதல்வர் அலுவலக ஐஏஎஸ் அதிகாரிகளுடன் நட்பு இருப்பதால், அந்தந்த மாவட்டத்தில் உள்ள ஆளும்கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுசேவை ஆர்வலர்கள் உள்ளிட்டவர்களுக்கு இளம் ஐஏஎஸ் அதிகாரிகள் உரிய மரியாதை   வழங்குவதில்லை என்ற புகார்கள் ஏராளமாக உள்ளன.

திராவிட மாடல் ஆட்சிக்கு புகழை தேடி தராமல், சிண்டிகேட் அமைத்து செயல்படும் ஐஏஎஸ் அதிகாரிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்ற வேண்டும் என்பதே திமுக அமைச்சர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.