Sat. Nov 23rd, 2024

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனோ நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இடம் பற்றாக்குறை, ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், உடனடியாக சிகிச்சை கிடைக்காததால், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாள்தோறும் உயர்ந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில், கொரோனோ நோய் சிகிச்சைக்காக தற்காலிக மருத்துவ மையங்கள் மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் அமைக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக, சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

அதனை சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து கொரோனா தடுப்பு பணிக்கு ஒப்படைக்க வேண்டுமென அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

தொடர்ந்து, ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் ஆய்வு செய்த உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அங்குள்ள வளாகத்தில் கொரோனா சிகிச்சை மற்றும் பொது சிகிச்சைக்கு கூடுதல் படுக்கைகள் அமைக்கும் பணிகள் குறித்தும் மருத்துவ அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதேபோல், புதுப்பேட்டை கொய்யாத்தோப்பு பகுதியில் கொரோனா தடுப்பூசியிடும் முகாமினை தொடங்கி வைத்த உதயநிதி ஸ்டாலின், தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.