Sat. Nov 23rd, 2024

தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், கொரோனோவால் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்.

மே 2 ஆம் தேதி வரை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, அயல்நாடுகளில் மருத்துவம் படித்துவிட்டு மருத்துவக் கவுன்சிலில் பதிவு செய்து காத்திருக்கும் 600 இளம் மருத்துவர்கள் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றிட அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மருத்துவர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும், நிவாரண நிதியை உயர்த்தி தர வேண்டும் என அடுக்கான கோரிக்கைகளை முன் வைத்துள்ளார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…

திமுக அரசுக்கு எதிரான கூட்டணியில் உள்ள கட்சிகளின் குரல் ஒரே மாதிரியாக, ஆளும்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அதிகமாக கேட்கத் தொடங்கியிருக்கிறது.

மே 2 ஆம் தேதிக்கு முன்பாக, அதாவது வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதியில் இருந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை, அப்போதைய ஆளும்கட்சியாக இருந்த (காபந்து அரசாக இருந்தாலும்) கூட மத்திய அரசுக்கு எதிராக அதிமுக அழுத்தமாக ஒரு கோரிக்கையும் முன் வைக்கவில்லை. அதேபோலதான் தமிழக பா.ஜ.க.வாக இருந்தாலும், பா.ம.க.வாக இருந்தாலும், கொரோனோ விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் மௌனமே சாதித்தன.

இந்த காலகட்டத்தில்தான் கொரோனோ தொற்று பரவல் கிடுகிடுவென உயரத் தொடங்கியது. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், தமிழக அரசின் ஒட்டுமொத்த நிர்வாகத்தை அப்போதைய தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன்தான் கவனித்து வந்தார்.

நாளுக்கு நாள் கொரேனோ தொற்று அதிகரித்து வருவதை கண்டபோதும், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்க அவர் முன்வரவில்லை. சம்பிரதாயத்திற்காக சுகாதாரத்துறைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திவிட்டு,மே 2 ஆம் தேதியன்று வெளியாகும் தேர்தல் முடிவை எதிர்நோக்கி காத்திருந்தார்.

தலைமைச் செயலாளர்தான், கொரோனோ தொற்று பரவல் அதிகரிப்பதை கைகட்டி வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார் என்றால், மத்திய அரசின் பிரதிநிதியாக சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் வாசம் செய்து கொண்டிருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கடந்த ஒருமாதமாக, தமிழகத்தின் நிலைமை குறித்து கவலைப்பட்டிருப்பாரா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஆளுநர் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவர், தொடக்கத்திலேயே அரசியல் செய்ய தொடங்கியவர். மாநில வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்கிறேன் என்று கூறி, மாவட்டம் மாவட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அதிமுக அரசுக்கு கடும் நெருக்கடிய உருவாக்கியவர். அப்போதே அவரின் செயல், மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கை என திமுக குரல் கொடுத்தது. ஆனால், ஆளும்கட்சியான அதிமுக அரசு, ஆளுநருக்கு எதிராக மூச்சே விடவில்லை.

தேவையற்ற காலத்தில் மாநிலத்தின் வளர்ச்சிக்காக சுற்றுப்பயணம் செய்ய துணிந்த ஆளுநர் புரோகித், கொரோனோ உச்சத்தை நோக்கி செல்ல தொடங்கிய கடந்த மாதம் முழுவதும் ஆளுநர் மாளிகையிலேயே முடங்கிக் கிடந்ததால்தான், இன்றைக்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனோ தொற்று பரவல் அதிகரித்து, புதிதாக பதவியேற்ற திமுக அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள் தமிழக அரசின் உயர்ந்த பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மனது வைத்திருந்தால், ஏப்ரல் 7 முதல் மே 2 வரை தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை பன்மடங்கு விரிவுப்படுத்தியிருக்க முடியும். அதற்கு தேவையான காலம் அப்போது அதிகமாகவே இருந்தது. ஏப்ரல் 6 ஆம் தேதி நிலவரப்படி நோய் தொற்றாளார்களின் எண்ணிக்கை, தமிழகம் முழுவதுமே 25 ஆயிரம் என்ற எண்ணிக்கையில்தான் இருந்தது.

ஆனால், அதற்கடுத்த நாட்களிலேயே கொரோனோ தொற்று பாதிப்பின் எண்ணிக்கை ஆயிரங்களில் அதிகரித்த போது, தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர் உள்ளிட்டவர்களை அழைத்து, தமிழகத்தின் நிலவரத்தை கேட்டு தெரிந்து, மருத்துவமனைகளில் கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்துவது, அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் சிறப்பு சிகிச்சை மையங்களை அமைப்பது என தமிழக அரசு எந்திரங்களை வேகப்படுத்தி இருக்கலாம்.

