Sat. Nov 23rd, 2024

அம்மாகிட்ட பார்த்த அதே திமுக.வுக்கு எதிரான வெறி, அப்படியே நம்ம எடப்பாடியார்கிட்ட இருக்குதப்பா…திமுக ஜெயிச்சு ஆட்சியை பிடிச்சதை அவரால இப்ப கூட தாங்கிக்க முடியலப்பா..

இப்படி வியந்து வியந்து பேசும் காட்பாடி அதிமுக வேட்பாளர் வி.ராமுவை, அவரது ஆதரவாளர்கள் ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ராமுவை சந்தித்துவிட்டு வந்த அதிமுக நிர்வாகிகள், வேப்பிலை அடித்ததைப்போல ராமு மாதிரியே பேசுவதை கேட்ட வேலூர் நகர அதிமுக நிர்வாகிகளில் ஒருவர் நம்மிடம் இந்த தகவலை பகிர்ந்து கொண்டார். அவரிடம் என்னாச்சு ராமுக்கு என்று கேட்டோம். நிதானமாக பேச தொடங்கினார்.

காட்பாடியில் தோல்வியைத் தழுவிய அதிமுக வேட்பாளர் வி.ராமு….

எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்றப் பிறகு அவரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள், தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் என பலதரப்பினர் நாள்தோறும் சென்று சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது, தேர்தலில் தோல்வியடைந்த அதிமுக வேட்பாளர்களுக்கு, எடப்பாடியார் ஆறுதல் சொல்லி, அவர்களை உற்சாகமான மனநிலைக்கு கொண்டு வந்து, கட்சிப் பணியில் தீவிரமாக செயல்படுங்கள். உங்களின் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் நிச்சயம் வந்து சேரும் என்று கூறி அனுப்பி வைக்கிறார்.

ஆனால், காட்பாடியில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனை எதிர்த்துப் போட்டியிட்டு, அவரை திக்குமுக்காட வைத்த அதிமுக வேட்பாளர் ராமு சென்ற போது, எடப்பாடியார் இல்லத்தில் நடந்த நிகழ்வுகள் தலைகீழாக இருந்திருக்கிறது. ராமுவை பார்த்தவுடன் உற்சாகமான எடப்பாடியார் அவரை கட்டிப் பிடித்து தழுவாத குறையாக, அவரைப் பாராட்டியிருக்கிறார்.

அதே சமயம், துரைமுருகனை காலி பண்ணியிருக்கக் கூடிய வாய்ப்பை விட்டுட்டியே.. 746 வாக்குதானே வித்தியாசம்..இந்தளவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதை என்கிட்ட நீ முன்கூட்டியே சொல்லியிருந்தா கூடுதலாக சில கோடிகளை கொடுத்து இருப்பேனே..அசால்ட்டா துரைமுருகனை தட்டி தூக்கியிருக்கலாமே..

துரைமுருகனை மட்டும் தோற்கடிச்சு இருந்தா, நம்ம அம்மாவின் (செல்வி ஜெயலலிதா) ஆன்மா சாந்தியடைந்திருக்கும். நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமே என்று எடப்பாடி பேச பேச, அவரின் குரலில் சோகம் இழைந்தோடியிருக்கிறது. அவரின் நிலையைப் பார்த்து வருத்தப்பட்ட ராமு, தலைவரே, நான் ஜெயிடுச்சுடுவேன். துரைமுருகன் மண்ணை கவ்வி விடுவார் என்றுதான் கடைசி நிமிடம் வரை நினைத்திருந்தேன். வாக்கு எந்திரங்களில் பதிவான வாக்குகளில் நான்தான் 432 வாக்குகளுக்கு மேலே லீடிங் பெற்று முன்னிலையில் இருந்தேன். ஆனால், தபால் ஓட்டுகளில் அதிகமாக வாங்கி துரைமுருகன் ஜெயிச்சிட்டார்.

ஆனா தலைவரே, வேலூர் மாவட்டத்தில எல்லாம் அதிமுக.வுக்கு, எனக்கு நல்ல பேரு கிடைச்சிருக்கு தலைவரே… திமுக.வுல எல்லாம் தான்தான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற துரைமுருகனையே தண்ணி குடிக்க வச்சிட்டியேப்பா..ன்னு பாராட்டி பேசிக்கிறாங்க..அதை கேட்கிறப்ப தேர்தல்ல ஜெயிச்சிருந்தாக் கூட, அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க மாட்டேன் தலைவரை..

வேலூர் மாவட்டத்தில 13 தொகுதிகளில் 10 தொகுதியில தோத்துதிட்டோம்னு கவலைப்படாதீங்க.. தேர்தல் முடிவுகள் வெளியான மே 2 ஆம் தேதி காலையில இருந்து இரவு வரைக்கும் காட்பாடியில துரைமுருகனை திணறடிக்க வச்சோமே, அந்த பேச்சு, தமிழகம் முழுவதும் கேட்டுக்கிட்டே இருந்திருக்கு. அதுதான்அதிமுக.வுக்கான வெற்றி..உங்கள் தலைமைக்கான வெற்றி..

கவலைப்படாதீங்க தலைவரே.. அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக.வின் உண்மையான பலத்தை ஆளும்கட்சியான திமுக புரிஞ்சுக்கும்………..இப்படி ராமுதான் எடப்பாடியாருக்கு ஆறுதல் சொல்லி, அவரது மனதை தேற்றியிருக்கிறார் போல…

எடப்பாடியாரை சந்தித்து விட்டு வந்த பிறகு, ராமு சொல்ற விஷயத்தை கேட்கிற அதிமுக நிர்வாகிகள் எல்லாம் சூடாகி விடுறாங்க… திமுக.வுக்கு எதிராக எந்தளவுக்கு அம்மா வெறியா இருந்தாங்களோ, அதல கொஞ்சம் கூட வெறி குறையாமதான் எடப்பாடியாரும் இருக்கிறாராரு என்று ராமு சொல்லும் போது, எனக்கே கூட ரத்தம் சூடாகிடுச்சி.ன்னா பாருங்களேன் என்றார் வேலூர் அதிமுக நிர்வாகி..

வேட்டையில அடிப்பட்ட சிங்கத்திற்கு ஆத்திரம் அடங்காது என்பார்களே, அதுபோல எடப்பாடியாருக்கு இன்னும் கோவம் அடங்கல போல…