Fri. Nov 22nd, 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உச்சரிப்பதற்கு முன்பாகவே, சிஸ்டம் சரியில்லை என்ற வார்த்தையை சாதாரண மனிதர்கள் கூட உச்சரித்து வந்ததுதான். அதுவும் அதிமுக தலைமையிலான கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் அவலங்கள், தமிழகத்தையே புரட்டி போட்டிருக்கிறது. தலைமைச் செயலகம் முதல் கடைக்கோடியான கன்னியாகுமரியில் உள்ள தாலுகா அலுவலகம் வரை லஞ்சத்தில், ஊழலில் புரையோடி போய் கிடக்கிறது. அதுபோலவே, காவல் துறையும் தமிழகம் முழுவதும் தனது கண்ணியத்தை இழுந்து நிற்கிறது.

இப்படிபட்ட சூழ்நிலையில், பத்தாண்டுகளுக்குப் பிறகு அமைந்துள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசில் முக்கியமான தூண்கள் யார் என்றால் தலைமைச் செயலாளரும், தமிழக காவல்துறை தலைமை இயக்குனரும்தான்…தமிழ்நாட்டை தமிழன்தான் ஆள வேண்டும் என்ற மண்ணின் மைந்தர்களின் நீண்ட நாள் கனவை, நெடிய போராட்டத்திற்குப் பிறகு நிறைவேற்றி வைக்கும் விதமாக இன்றைய காலம், அதுவும் திமுக தலைமையிலான ஆட்சியாக அமைந்திருக்கிறது.

சென்னை மேயராக, தமிழகத்தின் துணை முதல்வராக பணியாற்றிய காலத்தை விட, முதல்வர் பதவியை ஏற்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியான மே 2 ஆம் தேதியில் இருந்தே தமது கடமையை ஆற்றத் தொடங்கிவிட்டார். மே 7 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக முதல்வராக பதவியேற்ற நிமிடத்தில் இருந்து அவர் ஆற்றி வரும் பணிகளை, சட்டப்பேரவையிலும், பொது வெளியிலும் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவே மனம் திறந்து பாராட்டிக் கொண்டிருக்கிறது.

அதுவும், முதல்வரின் உடல்நிலை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்ட நிலையிலும், வார விடுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட மக்கள் நலப்பணியில் மிகுந்த ஆர்வத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் பணியாற்றிக் கொண்டிருப்பதை பார்த்து, தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவிலும், உலகமெங்கும் பரவியிருக்கும் தமிழர்கள் உள்ளிட்ட அரசியல் ஆர்வலர்களும் வியப்பு நீங்காமலேயே பேசி வருவதுடன் பாராட்டு மழையும் பொழிகிறார்கள்.

திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்று ஆறு மாதத்தை நிறைவு செய்துள்ள இன்றைய நாளில்கூட, முதல்வர் மு.க.ஸ்டாலினின் பல்வேறு நடவடிக்கைகள் வரலாற்றில் பதியும் வகையில்தான் அமைந்திருக்கிறது. அன்றாட அரசுப் பணிகளை கடந்து, பாப்பாபட்டி கிராம சபை கூட்டமாக இருக்கட்டும், தீபாவளி திருநாளான நேற்றைய தினம் பூஞ்சேரி கிராமத்தில் நடைபெற்ற அரசு நிகழ்வாகட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனிதநேய செயல்பாடுகளால், உலகம் முழுவதும் தமிழக அரசின் செயல்பாடுகள் சென்றடைந்து, தமிழ் மொழியே புரியாத மக்களிடமும் கூட பாராட்டை பெற்று வருகிறது.

விளிம்பு நிலை மக்களின் கண்ணீரையும் துடைக்கிற முதல்வராக இன்றைக்கு வலம் வந்து கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த 6 மாத கால நடவடிக்கைகளையும், நாள்தோறும் நடைபெறும் பணிகளையும் ஆய்வு செய்தால் கூட, முதல்வர் ஆற்றியுள்ள மக்கள் பணிகள் விழிகளை விரித்து வியப்பு அடையும் வகையில்தான் அமைந்திருக்கின்றன.

 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப, நடப்பு மாதமான நவம்பர் முதல் தேதியில் இருந்து முதல்வர் ஆற்றிய மக்கள் பணிகளை பார்த்தால் கூட ஆச்சரியத்தைதான் ஏற்படுத்துகிறது.

நவம்பர் 1 வேளச்சேரி மற்றும் கோயம்பேட்டில் மேம்பாலங்கள் திறப்பு நிகழ்ச்சிகள்…தலைமைச் செயலகத்தில் எல்லைப்போராட்ட தியாகிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் மற்றும் நினைவுப் பரிசு வழங்கல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்களில் பங்கேற்பு…

நவம்பர் 2 வேலூர் மாவட்டத்தில் இலங்கை தமிழர்களுக்கான புதிய குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டும் விழா..நலத்திட்ட உதவிகள் வழங்குதல்..

