சிறப்புச் செய்தியாளர் தாரை இளமதி….
திமுக ஆட்சியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு – ஆயத்தீர்வை துறை செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டதன் பின்னணியில் சசிகலா குடும்பத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்திற்கும் இடையே நடைபெற்ற மறைமுக பேரங்கள்தான் காரணம் என்று ஆதாரமில்லாத தகவல் ஒன்று பரவிக் கொண்டிருக்கிறது.
இந்த பின்னணியோடு வி.கே.சசிகலா குடும்பத்திற்கும் செந்தில்பாலாஜிக்குமான உறவு பற்றி 2 ஆண்டுகளுக்கு முன்பு பரவிய சில நிகழ்வுகளையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டியிருக்கிறது. டிடிவி தினகரன் அணியில் இருந்து விலகி , திமுக.வில் செந்தில் பாலாஜி சேர்ந்த போதும், சசிகலா குடும்பத்து உறவுகள் குறிப்பாக இளவரசி ஜெயராமன், அவரது புதல்வி கிருஷ்ணப்பிரியா, அவரது மகன் விவேக் ஜெயராமன் ஆகியோரின் வற்புறுத்தலே காரணம் என்ற பேச்சும் அப்போதே பரவலாக எழுந்தது. .
அப்படி என்னதான், 2018 ஆம் ஆண்டில் நடந்தது ?
பழைய நிகழ்வுகளை மீண்டும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருவோம். அந்த ஆண்டின் துவக்கத்தில் ஆளும்கட்சியான அதிமுக.வோடு, குறிப்பாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு ( தர்மயுத்த நாயகன் ஓ.பி.எஸ். தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தபோது) டிடிவி தினகரன் மல்லுக்கட்டிக் கொண்டிருந்த போது, தினகரனின் அரசியல் நடவடிக்கைகளுக்கு எதிராக அவரது குடும்ப உறவுகளே பகிரங்கமாக போர்க்கொடி தூக்கின. வி.கே.சசிகலாவின் மூத்த சகோதரர் திவாகரன், அவரது மகன் ஜெய் ஆனந்த் மற்றும் டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்கடேஷ் என பெருங்கூட்டமே டிடிவி தினகரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியது.
இந்தப் போராட்டத்தில் திவாகரனும், அவரது புதல்வர் ஜெய் ஆனந்த்தும் பகிரங்கமாகவே எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான நிலையை எடுத்தனர். ஆனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு எதிரான மனநிலையில்தான் பெங்களூர் சிறையில் இருக்கிற வி.வே.சசிகலா இருந்து வருகிறார் என்ற பிம்பத்தை கட்டமைத்தார் டிடிவி தினகரன். அதனை நம்பிதான், அவருடன் 18 எம்.எல்.ஏ.க்களும் உடனிருந்தனர்.
ஆனால், அந்த சமயத்தில் மன்னார்குடி குடும்பத்தைச் சேர்ந்த மற்ற உறவுகள் தைரியமாக ஊடகங்களில் பேச தயங்கியபோது, வி.கே.சசிகலாவின் சகோதரர் மறைந்த ஜெயராமன்-இளவரசியின் புதல்வி கிருஷ்ணப்பிரியா, டிடிவி தினகரனின் அன்றாட நடவடிக்கைகளை கடுமையாக விமர்ச்சித்து வந்தார். இதனால் கடுப்பான டிடிவி தினகரன், கிருஷ்ணப்பிரியாவை கடுமையாக எச்சரிக்கவும் செய்தார்.
ஆனால் அதற்கெல்லாம் துளியும் பயப்படாமல், தொடர்ந்து டிடிவி தினகரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டையே எடுத்தார் கிருஷ்ணப்பிரியா. கூடவே, பெண்கள் உரிமைகள் தொடர்பாக ஆர்ப்பாட்டங்களை நடத்தினார். கஜா புயலின்போது டெல்டா மாவட்டங்களில் உதவிகளை மேற்கொண்டிருந்த தன்னார்வலர் குழுக்களுக்கு நிதியுதவி புரிந்தார். புயலால் சேதமடைந்த தேங்காய்களை மொத்தமாக கொள்முதல் செய்து சென்னைக்கு கொண்டு வந்து விற்பனை செய்தார்.
