ஸ்டெர்லைட் ஆலையை திறந்து ஆக்சிஜன் உற்பத்தியை மேற்கொள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்க கோரி வேதாந்தா தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், முதல் நாளில் இருந்து ஆலையை திறப்பதற்கு ஆதரவாகவே கருத்து தெரிவித்து வந்தது.
உச்சநீதிமன்றத்தின் எண்ணத்தை புரிந்துகொண்ட மத்திய அரசும், வேதாந்தா நிறுவனத்திற்கு சாதகமாகவே வாதம் செய்து வந்தது. ஆனால், ஆலையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட காரணங்களை கூறி ஆலையை திறக்க அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று வாதிட்டு வந்தார்.
தூத்துக்குடியில் மக்களின் கருத்துகளை கேட்ட மாவட்ட ஆட்சியரின் கருத்து உள்பட தமிழக அரசின் நிலைப்பாட்டையும் பிரமாண பத்திரமாக தமிழக அரசு தாக்கல் செய்தது.
இந்நிலையில் இன்று காலை மீண்டும் இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமனறத்தில் நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள், தமிழக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை சில மாற்றங்களுடன் ஏற்றுக் கொள்கிறோம் என்றும், ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்சிஜன் மட்டுமே உற்பத்தி செய்ய வேண்டும்; தாமிர ஆலைக்குள் செல்லக் கூடாது என்றும் வேதாந்த நிறுவன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆக்சிஜன் உற்பத்தி கூடத்தை இயக்க எவ்வளவு நபர்கள் தேவை என்பதை கண்காணிப்பு குழு முடிவு செய்யட்டும் என்றும் தமிழகத்தை சேர்ந்த 3 சுற்றுச்சூழல் நிபுணர்கள் கண்காணிப்பு குழுவில் இடம்பெறுவர் என்றும் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆக்சிஜன் உற்பத்தியை காரணமாக வைத்துக் கொண்டு ஆலையில் வேறு எந்த அலகையும் இயக்கக் கூடாது என்றும் ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படவுள்ள ஆக்சிஜனை தமிழகத்திற்குதான் தர வேண்டும் என்றும் தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் வேண்டுகோள் விடுத்தார்.
ஆனால், அதற்கு மத்திய அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஸ்டெர்லைட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தேவைப்படும் மாநிலங்களுக்கு நாங்கள்தான் பிரித்தளிப்போம் என்று மத்திய அரசு வாதிட்டது.