Thu. May 2nd, 2024

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் அண்மையில் நடைபெற்ற சரக்கு மற்றும் சேவை வரி குழுக் கூட்டத்தில், தமிழக நிதிமையச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்வைத்த வாதம், நாடு முழுவதிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களில் இருந்து பெறப்படும் ஜிஎஸ்டி வரி வருவாய், முறையாக பிரித்து மாநிலங்களுக்கு தரப்படுவதில்லை என்றும் கொரோனோவுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்டவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து வரி விலக்கு அளிக்காதது, மாநிலங்களுக்கான நிதிச்சுமையை அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டி பேசினார்.

நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆணித்தரமான வாதம், நாடு முழுவதும் பொதுமக்களிடம் மிகப்பெரிய ஆதரவை பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக அதிருப்தி குரல்களும் அதிகரித்து வருகின்றன.

மேலும், கொரோனோ மருந்து மற்றும் உபகரணங்களுக்கு ஜிஎஸ்டி.யில் இருந்து வரி விலக்கு அளிப்பது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்கு அமைக்கப்பட்ட குழுவில், தமிழகத்தின் நிதியமைச்சர் சேர்க்கப்படாததும் கடும் கண்டனத்திற்குரியதாக மாறியுள்ளது.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் நிரந்தர தலைவரான நடிகர் கமல்ஹாசனும் ஒன்றிய அரசின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தனது டிவிட்டர் பக்கத்தில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.