திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள தமிழக அமைச்சரவை பட்டியல் நேற்றைய தினம் வெளியான போது திமுக இளைஞரணி நிர்வாகிகள் உள்பட முன்னணித் தலைவர்கள் அனைவரும் பட்டியலை மேலும் கீழுமாக படித்து, படித்து ஒரே ஒருவரின் பெயரை மட்டுமே திரும்ப திரும்ப தேடினார். ஆனால்,அவர்கள் எதிர்ப்பார்த்த பெயர் இல்லாததால் அவர்கள் அனைவரும் சோர்வுற்றனர்.
இப்படி ஒட்டுமொத்த திமுக.வும் தேடிப் பார்த்த பெயருக்குரிய வி.வி.ஐ.பி. யார் என்று கேட்டால், உதயநிதி ஸ்டாலின்தான் என்கிறார்கள், அண்ணா அறிவாலயத்தில் உள்ள முக்கிய நிர்வாகிகள். சென்னை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் நேற்று மாலை முதல் நள்ளிரவு வரை, அமைச்சரவையில் உதயநிதி ஸ்டாலின் ஏன் சேர்க்கப்படவில்லை என்று கேட்டு வந்த தொலைப்பேசி அழைப்புகளை கணக்கிலேயே எடுத்துக் கொள்ள முடியாது.
மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருந்த இளைஞரணி நிர்வாகிகள் உள்பட கலைஞர் மு.கருணாநிதி குடும்பத்தின் மீது அதீத விசுவாசம் காட்டி வரும் திமுக முன்னணி நிர்வாகிகள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை ஆயிரக்கணக்கானோருக்கு அமைச்சரவையில் உதயநிதி சேர்க்கப்படவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொண்டர்களின் ஏமாற்றத்தை போக்கும் வகையில், உதயநிதி ஸ்டாலினுக்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பதவியை வழங்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். அன்றைய தினம் திமுக இளைஞரணி நிர்வாகிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக.விற்கும் கொண்டாட்டமாகவே அமையும். அதுவரை பொறுமை காத்திருக்க வேண்டியது அவசியம் என்று கூறினார் அண்ணா அறிவாலய நிர்வாகி..
உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பதவியா? என்ற கேள்வியை அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் முன்வைத்து விசாரித்தோம்.. மெல்லிய புன்னகையுடன் பேச ஆரம்பித்த உதயநிதியின் நலம் விரும்பிகள், உதயநிதியின் அரசாங்க பயணத்திற்கு மு.க.ஸ்டாலின் வைத்திருக்கும் திட்டத்தை விவரித்தார்கள்
அமைச்சரவையில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பதவியை உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கினாலும், தனக்கு கீழ்தான் அவர் செயல்பட வேண்டி வரும். ஊடக வெளிச்சம் மட்டுமல்ல, பொதுமக்களின் கவனமும் தன் மீதுதான் முழுமையாக இருக்கும். அதனால், தன் மகனாக இருந்தாலும் அவர் இப்போது இளைஞரணி தலைவராக இருக்கிறார். அந்தப் பதவிக்கென்று தனித்துவமிக்க அடையாளம் இருந்தால்தான் திமுக இளைஞரணிகள் உற்சாகமாகி அடுத்த கட்டத்திற்கு திமுக.வை எடுத்துச் செல்வார்கள். அதனால், உதயநிதி ஸ்டாலினை சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட வைத்து, தன் வழியிலேயே அவரும் அதிகாரப் பயணத்தை தொடங்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்னும் 6 மாதத்திற்குள்ளாக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு விடும். அப்போது அவர் சென்னை மேயர் தேர்தலில் திமுக வேட்பாளராக நிறுத்தப்படுவார். சட்டமன்றத் தேர்தலில் திமுக.வுக்கு சென்னை மாவட்ட மக்கள் அமோக ஆதரவு தந்துள்ளனர். அதனால், மேயர் தேர்தலில் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி என்பது இப்போதே உறுதியானதுதான்.
