தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இரு குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நேற்று தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரங்கநாதர் கோயிலை சிறப்பாக தமிழக அரசு பராமரித்து வருகிறது. அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார். மேலும, முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு வருகை தந்த தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பூங்கொடுத்து வரவேற்றார். ராவுடன் தெலங்கானா தொழில்துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் குடும்பத்தினரும் வருகை தந்தனர். இதேபோல, இரு முதல்வர்களுடான சந்திப்பின் போது, துர்கா ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவு மற்றும் வளர்ச்சிப் பணிகள், மாநில, மத்திய அரசியல் நிலைமை ஆகியவை குறித்து இரு மாநில முதல்வர்களும் முக்கிய ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனையில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவும் கலந்துகொண்டார். அரசு தரப்பில் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும், தேசிய அளவிலான அரசியல் குறித்தும் இரண்டு முதல்வர்களும் விவாதித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அகில இந்திய அளவில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக அணி திரண்டு வரும் நேரத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணியை அவரது தலைமையில் அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறார்.
இப்படிபட்ட சூழலில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேசிய கட்சிகளுக்கு மாற்றாக, மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணியை உருவாக்கும் முன்னெடுப்பில் சந்திரசேகர் ராவ் ஆர்வம் காட்டினார். அப்போதும் சென்னை வந்து மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் உரையாடினார். எனவே, இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சந்திரசேகர் ராவ் நடத்திய ஆலோசனை தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.