Tue. Dec 3rd, 2024

நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) உறுப்பினர்களாக உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 6 பேரின் பதவிக்காலம் (திமுக 3, அதிமுக 3 ) விரைவில் நிறைவடையவுள்ளது. இதனையடுத்து, காலியாகவுள்ள பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கலும் நடைபெற்றது.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் கிரிதரன், தஞ்சாவூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் கல்யாணசுந்தரம், நாமக்கல் மாவட்ட திமுக பொறுப்பாளர் ரமேஷ்குமார் எம்பி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

திமுக ஆதரவுடன் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரமும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.சண்முகமும், ராமநாதபுரம் மாவட்ட அதிமுக பிரமுகர் ஆர்.தர்மரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்த நிலையில், அரசியல் கட்சிகள் சார்பாக போட்டியிட்ட 6 பேரும் தகுதியான வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டதுடன் அவர்களுக்கு எதிராக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியானது.

இதனையடுத்து, தேர்தல் அட்டவணைபடி, திமுக சார்பில் 3 பேரும் காங்கிரஸ் சார்பில் ஒருவரும் அதிமுக சார்பில் 2 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக சார்பில் வெற்றிப் பெற்ற வேட்பாளர்கள், தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவைச் செயலாளர்களிடம் தங்களின் வெற்றிக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்டனர்.

திமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக விரைவில் பதவியேற்கவுள்ள வழக்கறிஞர் கிரிதரன், தஞ்சை கல்யாணசுந்தரம், நாமக்கல் ரமேஷ்குமார் ஆகிய மூவரும் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.