Mon. Nov 25th, 2024

தேர்தல் பிரசாரத்திற்காக சேலம் சென்றிருந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை, சிறுமி ஒருவர் தனது உணர்ச்சிக்கரமான பேச்சால் கவர்ந்தார். அதைப் பார்த்து, தனது பிரசார வாகனத்தின் மேலே வரவழைத்து,அவரின் கையில் மைக் கொடுத்தார். அந்த சிறுமியும் மைக்கில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் சிறப்பான சொற்பொழிவுகளில் இருந்து பல்வேறு கருத்துகளை மேற்கோள் காட்டி பேசி, உதயநிதி ஸ்டாலினை மட்டுமின்றி, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்களையும் வியப்பில் ஆழ்த்தினார்.

சிறுமியின் சரளமான பேச்சால் உற்சாகமான உதயநிதி ஸ்டாலின், நான் உன்னை கிஸ் பண்ணவா என கேட்டு, தனது அன்பின் வெளிப்பாடாக அந்த சிறுமியின் கன்னத்தில் முத்தமிட்டார். எதிர்பாராத இந்த அன்பினால் ஆனந்த கண்ணீர் சிந்திய அந்த சிறுமியும் பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின் கண்ணத்தில் முத்தமிட்டார். அன்பின் வெளிப்பாடாக நடைபெற்ற இந்த காட்சியை கண்ட அங்கிருந்த மக்கள், நெகிழ்ச்சியடைந்தனர்.

தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த உதயநிதி ஸ்டாலின், அந்த சிறுமியின் பேச்சாற்றலை மேலும் உற்சாகப்படுத்தும் வகையில் கடிதம் ஒன்றை அந்த சிறுமிக்கு அனுப்பி வைத்துள்ளார். சேலம் சீல்நாயக்கன்பட்டி ராமையன் நகரைச் சேர்ந்த திமுக உறுப்பினர் செந்தில் என்பவரின் மகளான சிறுமி யோக ஸ்ரீக்கு அந்த கடிதம் சென்று சேர்ந்த போது அவரது தந்தை, கொரோனோவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்திருக்கிறார்.

உதயநிதி ஸ்டாலினின் கடிதத்தைப் படித்து பார்த்த அந்த சிறுமிக்கும், அவரது பெற்றோர்களுக்கும் ஆனந்த கண்ணீர் பெருக்கெடுத்துள்ளது.

தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலும், கடிதம் மூலம் நெகிழ்ச்சியடைந்த அந்த சிறுமி யோக ஸ்ரீ, நன்றி கலந்த அன்பை உதயநிதி ஸ்டாலினுக்கு ஆடியோ மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலினின் மனதில் இடம் பிடித்ததுடன் அவரது பாராட்டையும் பெற்ற யோக ஸ்ரீக்கு, சேலம் மாவட்ட திமுக.வினர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.