அதன் மூலம் கிடைத்த பணத்தை, அந்த தன்னார்வலர் குழுக்களிடமே ஒப்படைத்தார். அதற்கு மேலாகவும், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு தையல் உள்ளிட்ட பல்வேறு தொழிற்பயிற்சிகளை கிடைக்க முனைப்புடன் செயலாற்றினார். அதற்காகவே தனியாக ஒரு அமைப்பையும் ஏற்படுத்தினார்.
இப்படி அவர், டிடிவி தினகரனுக்கு எதிராக அரசியல் செய்து கொண்டிருந்தபோது, அப்போது குமுதம் ரிப்போர்ட்டரில் பணியாற்றிக் கொண்டிருந்த நான், ஆசிரியர் குழுவின் ஆலோசனையின் பேரில் அவரின் பேட்டியைப் பெற்று வழங்கினேன். இணையம் வழியாக நான் அனுப்பிய கேள்விகளுக்கு கிருஷ்ணப்பிரியா பதில் அனுப்பி வைத்திருந்தார். அதில், செந்தில்பாலாஜி குடும்பத்திற்கும் சசிகலா குடும்பத்திற்கும் இடையே தொடரும் உறவுப் பற்றிய கேள்வியும் முக்கிய இடம் பெற்றிருந்தது.
ஒரு பக்க அளவுக்கு நேர்காணல் வந்திருந்தபோது, கிருஷ்ணப்பிரியாவின் பேட்டி நன்றாகவே வந்திருக்கிறது. இரண்டு பக்கம் அளவிற்கு மேலும் சில கேள்விகளை பெற்று தருமாறு ஆசிரியர் குழு கேட்டுக் கொண்டது.அதன்பேரில், மேலும் சில கேள்விகளுக்கு பதில்களைப் பெற்று வழங்கினேன்.
கேள்வி பதில்களில் பெரிதாக திருத்தம் செய்யாமல், இரண்டு பக்கத்திற்கு அழகான பக்க வடிவமைப்புடன், கிருஷ்ணப்பிரியாவின் முழு புகைப்படமும் வைக்கப்பட்டு, அச்சுக்கு செல்ல தயாராக இருந்தது. அதைப்பார்த்துவிட்டுதான், இரவு நேரத்தில் இல்லம் திரும்பினேன். சிறிதுநேரத்தில் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது.
கிருஷ்ணப்பிரியாவின் நேர்காணல் சிறப்பாக வந்திருந்தாலும் அந்த பேட்டி இதழில் இடம் பெற்று வாசகர்களுக்குச் சென்றால், டிடிவி தினகரனுக்கு கோபம் வந்துவிடும். எனவே, அந்த பேட்டியை பிரசுரிக்க வேண்டாம் என்று குமுதம் குழும நிர்வாக இயக்குனர் யோசிக்கிறார். அந்த பேட்டியை பிரசுரிக்க வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. நிறைமாத சிசு, வலுக்கட்டாயமாக கலைக்கப்பட்டால் எவ்வளவு வலி ஏற்படுமோ அதுபோல அன்று ஏற்பட்டது.
ஆனால், குமுதம் நிர்வாகத் தரப்பில் இருந்து அப்படியொரு தகவல் சொல்லப்படவில்லை என்றும், அந்தப் பேட்டி வெளியானால் இளவரசி ஜெயராமன் குடும்பத்தினருடான எனது தொடர்பு நெருக்கமாகி விடும் என்று ஆசிரியர் குழுவிலேயே முக்கியமானவர் கருதியதால்தான் கிருஷ்ணப்பிரியாவின் பேட்டி நிறுத்தப்பட்டது என்று தகவல் கிடைத்தது. அதன் உண்மைத் தனமையை ஆராயக் கூட எனக்கு தோன்றவில்லை.
குமுதம் ரிப்போட்டரில் பிரசுரமாகாத கிருஷ்ணப்பிரியாவின் பேட்டி, ஒன்றிரண்டு இதழ்கள் கழித்து ஜுனியர் விகடனில் அந்த நிறுவனத்தின் செய்தியாளர் மூலம் எடுக்கப்பட்ட பேட்டி பிரசுரமானது. அன்றைக்கு ரிப்போர்ட்டருக்காக கிருஷ்ணப்பிரியாவிடம் எடுத்த நேர்காணல்தான் இது…..(2018 டிசம்பர் 19)
பழைய சோறுதான்..ஆனால் அதன் வீரியம் குறைந்ததாக எனக்கு தோன்றவில்லை.
கேள்வி – தினகரனின் தவறான ஆலோசனையால்தான் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிபோனதாக கூறப்படுவது பற்றி?
