முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட மு.க.ஸ்டாலின், இன்று நண்பகலில் தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அலுவலகமான தலைமைச் செயலகத்திற்கு வந்து, முதலமைச்சருக்கான பணிகளை தொடங்கினார். தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நான்கு உத்தரவில் கையெழுத்திட்ட மு.க.ஸ்டாலின், வாக்குறுதியாக அளிக்காதபோதும், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனோ சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும் என்ற ஐந்தாவது உத்தரவிலும் கையெழுத்திட்டார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்ட 5 அரசாணைகளின் விவரம் இதோ…
1.₹4000 நிவாரண தொகை: கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியாக 4000 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் அளித்திருந்தார் மு.க.ஸ்டாலின். அதன்படி, வரும் ஜுன் 3 ஆம் தேதி மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 4000 ஆயிரம் ரூபாய் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்குவதற்கான உத்தரவில் முதல் கையெழுத்திட்டார்.
இதேபோல, இரண்டாவதாக ஆவின் பால் லிட்டருக்கு ₹3 குறைக்கப்படுவதற்கான உத்தரவிலும், மூன்றாவதாக, சாதாரண நகர பேருந்துகளில் பெண்கள் இலவச பயணத்திற்கான உத்தரவிலும், நான்காவதாக புகார் மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணும் உத்தரவிலும் கையெழுத்திட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஐந்தாவதாக, கொரோனோ உச்சமெடுத்து வரும் இன்றைய நிலையில், தனியார் மருத்துவமனைகளில் வழங்கப்படும் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்ற உத்தரவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.
முன்னதாக இன்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற எளிய விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். தொடர்ந்து 33 அமைச்சர்களுக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பதவியேற்பு விழா நிறைவடைந்தவுடன் விருந்தினர்களுக்கு .விருந்து அளித்தார் ஆளுநர். அதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சியான அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் மற்றும் அமைச்சர்கள், திமுக கூட்டணிக்கட்சித்தலைவர்கள், நீதியரசர்கள், சிறப்பு விருந்தினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழா முடிந்தவுடன் நேராக கோட்டைக்கு வந்து முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டனர். அதற்கு முன்பாக, பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.