ஆனால், கடந்த 30 நாட்களுக்கு மேலாக எந்தவொரு கட்டமைப்பு வசதியையும் மேம்படுத்தாமல், மே 2 க்குப் பிறகு ஆட்சிக்கு வரும் அரசியல்வாதிகள் பார்த்துக் கொள்ளட்டும் என்று ஆளுநர் புரோகித் காட்டிய மௌனம்தான், டெல்லி போல தமிழகமும் மாறிவிடுமோ என்ற அச்சத்தை பொதுமக்களிடம் இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த சில நாட்களாக நாள்தோறும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனோவால் பாதிக்கப்பட்டு வருவதால் இன்றைய நிலவரப்படி 1,72,735 பேர் கொரோனோவுக்கு சிகிச்சைப் பெறும் நிலை ஏற்பட்டுவிட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனோ சிறப்பு மையங்கள் என அனைத்து இடங்களும் நிரம்பி வழிகின்றன. அரசு மருத்துவமனைகளில் நிர்வாகப் பொறுப்பில் உள்ள டீன் உள்ளிட்ட நிர்வாக தரப்பினர், கையறு நிலையில் உள்ளனர். புற்றீசல் போல படையெடுத்து வரும் கொரோனோ தொற்றாளர்களைப் பார்த்து, அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பீதியடைந்து வருகின்றனர்.

மதுரை சண்முகப்பிரியா உள்ளிட்ட இளம்வயது மருத்துவர்கள் உள்பட அரசு மருத்துவர்களின் உயிரிழப்புகளும், ஒட்டுமொத்த சுகாதாரத்துறையையே அச்சப்பட வைத்துவிட்டது.

மார்ச் மாதத்திலேயே கொரோனோ 2 வது அலை வேகமெடுக்க ஆரம்பித்துவிட்டது. தேர்தல் திருவிழாவில் ஆளும்கட்சியும், எதிர்க்கட்சியும் சுறுசுறுப்பாக இருந்த நேரத்தில், அரசு நிர்வாகம் ஒட்டுமொத்தமாக முடங்கியே போய்விட்டது. இந்த காலத்தில்தான் நூற்றுக்கணக்கில் பரவிய கொரோனோ தொற்று ஆயிரங்களில் அதிகரித்து, ஏப்ரல், மே மாதங்களில், அரசு நிர்வாகத்தால் சமளிக்க முடியாத அளவுக்கு எல்லை மீறி போய்விட்டது.

கொரோனோ 2 வது அலை, தமிழக மக்களுக்கு பேராபத்தாக மாறியதற்கு தேர்தல் ஆணையம்தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டினால், தேர்தல் ஆணையத்திற்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. ஏப்ரல் 6 ஆம் தேதியன்று முடிந்த வாக்குப்பதிவை, மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில தேர்தலை காரணம் காட்டி கிட்டதட்ட ஒருமாதத்திற்கு வாக்கு எண்ணிக்கையை தள்ளிப் போட்டதால்தான், தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கொரோனோ தொற்று இன்று பேயாட்டம் ஆடிக் கொண்டிருக்கிறது.

கொரோனோவால் உயிரிழப்புகள் அதிகமாகியிருப்பதற்கு ஒருபக்கம் தேர்தல் ஆணையம் காரணம் என்றால், தமிழகத்தை பொறுத்தவரை ஆளுநர் பன்வாரிலாலின் மெத்தனமும் முக்கிய காரணமாக அமைந்துவிட்டது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அதுபோல, உண்மை நிலையை மத்திய அரசுக்கும், ஆளுநர் புரோகித்திற்கும் நெற்றிப்பொட்டில் அறையும் அளவிற்கு அறிக்கைகளாக தராத முன்னாள் தலைமைச் செயலாளர் ராஜிவ் ரஞ்சன் உள்ளிட்ட அனைத்து உயரதிகாரிகளும் ஒருவகையில் குற்றவாளிகளே..

மே 7 ஆம் தேதி ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக, அரசு நிர்வாகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை யூகிப்பதற்கு முன்பாக, பாறாக்கல்லை விட பெரும் பாரமாக, மூச்சு விடுவதற்குக் கூட நேரம் இல்லாத வகையில் திமுக ஆட்சிக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கிறது கொரோனோ எனும் கொடிய உயிர்க்கொல்லி நோய்.

மருத்துவ அவசரகால நிலையை பிறப்பிக்கும் அளவுக்கு தமிழகம் தள்ளப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில், திமுக அரசுக்கு, அரசியல் கண்ணோட்டத்துடன் நெருக்கடிகளை கொடுக்காமல், அரசியல் மாச்சர்யங்களை மறந்து ஒரே அணியில் திரண்டு நின்றால்தான் கொரோனோவுக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் வெற்றி பெற முடியும்.

இந்த கள யதார்த்தத்தை அரசியல் கட்சித்தலைவர்கள் உணர்ந்துக் கொள்வார்களா?

v

One thought on “கொரோனோ உயிர்ப்பலி அதிகரிப்புக்கு ஆளுநரின் மெத்தனமே காரணம்? ஏப். 6 முதல் மே 2 வரை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் என்ன செய்து கொண்டிருந்தார்?”

Comments are closed.