கிருஷ்ணப்பிரியா – ஆலோசனைகளைப்பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. ஒன்றை மட்டும் உறுதியாக சொல்ல முடியும், தினகரனால்தான் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி மட்டுமல்ல கட்சியும் பிளவுபட்டது.
கேள்வி – சசிகலா குடும்பத்திற்கு ஆதரவாகத்தானே தினகரன் எதிர்ப்பு அரசியல் செய்கிறார். அவரை ஏன் நீங்கள் எதிர்த்து வருகிறீர்?
கிருஷ்ணப்பிரியா – “மக்கள்” நலனை கருத்தில் கொண்டே அரசியல் செய்யப்பட வேண்டும் என்ற ஆணித்தரமான கருத்துடையவள் நான். ஒரு குடும்ப நலனுக்காகவோ அல்லது தனி நபர் நலனுக்காகவோ அல்ல.
கேள்வி – போயஸ் கார்டன் சொத்துக்கு தீபா, தீபக் உரிமை கொண்டாடுவது நியாயம்தானே?
கிருஷ்ணப்பிரியா – எது நியாயம், எது அநியாயம் என்பது அவரவர் பார்வையை பொருத்தது. புரட்சிதலைவி அம்மா அவர்களை பொருத்தவரையில் மக்களுக்காகவே வாழ்ந்தவர். அதனால், அவருடைய சொத்துக்கள் மக்கள் நலனுக்காக பயன்படுத்தப்படவேண்டும் என்பதுதான் என்னை பொருத்தவரையில் “நியாயம்”.
கேள்வி – தன்னுடைய மறைவிற்கு பிறகு தனது சொத்துக்கள் யாருக்கு சொந்தமாக வேண்டும் என ஜெயலலிதா ஏதாவது கூறியதுண்டா?
கிருஷ்ணப்பிரியா – எனக்கு தெரிந்த வரையில் அவ்வாறு கூறியதில்லை. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இவ்வளவு விரைவாக இவ்வுலகை விட்டு மறைவார் என்று எவருமே நினைக்காத பட்சத்தில், திடமான நெஞ்சம் கொண்ட அவர் எவ்வாறு நினைத்திருப்பார்? அதனால் அவ்வாறான ஒரு உரையாடலே எனக்கு தெரிந்து நடைபெற்றிருக்க வாய்ப்பில்லை.
கேள்வி – தண்டனை காலம் முடிந்த பிறகும் சசிகலா சிறையிலேயே இருக்க வேண்டும் என ஆளும் கட்சியான அதிமுக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பற்றி?
கிருஷ்ணப்பிரியா – அவ்வாறு ஒரு செய்தி என் கவனத்திற்கு வரவில்லை.
கேள்வி – கர்நாடக சிறையில் விதிகளை மீறி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு சொகுசு வசதிகள் கிடைக்க விவேக் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக புகார் பற்றி?
கிருஷ்ணப்பிரியா – எனது இளைய சகோதரரான விவேக் பற்றி பரவி வரும் இச்செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.
கேள்வி – இளவரசி குடும்பத்தின் சொத்துக்கள் முழுவதும் செந்தில் பாலாஜியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது பற்றி உங்கள் கருத்து?
கிருஷ்ணப்பிரியா – திரு.செந்தில் பாலாஜிக்கும் எனது குடும்பத்தினருக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாத பட்சத்தில் இந்த கேள்வியே அவசியமற்றது.
கேள்வி – ஜெயலலிதா போல் உடையலங்காரம் செய்வதன் பின்னணியில் அரசியல் ஆர்வம் உங்களுக்கும் ஏற்பட்டு விட்டதா?
கிருஷ்ணப்பிரியா – ஊடகங்களும், பத்திரிகை நண்பர்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை பற்றி விமர்சனங்கள் எழுதத்தெரிந்த அளவிற்கு, அவரை கூர்ந்து கவனித்தது இல்லை என்பது இக்கேள்வியில் இருந்தே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. புரட்சித்தலைவி அம்மா அவர்கள் அரசியலில் ஈடுபட்ட பிறகு நான் உடுத்துவது போல் கைத்தறி துணிகளை உடுத்தவோ, என் போன்ற சிகை அலங்காரமோ என்றுமோ செய்தது கிடையாது. அதுமட்டுமல்ல, புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமக்கு பிடித்து, தமக்காக வாங்கப்பட்டு எமக்கு பரிசளித்த எத்தனையோ கைக்கடிகாரங்கள் என்னிடம் இருந்தும் அவற்றை கூட நான் அணிவதில்லை.
