Thu. Apr 25th, 2024

சென்னை சைதாப்பேட்டையில் புதிதாக 130 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரோனோ சிகிச்சை மையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார். இதுதொடர்பான செய்தி சன் தொலைக்காட்சியின் சன் நியூஸில் நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது. அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதற்கு பதிலாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று த்வறுதலாக குறிப்பிட்டு விட்டனர். எடப்பாடி பழனிசாமி பெயரோடு ஒளிப்பரப்பட்ட அந்த காட்சியை, அதிமுக.வின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, தமிழ்நாட்டின் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதை சன் டிவி அழுத்துமாக நம்புகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சனம் செய்யும் மீம்ஸ் ஒன்றை கவனக்குறைவாக ஒளிப்பரப்பினார்கள். அதைப் பார்த்து திமுக தொண்டர்கள் கொந்தளித்ததையடுத்து, அப்போது செய்தி ஆசிரியராக இருந்த ராஜா மற்றும் பணியாளர்களை சன் தொலைக்காட்சி நிர்வாகம் பணி நீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.