Sat. Nov 23rd, 2024

கோவை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறையின் கூடுதல் டிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் நள்ளிரவில் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து, இன்று சென்னை காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உளவுத்துறை கூடுதல் டிஜிபி. ஆக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி ஏற்றுக் கொண்டார்.

1995 ஆம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான இவர், தருமபுரி மற்றும் பரமக்குடியில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராக பணியை தொடங்கினார். 2000 ஆம் ஆண்டில் காவல்துறை கண்காணிப்பாளராக கடலூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 2004 வரை பணியாற்றினார்.

தொடர்ந்து பல்வேறு பதவிகளில் பணியமர்த்தப்பட்ட டேவிட்சன், 2012 ஆம் ஆண்டில் தமிழக அரசின் உளவுத்துறை டிஜஜி. ஆக பணியில் அமர்த்தப்பட்டார். அதற்கடுத்த ஆண்டே ஐ.ஜி. ஆக பதவி உயர்வு பெற்று மேற்கு மண்டல சட்டம் ஒழுங்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டில் மதுரை காவல்துறை ஆணையராகவும், 2020 ல் காவல்துறை பயிற்சி நிறுவனத்தில் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்ட இவர், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில், கோவை மாநகர காவல்துறை ஆணையராக கடந்த மார்ச் மாத இறுதியில் பணியமர்த்தப்பட்டார்.

சிறப்பான காவல்துறை பணிக்காக குடியரசுத் தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை டேவிட்சன் தோவசீர்வாதம் பெற்றுள்ளார்.

இதேபோல், சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக நியமிக்கப்பட்ட தாமரைக்கண்ணனும் இன்று பதவியேற்றுக் கொண்டார். அந்த பதவியில் பணியாற்றி வந்த ஜெய்ந்த் முரளி ஐபிஎஸ்., பொறுப்புகளை அவரிடம் ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார்.

1993 பேட்ஜ் ஐ.பி.எஸ். அதிகாரியான இவர், உளவுத்துறை, சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

2012 ஆம் ஆண்டில சென்னை காவல்துறை கூடுதல் ஆணையராக இவர் பணியாற்றியபோது, வேளச்சேரியில் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில கொள்ளையர்களை என்கவுண்டர் செய்தது பரபரப்பாக பேசப்பட்டது. அப்போதைய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி, தாமரைக்கண்ணன் தலைமையிலான காவல்துறை அதிகாரிகளை வெகுவாக பாராட்டினார்.