6 மாத காலம் வெகு விரைவாக ஓடிவிடும். இந்த காலத்தில், தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது 100 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பணிகளை உதயநிதி ஸ்டாலின் மேற்பார்வையிட்டு , அரசு நிர்வாகத்தின் அனுபவத்தை பெற்றுக் கொள்ளட்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
சென்னை மேயர் என்ற தனித்த அதிகாரமிக்க பதவியை உதயநிதி ஸ்டாலின் அலங்கரிக்கப் போகிறார் என்ற செய்தி தலைவர் ஸ்டாலின் தெரிவித்த போது எங்களுக்கு எல்லாம் தீபாவளி கொண்டாட்டம்தான் கண் முன்னே தெரிந்தது. அந்த நாளுக்காக உற்சாகமாக காத்திருக்கிறோம் என்று பேசுகிறார்கள் உதயநிதி ஸ்டாலினின் நெருங்கிய நண்பர்கள்.
உதயநிதி ஸ்டாலினின் அரசு நிர்வாகப் பயணம் சென்னை மேயர் பதவியில் இருந்தா தொடங்கப் போகிறது ? என்று திமுக முன்னணி நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு. கருணாநிதியைப் போலவே, தற்போதைய தலைவர் மு.க.ஸ்டாலினும் சிந்தித்து செயல்படுகிறார் என்ற முன்னோட்டத்துடன் பேச தொடங்கினார்.
1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மு.க.ஸ்டாலின் வெற்றிப் பெற்றபோதே, அவருக்கு அமைச்சரவையில் அப்போதைய முதல்வர் கருணாநிதி இடம் வழங்கியிருக்கலாம். அப்போது, அவரின் முடிவுக்கு எதிராக யாரும் கருத்து சொல்லியிருக்க மாட்டார்கள்.
அதேபோல, 1996 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்தபோதும், மு.க.ஸ்டாலின் எம்.எல்.ஏ.வாகதான் இருந்தார். அப்போதும் அவரை அமைச்சராக்கி அழகு பார்த்திருக்கலாம் கலைஞர் மு.கருணாநிதி. ஆனால், அதற்கு மாறாக, அவரை சென்னை மேயர் தேர்தலில் போட்டியிட வைத்து, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையை மு.க.ஸ்டாலினுக்கு தேடித் தந்தவர் மறைந்த முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி. 2001 ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலிலும் வெற்றிப் பெற்று இரண்டாவது முறையாகவும் சென்னை மேயரானார் மு.க.ஸ்டாலின்.
இரண்டு முறை மேயராக பணியாற்றிய அனுபவத்திற்குப் பிறகுதான் 2006 ம் ஆண்டு உள்ளாட்சித்துறை அமைச்சராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார் மு.க.ஸ்டாலின். தனது தந்தை தனக்கு கற்றுத் தந்த பாதையிலேயே தனது தனையனான உதயநிதி ஸ்டாலினையும் வழிநடத்த திட்டமிட்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.
சென்னை மேயர் எனும் அதிகாரப் பதவியில் இருந்து உதயநிதி ஸ்டாலின் அரசு நிர்வாகப் பயணமும் தொடங்குவது நல்லதுதான். திமுக. கோட்டையாக விளங்கும் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி, அவரது தந்தைக்கு இணையான புகழ் வெளிச்சத்தை உதயநிதி ஸ்டாலின் பெற முடியும்.
அந்த வகையில், சென்னை மேயராக உதயநிதி ஸ்டாலின் வெற்றிப் பெற்று அந்த அரியணையை அலங்கரித்தால், திமுக.வில் உள்ள இளைஞரணி நிர்வாகிகளுக்கு புது உத்வேகம் பிறக்கும். அதன் மூலம் திமுக மேலும் மேலும் வலுவாகும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருக்கிறது என்று பெருமித உணர்வோடு கூறி முடித்தார் திமுக முன்னணி நிர்வாகி.