Sun. Nov 24th, 2024

கைக்குள் அடக்கமாக கைபேசி என்றைக்கு வந்ததோ, அன்று முதல் உலக நடப்புகளை எல்லாம், குக்கிராமத்தில் உள்ள படிப்பறிவு இல்லாத மனிதர் கூட, உலக அரசியலை ஆராய்ந்து பார்க்கும் அனுபவம் பெற்றவராக இன்றைக்கு வளர்ந்து நிற்கிறார். அந்த வகையில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில், யூ டியூப், ஃபேஸ் புக் மூலமாக அரசியல் கட்சித் தலைவர்களின் குணாதிசியங்களை எடை போடும் அளவுக்கு நியாயவான்களாக, ஒவ்வொரு வாக்காளர்களும் மாறிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் நியாயத் தராசில், அண்மைக்காலமாக இரண்டு தலைவர்களின் நடவடிக்கைகள், துல்லியமாக அலசி ஆராயந்து, தங்கள் கருத்துகளை டீக் கடை பெஞ்சுகளிலும், முடி திருத்தகங்களிலும், பொது இடங்களிலும் உரக்கவே எடுத்துரைக்கிறார்கள்.  அப்படிபட்ட பெரும்பான்மையான வாக்காளர்களின் வாதங்களில் அடிக்கடி அடிபடுகிற பெயர்களுக்கு உரியவர்களாக, முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்கள்.

நாளொன்றுக்கு பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு, விதவிதமான அறிவிப்புகளைக தெரிவித்து, மக்களின் மனங்களில் ஆழமாக அமர்ந்து கொள்ள துடித்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் இ.பி.எஸ். அவர் ஏற்றிருக்கும் பதவி, அரசியலுக்கு அப்பாற்பட்டு, ஆட்சி அதிகாரத்தின் மூலம் புகழை அறுவடை செய்யவும், விளம்பர வெளிச்சம் அதிகமாக தன் மீது விழவும் உதவிக் கொண்டிருக்கிறது. அவருக்கு போட்டியாக களத்தில் உள்ள சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், அரசியல் ரீதியாக மட்டுமே முதல்வர் இ.பி.எஸ்.ஸோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது.

ஆட்சி அதிகாரம் மற்றும் அரசியல் என இரட்டைக் குதிரையில் சவாரி செய்யும் முதல்வர் இ.பி.எஸ்., தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைவிட, களைப்பின்றி முன்னேறி போய்க் கொண்டிருக்கிறார் என்பதுதான் பொதுமக்களின் வாதமாக உள்ளது. ஆட்சி அதிகாரம் கையில் இல்லையென்றாலும்கூட, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக நலனுக்கு எதிராக உள்ள மத்திய அரசின் கொள்கைகளை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அந்தவகையில், அவரின் செயல்பாடுகள் வாக்காளப் பெருமக்களிடம் அதிகமான ஆதரவைப் பெற்று வருகிறது. மத்திய அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ள மக்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அள்ள வேண்டும் என்ற அடிப்படையில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ளும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரை யுக்திதான், தி.மு.க. உடன்பிறப்புகளிடமே சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வை நடத்திய ஒரு தென் மாவட்ட தி.மு.க. பிரமுகர் சிந்திய கண்ணீரில் தெறித்து விழும் சோகக் கதைதான், இது.

“அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உருவாக்கித் தந்த திட்டமான உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற யுக்தி, ரெம்ப காஸ்டலியானது என்று கண்ணீர் சிந்துகிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். மாவட்டந்தோறும் வரும் மு.க.ஸ்டாலின், ஒவ்வொரு மாவட்டத்திலும் இரண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார். அந்த நிகழ்வுகளுக்கு மக்களை திரட்டுவதற்காக, ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் குறைந்தது 50 பேரை அழைத்து வரவேண்டியிருக்கிறது. பெரும்பாலும் தி.மு.க. உறுப்பினர்கள்தான் ஆர்வமாக வருகிறார்கள. என்னதான் கட்சிக்காரர்களாக இருந்தாலும் உணவு மற்றும் வாகன கட்டணம் என அதிகபட்சமாக 10 ஆயிரம் ரூபாயை செலவழிக்க வேண்டியிருக்கிறது. இந்த வகையில், ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து குறைந்தது 5 ஆயிரம் பேர் கலந்துகொள்கிறார்கள். அந்த வகையில், ஒரு தொகுதிக்கான செலவு 10 லட்சம் ரூபாய் ஆகவும், இரண்டு தொகுதிகளுக்கான செலவு 20 லட்சம் ரூபாயாகவும் செலவிட வேண்டியிருக்கிறது.