அன்றையே தினமே கொளத்தூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா.. கல்லூரி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

நவம்பர் 3 தலைமைச் செயலகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல்

நவம்பர் 4 தீபாவளி திருநாளில் பூஞ்சேரி கிராமத்தில் நரிக்குறவர் மற்றும் இருளர் மக்களின் வாழ்வில் உண்மையான வெளிச்சத்தை ஏற்படுத்திய வரலாற்று நிகழ்வு…

இந்த நான்கு நாட்களிலும் நடைபெற்ற அரசு நிகழ்வுகளுக்கு இடையே,  நினைக்கும் போதெல்லாம் கண்களில் தானாக கண்ணீர் ஆறாக பெருகும் இரண்டு நிகழ்வுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதுதான் அவரின் மனிதநேயத்தை எந்த ஒப்பனையும் இல்லாமல் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன என்கிறார்கள் மூத்த அரசியல் தலைவர்கள்.

நவம்பர் 2 ஆம் தேதி வேலூர் மாவட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அதே நேரத்தில் சென்னை தலைமைச் செயலகத்தில் மரம் விழுந்து காவல்துறை தலைமைக் காவலர் கவிதா என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த தகவலை கேட்டவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், வேலூர் மாவட்ட அரசு நிகழ்வுகளை முடித்த கையோடு சிறிதுநேரம் கூட ஓய்வெடுக்காமல், கொட்டும் மழையிலும் சாலை பயணமாக சென்னை வந்து, கவிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். முதலமைச்சர் நிவாரண நிதியையும் அறிவித்தார்.

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய மற்றொரு நிகழ்வு, தீபாவளி திருநாளான நேற்று பூஞ்சேரி கிராமத்தில் வாழும் விளிம்பு நிலை மக்களான நரிக்குறவர் மற்றும் இருளர்களின் பல்லாண்டு கால துயரங்களை துடைத்து வைத்தது…

விளிம்பு நிலை மக்களின் கோரிக்கைகள் மிக, மிக சாதாரணமானவை. சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் தலைவணங்க வேண்டிய அரசில், பட்டா, சாதி சான்றிதழ், வாக்காளர், குடிமைப் பொருள் அட்டை உள்ளிட்டவை எல்லாம் விண்ணப்பித்த சில நாட்களுக்குள்ளாகவே வழங்க வேண்டும். ஆனால், ஊழலில் புரையோடிப் போன அரசு நிர்வாகம், ஏழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கிறது. இங்குதான் சிஸ்டம் கெட்டு போயிருக்கிறது.

பூஞ்சேரி கிராமத்து மக்களின் தேவைகளை மட்டுமல்லாமல், அனைத்து பகுதிகளிலும் வாழும் விளிம்பு நிலை மக்களின் குறைகளை இரண்டு வாரத்திற்குள் நிறைவேற்றி வைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டிருப்பதன் மூலம், கெட்டு போய் உள்ள சிஸ்டத்தை சீர்ப்படுத்த முதல்வர் சாட்டையை கையில் எடுத்துவிட்டார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

காவலர் கவிதாவின் அகால மரணம் தீராத மனவலியை ஏற்படுத்திவிட்ட அதேநேரத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் தொலைநோக்கு பார்வையை புரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. காவலர் கவிதா தனது அன்றாட பணியை துவக்க காலை 9 மணியளிவில் தலைமைச் செயலகத்திற்கு வருகிறார். முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, தலைக்கவசத்தை கழற்றும் நேரத்தில், துளியும் சத்தமின்றி மரம் சாய்ந்து அவரின் மீது விழுகிறது. சில நொடிகளில் இந்த நிகழ்வு அமைந்ததால், காவலர் கவிதாவால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகிறது.  காவல் துறை அலுவலர்களும் காயமடைகின்றனர்.

இப்படிபட்ட சூழலில்தான் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸின் புத்திகூர்மையை நினைத்து பார்க்க வேண்டியிருக்கிறது. அவரின் நிர்வாக திறமையால், தமிழக அரசுக்கு ஏற்படவிருந்த மிகப்பெரிய அவப்பெயர் தவிர்க்கப்பட்டிருக்கிறது.

