காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்தை ஏற்கமாட்டோம். இதுதொடர்பாக மத்திய அரசிடம் முறையிடுவோம் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
பதுக்கோட்டை உள்பட 5 மாவட்ட மக்கள் மற்றும் விவசாயிகளின் பயன்பாட்டின கருத்தி, காவிரி – தெற்கு வெள்ளாறு – வைகை – குண்டாறு திட்டத்திற்கு முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் இன்று பெங்களூரில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் ஆறுகள் இணைப்பு திட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு எடியூரப்பா அளித்த பதில் விவரம் இதோ..
நாங்கள் இதை அனுமதிக்க மாட்டோம். வெறும் அறிக்கையை மட்டும் வெளியிடுவதில் எந்தப் பயனும் இல்லை. காவிரி ஆற்றின் உபரி நீரைத் தமிழகமோ மற்றவர்களோ பயன்படுத்த அனுமதியில்லை.
தமிழக அரசின் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு கடுமையான நடவடிக்கைகள் மற்றும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கர்நாடகத்தின் நலன்கள் பாதுகாக்கப்படும்.
இதேபோல, கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் ரமேஷ் ஜர்ஹிகோலியும் தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுபற்றி அவர் கூறியதாவது:
காவிரியின் உபரி நீரைத் தமிழகம் பயன்படுத்தி ஆறுகளை இணைக்கும் திட்டம் குறித்த கவலைகளை மத்திய அரசிடம் தெரிவிப்போம்.
மாநிலத்தின் நலனைக் காக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். தேவைப்பட்டால் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்பட்டு ஆலோசிக்கப்படும்.
இவ்வாறு ஜர்ஹிகோலி தெரிவித்தார்.