அதைத் தவிர்த்து, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வு நடைபெறும் இடம், ஊருக்கு வெளியே திறந்த வெளியில்தான் நடைபெறுகிறது. அங்கு மேடை, பந்தல் அமைப்பதில் இருந்து, மைக் செட், அகண்ட எல்.ஈ.டி. டிவி அமைப்பதில் இருந்து அனைத்தும் பிரசாந்த் கிஷோர் போட்டுத் தந்த வரைப்படம் மூலம் தான் அமைக்க வேண்டியிருக்கிறது. ஹைடெக் டெக்னாலாஜியை கையாள, அதற்குரிய தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவி தேவைப்படுகிறது. இவற்றோடு இந்த நிகழ்வுக்கான விளம்பரத்தையும் சேர்த்து பல லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சிக்கு வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை வரவேற்க, அவர்  தங்கியிருக்கும் இடத்தில் இருந்து தி.மு.க.கொடி, வரவேற்பு பேணர்கள் வைக்க வேண்டியிருக்கிறது. இப்படி சில மணிநேர நிகழ்வுக்காக, அதுவும் தி.மு.க. கட்சிக்காரர்களிடம் உரையாற்றுவதற்காக, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வுக்கு மட்டும் கிட்டதட்ட 50 லட்சம் ரூபாய் செலவழிக்க வேண்டியிருக்கிறது” என்று புலம்புகிறார் அந்த தென் மாவட்ட தி.மு.க.பிரமுகர்.

பிரசாந்த் கிஷோர் என்றைக்கு தி.மு.க.வின் அரசியல் ஆலோசகராக வந்தாரோ, அன்றிலிருந்து மாவட்டந்தோறும் உள்ள தி.மு.க. நிர்வாகிகளின் பணம்தான் தண்ணீராக கரைந்துக் கொண்டிருக்கிறது. முதலில், கொரோனோ காலத்தில ஒன்றிணைவோம் வா என்ற நிகழ்ச்சியை அறிவித்தார். அதற்காக மாவட்ட நிர்வாகிகள் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு செலவு செய்ய வேண்டியிருந்தது. அடுத்து காணொலி வாயிலாக தலைவர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதுக்கு பல லட்சம் ரூபாய் வீணானது. அடுத்து, ஊர், ஊராக மக்கள் கிராம சபை கூட்டம் நடத்தினோம். அதிக செலவு வைக்கும் திட்டமாக உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வு அமைந்துவிட்டது. பத்தாண்டுகளுக்கு முன்பு அமைச்சர்களாக இருந்த மாவட்டச் செயலாளர்களிடம் பணம்இருக்கிறது, அவர்களால் கோடிகளில் செலவழிக்க முடியும். ஆனால், பத்தாண்டுகளாக ஒரு பதவிகளிலும் இல்லாத மாவட்டச் செயலாளர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள். ஒன்று சேமிப்பில் இருந்து செலவழிக்க வேண்டும். இல்லையென்றால் கடன் வாங்கி செலவழிக்க வேண்டும்.

பணம் செலவழிப்பதைப் பற்றிக் கூட கவலையில்லை. ஆனால், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்வில் பங்கேற்பவர்கள் யார், முழுக்க முழுக்க கட்சிக்காரர்கள்தான் கலந்து கொள்கிறார்கள். அவர்களிடம் தலைவர் பேசி என்ன பிரயோசனம். ஊர், ஊராக வாகனத்தில் சென்று பொதுமக்களிடம் பேச வேண்டும். அப்போதுதான் ஆட்சியாளர்களுக்கு எதிரான அதிருப்தியை அதிகப்படுத்த முடியும். ஐந்து, பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த மாதிரி இன்றைக்கு நிலைமை இல்லை. ஊரில் சின்னப் பையன் கூட கேள்வி கேட்கிறான். அவனுக்கெல்லாம் நின்று நிதானமாக பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி காலம் மாறியிருக்கிற நேரத்தில், ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் முதல்வர் கூட, ஊர், ஊராக பிரசார வேனில் சென்று மக்களிடம் பேசுகிறார். அவரின் பேச்சு ஊர்நாட்டான் மாதிரிதான் இருக்கிறது. அதைப் பார்த்து முதல்வர் வெள்ளந்தியாக பேசுகிறார் என்கிறார்கள் மக்கள். அவரை புறக்கணிக்க நினைக்கிற பொதுஜனங்கள் கூட, அவரது வருகையையும், அவரது பேச்சையும் காது கொடுத்து கேட்க கூடுகிறார்கள்.

