ஓய்வுக்காக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மே 2 ஆம் தேதிக்குப் பிறகு அரியணை ஏறும் திமுக அமைச்சரவையில் யார், யார் அமைச்சர்களாக இடம் பெறப் போகிறார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் தீர்மானித்துவிட்டார் என்ற தகவல், சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு, காட்சி ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.
அமைச்சரவையில் புதுமுகங்கள் நிறையப் பேர் இருப்பார்களா? என்ற கேள்வியை முன்வைத்து திமுக முன்னணி தலைவர் ஒருவரிடம் பேசினோம்..உற்சாகமாகவே பேச தொடங்கினார் அவர்.
மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைவராக பதவியேற்ற தளபதி மு.க.ஸ்டாலின், முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறார். அவரின் சத்திய வார்த்தையாக 200 தொகுதிக்கு மேல் திமுக வெற்றி பெறும் என்பதை அப்படியே ஏற்றுக்கொண்டாலும் கூட, பரவலாக வருகிற தகவல்களின் படி, மே 2 க்குப் பிறகு திமுக.தான் ஆட்சி அமைக்கப்போகிறது. அதில் துளியளவும் சந்தேகம் இல்லை எங்களுக்கு.
அப்படியென்றால், திமுக.வின் வெற்றிக்கு முழுக்க, முழுக்க காரணமாக இருப்பவர் மு.க.ஸ்டாலின்தான். ஏனெனில், கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக.வும் கூட்டணிக் கட்சிகளும் பெற்ற அமோக வெற்றிக்கு, அப்போது மோடிக்கு எதிரான அலைதான், திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடி தந்ததாக பேச்சு எழுந்தது.
ஆனால், இன்றைய சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றிப் பெற்று ஆட்சி அமைக்கப் போகிறது என்றால், அந்த வெற்றிக்கு காரணகர்த்தா யாராக இருப்பார், சாட்சாத் மு.க.ஸ்டாலின்தான். இப்போதும்கூட தொலைக்காட்சி உள்ளிட்ட விவாதங்களில் ஒரு கருத்தை, திரும்ப, திரும்ப முன் வைக்கிறார்கள். அதிமுக ஆட்சிக்கு எதிராக, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிருப்தி அலை இல்லவே இல்லை என்கிறார்கள்.
ஆனால், நாங்கள் பிரசாரத்திற்கு சென்ற இடங்களில் எல்லாம் நகர மக்களிடம் ஒருவிதமான மௌனத்தைப் பார்த்தோம். அந்த மௌனம்தான் திமுக.வின் வெற்றிக்கு பெரிதும் உதவியிருக்கிறது. அந்த மௌனம்தான் அதிமுக ஆட்சிக்கு, எடப்பாடிக்கு எதிரான அதிருப்தி அலையாக திரும்பி இருக்கிறது.
வெளிப்பார்வைக்கு தெரியாத எதிர்ப்பு அலையை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்திருக்கிறது திமுக. அதற்கு தளபதி மு.க.ஸ்டாலின் முன்னெடுத்த தேர்தல் நேர யுக்திகளும், எடப்பாடிக்கும், மோடிக்கும் எதிராக அவர் மேற்கொண்ட தேர்தல் பரப்புரையும்தான், காரணம். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத திமுக., தேர்தல் நேரத்தில் எழுச்சியோடு எழுந்து நிற்கிறது என்று சொன்னால், அதற்கு மு.க.ஸ்டாலின் என்று தனிப்பட்ட ஒருவரின் கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பும்தான், காரணம்.
அப்படி, தனியொருவராக திமுக.வை ஆட்சியில் அமர வைக்கும் நிலைக்கு கொண்டு வந்திருப்பவர், தனது தலைமையிலான அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு அளிப்பது என்பது தொடர்பாக எவ்வளவு ஆழ்ந்து யோசித்து வருவார். அதற்காக அவர் எடுத்துக் கொள்ளும் சிரத்தைகளை எல்லாம் பார்க்கும்போது, ஊடகங்கள் வெளிப்படுத்தும் யூகங்களின் அடிப்படையில் நிச்சயம் இருக்காது என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக இருக்கிறது.
அதற்கு காரணம், திமுக வேட்பாளர்கள் பட்டியல் பற்றி எவ்வளவோ செய்திகள் வெளிவந்தன. ஐபேக் நிறுவனம் தயாரித்து கொடுத்த வேட்பாளர்கள் பட்டியலைதான் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் எனவும் தகவல் வெளியானது. ஆனால், மு.க.ஸ்டாலின், மறைந்த தலைவர் கலைஞர் வழியில்தான் வேட்பாளர்களை அறிவித்தார்.
