Sat. Nov 23rd, 2024

திருச்சியில் உள்ள தனியார் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மமேஷ் பொய்யாமொழி இன்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டு, உற்பத்தியை அதிகரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு தனியார் நிறுவன அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர்.

திருச்சியில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் புதுக்குடி கிராமம் உள்ளது. அதன் அருகில் மருத்துவப் பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற ஆக்சிஜன் உற்பத்தி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சிக்ஜில்சால் கேஸஸ் பிரைவேட் லிமிடெட் என்ற அந்த நிறுவனத்தில் இன்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சரும் திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று பார்வையிட்டார்.

திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ ஆக்ஸிஜனை, இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. ஆக்சிஜன் உற்பத்தி திறன் குறித்து கேட்டறிந்த அமைச்சர் அன்பில் மகேஷ், உற்பத்தியின் அளவை அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றியும் தனியார் நிறுவன அதிகாரிகளுடன் விவாதித்தார்.

நாள் ஒன்றுக்கு உற்பத்தியின் மொத்த கொள்ளளவு 50 மெட்ரிக் டன்னாக இருந்து வரும் நிலையில், அதனை முழுவதுமாக அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டது. உற்பத்திக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வண்ணம் உற்பத்தியை பார்த்துக் கொள்ளவும் அவ்வாறு இடையூறுகள் ஏற்பட்டால் உடனடியாக தன்னை தொடர்பு கொள்ளுமாறும் தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கூறினார் அமைச்சர் அன்பில் மகேஷ்.