அ.தி.மு.க. அரசுக்கு எதிராக உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை எல்லாம், தன்னுடைய செயல்கள் மூலம் முதல்வரால் மறக்க வைக்க முடிகிறது. அவர் பேசுகிற அனைத்து பிரசார மேடைகளிலும், தி.மு.க.வையும், தலைவர் மு.க.ஸ்டாலினையும்தான் சாடுகிறார். அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால், எங்கள் தலைவரும் திறந்த வேனில் ஊர், ஊராகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் ஆர்வமாக திரண்டு வருவார்கள். அவர்களிடம் அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை, தமிழகத்தின் உரிமைகளை எல்லாம் பறித்துக் கொண்டு வஞ்சிக்கும் பா.ஜ.க. அரசின் செயல்களை எல்லாம் பட்டியலிட்டால்தான், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்தை முறியடிக்க முடியும்.

தி.மு.க.வுக்கு நல்ல நேரம். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் பிரசாரத்தை தொடங்கவில்லை. அவரும் பேச ஆரம்பித்தால், அவருக்கும் சேர்ந்து ஒற்றை ஆளாக தலைவர் மு.க.ஸ்டாலின்தான் குரல் கொடுக்க வேண்டும். அவரைத் தவிர கனிமொழியின் பிரசாரம் ஓரளவுக்கு மக்களால் பேசப்படுகிறது. உதயநிதியின் பிரசாரம் எல்லாம் இ.பி.எஸ்.ஸுக்கு கவுன்டர் கொடுக்கும் வகையில் இல்லை என்கிறார்கள் கட்சிக்காரர்களே.

இப்படி முதல் ரவுண்டில் அ.தி.மு.க.வின் பிரசாரமே, அதுவும் முதல்வர் இ.பி.எஸ்.ஸின் பிரசாரம், கிராம மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நகர மக்களிடம் தி.மு.க.வுக்கு உள்ள செல்வாக்கு இன்னும் குறையவில்லை என்பதை அறிந்துதான், நகரங்களை குறிவைத்து இ.பி.எஸ். சுற்றிக் கொண்டிருக்கிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், கிராமங்கள் தோறும் செல்ல வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக கிராமங்களைச் சுற்றி வந்தால்தான், இரண்டாவது சுற்றிலாவது கிராம மக்களின் ஆதரவை தி.மு.க. பக்கம் திரும்ப முடியும். தி.மு.க.வுக்கு அ.தி.மு.க. என்ற ஒரு கட்சி மட்டுமே எதிரியல்ல, நாம் தமிழர் சீமான், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் என இரண்டு பேருமே, அ.தி.மு.க.வை திட்டுகிறார்களோ இல்லையோ, தி.மு.க.வை அதிகமாக தாக்குகிறார்கள். கிராமங்களில் உள்ள தி.மு.க. ஆதரவு ஓட்டுகளை சிந்தாமல் சிதறாமல் அறுடை செய்ய வேண்டும் என்றால், மு.க.ஸ்டாலின் கிராமங்களை நோக்கிச் செல்லவேண்டும்.

கட்சிக்காரன் கடன் பட்டு கூட செலவழிக்க தயாராக இருக்கிறான். ஆனால், பிரசாரம் செய்ய தலைவர்தானே செல்ல வேண்டும். சம்பாரிச்ச காசை அல்லது கடன் வாங்கி செலவு செய்யும் நிர்வாகிகளுக்கு எம்.எல்.ஏ. சீட் நிச்சயம் இல்லை என்ற நிலையிலும் கூட, மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வரக்கூடாது என வெறியோடு இருக்கும் தி.மு.க.தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, கிராமங்களை நோக்கி மு.க.ஸ்டாலின் பிரசார பயணத்தை வகுத்துக் கொண்டால், தலைவர் சொல்கிற மாதிரி, அ.தி.மு.க.வை எதிர்க்கட்சி வரிசையில் கூட பார்க்க முடியாத நிலையை உருவாக்கிவிடலாம் என்று ஆதங்கத்தோடு பேசினார், அந்த தென்மாவட்ட தி.மு.க. நிர்வாகி.

ஊதற சங்கை ஊதிவிட்டோம்…..