மே 2 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படவுள்ளன. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் அரசியல் கட்சி மற்றும் இதர வேட்பாளர்களின் முகவர்களுக்கு கொரோனா சோதனை கட்டாயம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 2-ந் தேதி நடைபெற உள்ளது.வாக்கு எண்ணிக்கை : வேட்பாளர்களின் முகவர்கள் முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதற்குரிய சான்றிதழுடன் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வர வேண்டும் என தேர்தல் ஆணையம் உறுதிபட தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று செய்தியாளர்களிடம் விளக்கி கூறினார். அதன் விவரம் இதோ…
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வரும் வேட்பாளர்களின் முகவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதற்கான சான்றிதழுடன் வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை துவங்கும் 72 மணி நேரத்திற்கு முன்பாக, முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, அதில் நெகடிவ் என்று முடிவு வந்திருந்தால் மட்டுமே, அந்த சான்றிதழோடு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரவேண்டும். அங்குள்ள அதிகாரியிடம் முகவர்கள் கொரோனோ பரிசோதனை சான்றிதழை கட்டாயம் வழங்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின் போது முகவர்கள் கட்டாயம் முககவசம் அணிந்திருக்க வேண்டும் அலுவலர்கள் மற்றும் முகவர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும். .
சராசரியாக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
பதிவான தபால் வாக்குகளை முதலில் 500, 500ஆக பிரித்து பிறகு எண்ணப்படும். குலுக்கள் முறையில் ஒரு தொகுதிக்கு 5 விவிபேட் எந்திரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை சரிபார்க்கப்படும்.
ஏப்ரல் 23ந் தேதி வரை ஐந்து லட்சம் தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளன.
இவ்வாறு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறினார்.