கவிதா, வாகனத்தை நிறுத்திய இடத்தில்தான் கடந்த மாதங்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் கூடியிருந்தனர். முதலமைச்சரின் தனிப்பிரிவில் கோரிக்கை மனு கொடுக்க நாள்தோறும் காலை நேரத்திலயே அங்கு வந்து பொதுமக்கள் காத்திருப்பார்கள். கொரோனா காலத்தில் பொதுமக்கள் குவிவதை பார்த்துதான், மக்கள் நலனின் அக்கறை கொண்ட தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ், முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு பொதுமக்கள் வருவதை குறைக்கும் வகையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுரை வழங்கி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தார். அதன் மூலம் முதல் அமைச்சரின் தனிப்பிரிவுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்தது. அன்றைக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்காமல் இருந்திருந்தால், கவிதா உயிரிழந்த தினத்தன்று என்ன நடந்திருக்கும் என்று நினைத்து பார்க்க கூட அச்சமாக இருக்கிறது.

இப்படி முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிந்தனைக்கு ஏற்ப, வேகமான செயல்பாடுகளுக்கு ஏற்ப தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸும் ஈடுகொடுத்து நாள்தோறும் 19 மணிநேரம் உழைத்துக் கொண்டிருக்கிறார். முதல்வரும், தலைமைச் செயலாளரும் அன்றாடம் மக்களின் துயரை துடைக்க, தங்களின் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் உழைத்துக் கொண்டிருக்கும் போது, தமிழக காவல்துறையின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் சைலேந்திரபாபு ஐபிஎஸ், சாலையோரம் விற்பனை செய்யும் கொய்யா பழத்தை வாங்கி சாப்பிடுங்கள் என்று தமிழக மக்களுக்கு வீடியோ மூலம் அறிவுரை கூறிக் கொண்டிருக்கிறார்.  

வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒரு சான்றிதழ் உரிய காலத்தில் கிடைக்கவில்லை என்றால் கூட பொதுமக்களால் போராடி பெற்று கொள்ள முடியும். ஆனால், நிம்மதியான வாழ்க்கைக்கு காவல்துறையின் செயல்பாடுகள்தான் பெரிதும் உறுதுணையாக இருக்கும். காவல்துறையின் ஈரலே கெட்டுவிட்டது என்று இன்றைய முதல்வரின் தந்தையாரே விமர்சனம செய்திருக்கிறார் என்பதை நினைவுக்கூர்ந்தால், தமிழகம் முழுவதும் இன்றைக்கும் சட்டம் ஒழுங்கு விமர்சனத்திற்குள்ளாகிதான் வருகிறது.

தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஐஏஎஸ்ஸைவிட, டிஜிபி சைலேந்திரபாபுதான், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் குற்றச்சாட்டை தீர்த்து வைக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் கல்லூரி மாணவர்கள் போல விடுமுறை நாட்களில் மிதிவண்டிகளில் நீண்ட தூரம் பயணித்து டிரவுசர் எனும் இறுக்கமான கால் சட்டையை  அணிந்து கொண்டு, வீடியோ மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்..

தற்போதைய திமுக ஆட்சியில் லாக் அப் டெத் எனப்படும் காவல்நிலைய மரணம் ஒன்று நடந்து திமுக ஆட்சிக்கு மிகப்பெரிய அவப்பெயரை தேடித் தந்திருக்கும். நல்லவேளையாக துணிச்சல் மிகுந்த பண்ருட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளரின் நடவடிக்கையால், தமிழக காவல்துறைக்கு ஏற்படவிருந்த அவப்பெயர் நீங்கியது.

கடலூர் திமுக எம்பி ரமேஷ் மற்றும் அவரது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த கோவிந்தராஜை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு மறுப்பு தெரிவித்ததால்தான், திமுக அரசிற்கு ஏற்படவிருந்த அவப்பெயர் தவிர்க்கப்பட்டது என்பது டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸுக்கே தெரியுமா? சந்தேகம்தான்.

முநதிரி திருட்டு வழக்கில் கோவிந்தராஜனை சிறையில் அடைக்க வேண்டும் என்று திமுக எம்பி ரமேஷ் கைபேசி மூலம் காடாம்புலியூர் காவல் ஆய்வாளருக்கு நெருக்கடி கொடுக்கிறார். அவர், பண்ருட்டி டிஎஸ்பி சபிபுல்லாவுக்கு திமுக எம்பியின் மிரட்லை கூறுகிறார். இந்த தகவல் கடலூர் எஸ்.பி. சக்தி கணேஷுக்கும் தெரிவிக்கப்படுகிறது. டிஎஸ்பியும், எஸ.பி.யும் திமுக எம்பியின் மிரட்டலை பொருட்படுத்தாமல், படுகாயமடைந்திருக்கும் கோவிந்தராஜ் மீது வழக்குப் பதிய வேண்டாம். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வையுங்கள் என உத்தரவிடுகின்றனர். இரண்டு அதிகாரிகளின் துணிச்சலான நடவடிக்கையால், காவல் நிலையத்தில் உள்ள சிறையில் மரணமடைந்திருக்க வேண்டிய கோவிந்தராஜ், காவல் நிலையத்தை விட்டு வெளியே அழைத்து சென்றபோது உயிரிழந்துவிடுகிறார்.   