அனுபவமிக்கவர்களுக்கு 70 சதவிகித வாய்ப்பும், இளம்தலைமுறையினருக்கு 30 சதவிகித வாய்ப்பும் வழங்கினார். அப்போதே நாங்கள் எல்லாம் புரிந்துகொண்டோம். ஊடகங்கள் சொல்வதைப் போல, குடும்ப உறவுகளின் அழுத்தத்திற்கு பெரியளவில் முக்கியத்தும் கொடுக்கும் குணம் கொண்டவர் இல்லை தளபதி என்பதை.
அந்த அடிப்படையில், அமைச்சர்கள் பட்டியலிலும் அனுபவமிக்கவர்களுக்கு 70 சதவிகிதமும், இளம்தலைமுறையினருக்கு 30 சதவிகிதமும் வாய்ப்பு கொடுப்பார் தளபதி. அவருடைய நீண்ட கால அரசியல் அனுபவத்தின் வெளிப்பாடாக இதை எடுத்துக் கொண்டாலும்கூட, யாருடைய அழுத்தத்திற்கும் கட்டுப்படுவராக தளபதி இல்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. இப்படிபட்ட நிலையில்தான், ஊடகங்கள் வாயிலாக வெளியாகும் தகவல்களில், அந்தந்த ஊடகங்களின் குரூரங்களும் வெளிப்படுகின்றன.
திமுக முன்னணி நிர்வாகிகளுக்கு, பிற நிர்வாகிகள் மீது விருப்பு, வெறுப்பு இருக்கலாம். ஆனால், ஊடகங்கள் வெறுப்பை உமிழ்வதுதான் வேதனையாக இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றிரண்டு தகவல்களை சொல்கிறேன். அண்ணாநகர் சிட்டிங் எம்.எல்.ஏ. மோகன், அமைச்சர் பதவிக்கு அடிபோடுவதாகவும், அதற்கு அவரது மகன் கார்த்திக், தளபதி மருமகன் சபரீசன் மூலம் காய் நகர்த்துவதாகவும், அதுவும் வீட்டு வசதித்துறையை குறி வைப்பதாகவும் ஊடகங்கள் கொளுத்திப் போடுகின்றன.
இந்த தகவலை வெளியிட்ட ஊடகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மோகன் மீது எந்தளவுக்கு குரோதம் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். திமுக எம்எல்ஏ மோகனுக்கு தலைவர் மு.க.ஸ்டாலினை நேரிடையாக தெரியாதா? இல்லை மோகனைப் பற்றி தளபதிக்கு எதுவுமே தெரியாதா? மோகனுக்கு அமைச்சர் பதவியை தர தளபதி முடிவெடுத்துவிட்டால், அதற்கு யாராவது எதிர்ப்பு தெரிவிக்க முடியுமா? தனக்கு அமைச்சர் பதவி கேட்டு மோகன், எதற்கு தன் மகன் மூலம் சபரீசனின் சிபாரிசை நாட வேண்டும்?
மோகனுக்கு அமைச்சர் பதவி கிடைத்துவிடக் கூடாது என்று நஞ்சை விதைக்கும் அந்த ஊடகம், சேகர்பாபுக்கு அமைச்சர் பதவியைப் பெற்றுத் தர துடிக்கிறது. இதில் இருந்து என்ன தெரிகிறது., ஊடகங்களும் யாரால் தங்களுக்கு ஆதாயம் கிடைக்குமோ, அவருக்கு முறைவாசல் செய்ய தயாராக இருக்கிறது என்றுதானே அர்த்தம். ஊடகங்களின் இந்த சித்துவிளையாட்டுகளை எல்லாம் அறியாதவரா? எங்கள் தளபதி.
இன்னொரு உதாரணம், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா பிரியதர்ஷினியை அமைச்சராக்க வேண்டும் என்று சில ஊடகங்கள் முஸ்தீபு காட்டுகின்றன. ஆனால், அதே மாவட்டத்தில் மாநகர மத்திய மாவட்டச் செயலாளராக இருக்கும் ஆர். ராஜேந்திரன் எம்.எல்.ஏ.வை கண்டுகொள்ளவில்லை. மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் காலத்தில் இருந்தே ஆர்.ராஜேந்திரன், தளபதியின் நம்பிக்கைக்குரிய நிர்வாகி. அப்படிபட்டவரை புறக்கணித்துவிட்டு, ரேகா பிரியதர்ஷினிக்குதான் அமைச்சர் பதவி கிடைக்கும் என்று ஊடகங்கள் செய்தியை பரப்புகின்றன.
ஊடகங்களின் விருப்பு, வெறுப்புக்கு ஏற்ப அமைச்சரவைப் பட்டியலை தயாரிக்க மாட்டார் திமுக தலைவர் தளபதி என்பதில் 100 சதவிகித நம்பிக்கை எங்களுக்கு எல்லாம் இருக்கிறது என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார், திமுக முன்னணி தலைவர்.
[…] […]