Sat. Nov 23rd, 2024

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தனது டிவிட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றியமைத்துள்ளார். அதில்தான், உயிர்மூச்சு உள்ள வரை உங்களுக்காக நான் என அவரே கைப்பட எழுதி எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டுள்ளார்.

முகப்புப் படத்தில், அவரின் நான்கு விதமான ( கெட் அப் )தோற்றங்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. பச்சை துண்டில் தலைப்பாகை கட்டி கையில் அரிவாளைப் பிடித்தபடி காட்சியளிக்கும் விவசாயி புகைப்படம், அதில் முத்தாய்ப்பாக இடம் பெற்றுள்ளது.

எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக இருந்த போது இரண்டு விதமான டிவிட்டர் கணக்குகளைப் பயன்படுத்தி வந்தார். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் ஒன்றும் முதலமைச்சர் என்ற பெயரில் மற்றொன்றுமாக இரண்டு டிவிட்டர் கணக்குகள் இருந்தன.

அப்போது, அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் டிவிட்டர் பக்கத்தின் முகப்புப் படத்தில் மறைந்த முதல்வர்கள் செல்வி ஜெயலலிதா, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். ஆகியோரின் புகைப்படங்கள் மற்றும் அதிமுக கொடி, இரட்டைச் இலைச் சின்னம் உள்ளிட்டவை அதில் இடம் பிடித்திருந்தன.

இரண்டொரு நாட்களுக்கு முன்பாக அந்த முகப்புப் படம் மாற்றப்பட்டு, தற்போது அவரை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ளும் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. உயிர் மூச்சு உள்ள வரை உங்களுக்காக நான் இருப்பேன் என்று அவர் குறிப்பிட்டதற்கு உள்நோக்கம் கற்பித்து, அவரது எதிரணியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

முதலமைச்சராக கடந்த நான்காண்டுகளில் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக செயல்பட்டிருக்கிறார், அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிமுக.வுக்கும் நல்ல பெயரைப் பெற்று தந்திருப்பதாக கிராமப்புறங்களில் உள்ள நிர்வாகிகளே பெருமையாக சொல்கிறார்கள். அதிலும் உண்மை இருக்கிறது. ஆனால், ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டிவிட்டு தனது கட்டுப்பாட்டில் மட்டுமே அதிமுக இருக்க வேண்டும் என்று நினைத்து எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்திக் கொண்டிருப்பதுதான் தங்களுக்கு வேதனையளிக்கிறது.

அம்மா மறைந்த பிறகு, அதிமுக. பலவீனமடைந்திருக்கிறது என்ற கருத்தை புறம்தள்ளி விட முடியாது. தற்போது ஆட்சியிலும் இல்லை. இந்த நேரத்தில் பலமான எதிர்க்கட்சியாக அதிமுக.வை வழிநடத்த இ.பி.எஸ்.ஸும் ஓ.பி.எஸ்.ஸும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் அதிமுக .வில் உள்ள ஒட்டுமொத்த தொண்டர்களும் எதிர்பார்க்கிறார்கள்.

தொண்டர்களின் கருத்துக்கு மதிப்பளிக்கும் வகையில், ஓ.பன்னீர்செல்வத்தை ஒட்டுமொத்தமாக ஓரம் கட்டும் எண்ணத்தை கைவிட்டு, அவரது ஆலோசனைகளை ஏற்றும், அவரின் ஆதரவோடும் அதிமுக.வை வழிநடத்திச் செல்வதுதான், அதிமுக.வின் எதிர்காலத்திற்கு நல்லது. அதை விடுத்து, மறைந்த செல்வி ஜெயலலிதா போல, தானும் ஆளுமைமிக்க தலைவர்தான் என்ற இறுமாப்போடு செயல்படுவதும், அம்மா, புரட்சித்தலைவர் புகைப்படங்களை புறக்கணித்து தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொள்ள நினைக்கும் சிந்தனைகளை எடப்பாடி பழனிசாமி உடனடியாக தூக்கியெறிய வேண்டும் என்று எதிரணி அதிமுக நிர்வாகிகள் விரக்தியோடு பேசினார்கள்.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது பயன்பாட்டில் இருந்த டிவிட்டர் கணக்கு தற்போது Government of Tamilnadu என்ற அளவில் பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதன் தொடக்க பதிவுகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்வுகள் பதிவேற்றப்பட்டள்ளன. மே 2 ஆம் தேதிக்கு முன்பாக உள்ள பதிவுகளில் எடப்பாடி பழனிசாமியே சிரித்துக் கொண்டிருக்கிறார்.

ஓ.பன்னீர்செல்வத்திற்கு இன்னும் துணை முதல்வர் என்ற எண்ணம் போகவில்லைப் போல.. அவரும் இரண்டு விதமான டிவிட்டர் கணக்குகளை கையாண்டு வருகின்றனர். ஒன்று, கட்சிப் பெயரில் இருக்கிறது. மற்றொன்று, துணை முதல்வர் பெயரில்தான் இன்றும் இருக்கிறது. அவருக்கு இன்னும் மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதா மீதும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். மீதும் ஆழமான விசுவாசம் இருக்கிறது.

இருவரின் புகைப்படங்களை தனது டிவிட்டர் கணக்கின் முகப்பு புகைப்படத்தில் இன்னமும் வைத்திருக்கிறார். என்னதான் எதிரியாக எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தாலும் கூட, அவரைப் போல ஓரவஞ்சனை இல்லாதவராகதான் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார் போல…

தனது டிவிட்டர் கணக்கில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தையும் வைத்திருக்கிறார்… இ.பி.எஸ். மீது உள்ளுக்குள் கோபம் இருந்தாலும் கூட பொதுவெளியில் இருவரும் இணைந்திருப்பது போல ஒரு இமேஜை பில்டப் செய்து கொள்வதில் குறியாகதான் இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்…

அரசியலில் இதெல்லாம் சகஜம்ப்பா