இப்படி வெளியுலகிற்கே தெரியாமல் மாநிலம் முழுவதும் காவல்துறையினருக்கு அதிகார வர்க்கத்தினரிடம் இருந்து நெருக்கடிகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. அதைவிட அதிகமாக காவல்துறை அதிகாரிகளே, கடமையை செய்யாமல் பணத்திற்கு அடிபணிந்து சட்டத்திற்கு விரோதமான நடவடிக்கைகளை துணிந்து செய்து வருவதால் அப்பாவி மக்கள் கடுயைமாக பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருக்கிறது. இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் கடுமையான எச்சரிக்கைகள் மூலம் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்ஸால் எளிதில் தீர்த்து வைத்து விட முடியும்.

அதைவிட முக்கியமாக, சென்னை மாநகரைத் தவிர வேறு எந்த மாவட்ட தலைநகர்களிலும் குற்றச்செயல்களை விரைவாக கண்டுபிடிப்பதற்கு உதவியாக இருக்கும் சிசிடிவி எனும் கண்காணிப்பு கேமிராக்கள் முழுமையாக நிறுவப்படவில்லை. வணிக நகரங்களான திருப்பூர்,கோவை,  ஆன்மிக தலங்கள் நிறைந்துள்ள மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல மாவட்டங்களில் சிசிடிவி நிறுவும் பணி வெறும் கண்துடைப்பு நாடகமாகவே அரங்கேறி கொண்டிருக்கிறது.

சென்னையைப் போல எல்லா மாவட்டங்களிலும் இரவு நேர சட்ட விரோதச் செயல்கள் அதிகமாகி கொண்டே வருகிறது என்றும், எண்ணிலடங்கா திருட்டு நிகழ்வுகள் நடைபெற்று வருவதாகவும், மாவட்டங்களில் உள்ள சமூக ஆர்வலர்கள் மிகுந்த கவலையோடு சுட்டிக்காட்டுகிறார்கள்.  

ஆகச்சிறந்த மனிதநேயர், மக்கள் சேவர் காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு ஐபிஎஸ். அவருக்கு நல்லரசு அறிவுரை சொல்ல வேண்டியதில்லை. இருப்பினும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சுட்டிக்காட்டும் அறிவுரையை நினைவுப்படுத்துகிறோம்.

மக்களிடம் செல், அவர்களுடன் வாழ அவர்களிடமிருந்து கற்றுக் கொள், அவர்களை நேசி, அவர்களுக்கு சேவை செய்..

முதல்வர் மு.க.ஸ்டாலினே, பேரறிஞர் அண்ணாவின் அறிவுரையை அர்த்தமுள்ளதாக்கும் வகையில் பாடுபட்டு கொண்டிருக்கும் போது, அவரை விட கட்டுக்கோப்பான இளமையுடன் இருக்கும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு, கில்லி போல அதிரடி காட்டுபவருக்கு, ஒட்டுமொத்த காவல்துறையையும் விரட்டி, விரட்டி வேலை வாங்குவது தூசி போன்றதுதான்.

ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உடல் ஆகியவை தொடர்பாக பொதுமக்களுக்கு ஆலோசனைகளை கூறுவதற்கு புகழ்பெற்ற சித்த மருத்துவர் சிவராமன் போல ஊரறிந்த சித்த மருத்துவர்கள் மாவட்டந்தோறும் இருக்கிறார்கள்.

ஈரல் கெட்டு போயிருக்கிறது என்ற அவப்யெரை சுமந்து நிற்கம் தமிழக காவல்துறையை, உண்மையான மக்களின் நண்பர் என்றளவுக்கு மாற்றியமைக்க, மாவட்டந்தோறும் செல்லுங்கள். காவல்நிலையங்களை ஆய்வு செய்யுங்கள். காவல்துறை அதிகாரிகளின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் விசாரியுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக காவல்துறையில் உள்ள மகளிர் உள்ளிட்ட அனைத்து நிலை அலுவலர்களையும் மனம் விட்டு பேச சொல்லி, அவர்களின் குறைகளுக்கு காது கொடுங்கள்.

இப்படி பேரறிஞர் அண்ணாவின் அறிவுரைகளை, காவல்துறையின் செயல்பாட்டிற்கு ஏற்ப மாற்றி பாடுபாட்டால், ஓராண்டு காலதிற்குள் தமிழக காவல்துறையை சுத்தபடுத்திவிட முடியும் என்கிறார்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்…..

ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு அமைந்திருக்கிறது என்ற பயமே காவல்துறை அலுவலர்களிடம் ஏற்பட்ட மாதிரி தெரியவில்லையே சார்….

https://twitter.com/1990s_Tweet/status/1453944146742243339?s=20