நான் அடிக்கடி அணிவது “Apple” நிறுவனத்தின் “iWatch” என்ற கைக்கடிகாரமே. அம்மா அவர்கள் என்றுமே நான் அணிவது போல் “iWatch”ஐ பயன்படுத்தியதே இல்லை. அவ்வாறு இருக்கும்போது, எவ்வாறு அம்மா அவர்களின் உடையலங்காரத்தையும், எனது உடையலங்காரத்தையும் ஒப்பிடுகிறீர்கள் என்பதே விந்தையான வேடிக்கையாக உள்ளது. அதுமட்டுமல்ல, நான் உடுத்துவது போல் பெண்கள் பலரும் உடுத்தி வருகிறார்கள் என்பதனை ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள், தமது கண் கண்ணாடியை தூசி தட்டி, சுத்தம் செய்து அணிந்து பார்த்தால் புலப்படும்.
நான், என்றுமே எனது “சுய அடையாளத்தோடு” வாழவேண்டும் என்ற கொள்கையுடையவள். அரசியல் ஆர்வம் என்பது அனைவருக்குமே அவசியமான ஒன்று. நாம் உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரையிலான, நம் அன்றாட வாழ்வு அனைத்திலும் அரசியல் கலந்தே இருக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
இவ்வாறாக அந்த நேர்காணல் நிறைவடைந்திருந்தது..
இப்போது இதை எதற்கு நினைவுப்படுத்துகிறேன் என்றால், வி.வே.சசிகலா விடுதலை ஆகி வருவதற்கு முன்பாக, முகநூல் மற்றும் டிவிட்டர்களில் பல்வேறு ஆக்கப்பூர்வமான கருத்துகளை எழுதி வந்தவர். அரசியலுக்கு அப்பாற்பட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தகவல்களை பகிர்ந்து வந்தவர், உணவு வகைகள் தயாரிப்பு குறித்து வீடியோக்களை பகிர்ந்து வந்தவர், இப்போது தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றது போல் இருப்பது ஏன்? என்பதுதான் பல்வேறு சந்தேகங்களை கிளப்பி இருக்கிறது.
வி.கே.சசிகலா வருகையினலால், ஜெயா டிவியில் விவேக் ஜெயராமனின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது என்ற ஒருபேச்சும் எழுந்திருக்கும் இந்த நேரத்தில், கிருஷ்ணப்பிரியா, டாக்டர் வெங்கடேஷ், டாக்டர் சிவக்குமார் உள்ளிட்ட குடும்பத்து உறவினர்களின் அரசியல் அபிலாஷைகளுக்கும் வி.கே.சசிகலா, தடை போட்டிருக்கிறார் என்பதால்தான், கிருஷ்ணப்பிரியா, தலைமறைவு வாழ்க்கைக்கு சென்றுவிட்டார் என்கிறார்கள் அவரது நலம் விரும்பிகள்..
திருநங்கை அப்சரா ரெட்டியின் ஒவ்வொரு முன்னேற்றதிலும் அதீத அக்கறை காட்டியவர் கிருஷ்ணப்பிரியா. அப்சரா பிரபலங்களோடு கலந்துரையாடும் வானமே எல்லை என்ற சிறப்பு நிகழ்ச்சியும், கிருஷ்ணப்பிரியாவின் தூண்டுதலின் பேரிலேயே ஜெயா டிவியில் ஒளிப்பரப்பானது. இப்படி புகழ் வெளிச்சம் மறுக்கப்பட்ட பலருக்கு, பாதை அமைத்து கொடுத்த கிருஷ்ணப்பிரியாவை, வி.கே.சசிகலா சிறை வாழ்க்கைக்கு தள்ளிவிட்டாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள் அவரால் பயனடைந்தவர்கள்.
இப்படிபட்ட நேரத்தில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இடையிலான மோதலுக்கு இடையே, வி.கே.சசிகலா விஸ்வரூபம் எடுத்து, அதிமுக.வை மீட்டெடுப்பார் என்று ஒரு கூட்டமும் முழங்கிக் கொண்டிருக்கிறதே..இதெல்லாம் வி..கே.சசிகலா சம்மதத்துடன்தான் அல்லது தூண்டுதலின் பேரில்தான் நடக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறார்கள் இ.பி.எஸ். ஆதரவு அதிமுக தலைவர்கள் சிலர்.