Sat. Nov 23rd, 2024

டுவிட்டர் நிறுவனம் முழுமையான நடுநிலையானது அல்ல எனத் தெரிந்துள்ளது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமியின் பெற்றோர் புகைப்படத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்டார். அதனால் அவரது பக்கத்தை ‘டுவிட்டர்’ நிறுவனம் முடக்கியது. இதைத்தொடர்ந்து, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கமும் முடக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கட்சி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் தெரிவித்தது.

இந்நிலையி்ல் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி “ டுவி்ட்டரின் ஆபத்தான விளையாட்டு” என்ற தலைப்பில் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என்னுடைய டுவிட்டர் கணக்கை முடக்கியதன் மூலம் டுவிட்டர் நிறுவனம் எங்களின் அரசியல் செயல்பாட்டில் தலையிட்டுள்ளது. ஒரு நிறுவனம் தனது வியாபாரத்தை செய்வதற்காக எங்கள் அரசியலை வரையறுக்கிறது, ஒரு அரசியல் தலைவராக இதை நான் விரும்பவில்லை. இது இந்திய ஜனநாயக கட்டமைப்பின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன்.

எங்களின் ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. நாடாளுமன்றத்தில் எங்களுக்கு பேச அனுமதியில்லை. ஊடகத்துக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால், டுவிட்டர் மூலம் நாம் நினைத் கருத்தை முன்வைக்கலாம், அந்த ஒளிக்கீற்று இருக்கிறது என நான் நினைத்தேன்.

ஆனால், உண்மையில் டுவிட்டர் நிறுவனம் முழுமையான நடுநிலையானது அல்ல எனத் தெரிந்துள்ளது. இது ஒருதரப்பான தளம். ஆட்சியில் இருக்கும் அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் கேட்கிறது.

இவ்வாறு ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.