தமிழகத்தில் உள்ள சைவ, வைணவக் கோயில்களில் ஒவ்வொன்றிலும் தெய்வீகமும், அற்புதங்களும் நிறைந்திருக்கின்றன.
சமயக்குரவர்
சமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி, மாணிக்கவாசகர் ஆகியோர் வழியில் ஆலயம் தோறும் புனித யாத்திரை மேற்கொள்வோர், எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதியின் ஆனந்தத்தை, அற்புதத்தை, அதிசயத்தை அனுபவித்து வருகின்றனர்.
அந்த வகையில், சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தில், தெய்வாம்சத்துடன் காட்சியளிக்கும் சிற்பங்களை கண்குளிர தரிசப்பவர்கள், கண்கண்ட தெய்வமே நேரில் எழுந்தருளி ஆசி வழங்கியதாக பூரிப்பார்கள்.
சிவனும், பார்வதியும் மணக்கோலம் காண, மாங்கல்யத்தை தாரை வார்த்து தந்தததால், தாரமங்கலம் என்ற திருநாமத்தை தாங்கி நிற்கும் அந்த புண்ணிய ஊரில், மாசி மாதம் பிறந்தாலே ஆன்மிகப் பெரியோர்கள் ஆனந்தத்தில் திளைப்பார்கள். அதற்கு காரணம், ஆண்டுதோறும் மாசி மாதத்தல், மூன்று நாட்கள் மாலைநேரத்தில் சூரியன், அஸ்தமானகும் நேரத்தில் நுழைவு கோபுரம் வழியாக உள்நுழையும் சூரியக்கதிர்கள், நந்தி பகவானை தாலாட்டி, கருவறையில் வீற்றிருக்கும் லிங்கத்தை ஆராதிக்கும். இந்த அற்புதக் காட்சியைக் கண்குளிர தரிசிக்க, உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருநதும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திரள்வார்கள்.
அந்த வகையில், இன்று முதல் மூன்று நாட்கள் (பிப்ரவரி21,22,23… மாசிமாதம் 9,10,11) தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தில் மாலை நேரம் சூரியன் மேற்கே மறையும் போது தன் கதிரொளியை குளிர்ச்சியாக்கும் தருணம்,
அந்த குளிர்ந்த கதிரொளி கோபுரவாசல் வழியாக உள்ளே சென்று மூலவர் மீது விழும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது! சந்தர்ப்பம் கிடைக்கும் நண்பர்கள் வருடத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த சூரியன்,சுவாமி சந்திப்பை கண்டு மகிழுங்கள் என உள்ளூர் பக்தர்கள் உள்ளன்போடு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
படத்தில் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயத்தின் அன்றைய, இன்றைய தோற்றங்கள்!