அ.திமு.க. அரசின் சாபக்கேடு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர். அதிமுக.வில் அவர் எப்படி எம்.எல்.ஏ. வாக ஆனார், எவ்வளவு கேவலமான யுக்தியை பயன்படுத்தி சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை பெற்றார் என்பதையெல்லாம் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமல்ல தமிழகமே நன்கு அறியும்.
சுகாதாரத் துறையை ஒட்டுமொத்தமாக ஊழல் துறையாக மாற்றி அழிச்சாட்டியம் பண்ணிய விஜயபாஸ்கருக்கு ஆதரவாக நின்று கடந்த நான்காண்டுகள் அவரை பாதுகாத்து வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காட்டிக் கொடுக்கும் அளவுக்கு துணிந்துவிட்டாரே விஜயபாஸ்கர் என்று கொந்தளிக்கிறார்கள், முதல்வருக்கு நெருக்கமான அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
அவர்களின் குமறல்களுக்கு காது கொடுத்தோம்.. விஜயபாஸ்கரின் குள்ளநரித்தனத்தை புட்டுபுட்டு வைத்தார்கள் அதிமுக முன்னணி நிர்வாகிகள்.
தமிழக சுகாதாரத்துறைக்கு அமைச்சராக விஜயபாஸ்கர் பொறுப்பு ஏற்றப் பிறகுதான், கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை ஊழலும், முறைகேடுகளும் தலைவிரித்து ஆடத் தொடங்கியது. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இன்றைய தேதி வரை சுகாதாரத்துறையில் நடைபெற்ற அனைத்து ஊழல்களையும் நேர்மையான ஒரு விசாரணை அமைப்பு மூலம் முறையாக விசாரணை நடத்தினால், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர், தனது ஆயுள் முழுவதும் திகார் சிறையில்தான் இருக்க வேண்டும்.
துறை சார்ந்த முறைகேடுகள் இல்லாமல் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா, குட்கா ஊழல், புதுக்கோட்டை மாவட்டத்தில் அவரது குடும்பத்திற்கு சொந்தமான குவாரிகளின் சட்டவிரோத செயல்பாடுகள், கடந்த 7 ஆண்டுகளில் அவரது மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்ட வளர்ச்சித் திட்டங்களில் அடிக்கப்பட்ட கமிஷன்தொகை என அனைத்தையும் அறிந்து அவரது சொந்த தொகுதி மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்ட மக்களே, விஜயபாஸ்கரை கரித்து கொட்டி கொண்டிருக்கிறார்கள்.
முதல்வர் இ.பி.எஸ். தலைமையிலான அமைச்சரவையில் உள்ள எந்தவொரு அமைச்சராவது தேர்தல் பிரசாரத்தின் போது அழுது ஆர்ப்பாட்டம் செய்த காட்சியை நீங்கள் பார்த்ததுண்டா… இந்த தேர்தலில் விஜயபாஸ்கர் தோல்வியடைந்துவிட்டால், அவருக்கு எதிரான ஊழல் புகார்களின் மீதான விசாரணையெல்லாம் சூடு பிடித்து, சிறைத்தண்டனை கிடைத்து விடும் என அவரது ஊர்மக்களே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதனை அவரும் உணர்ந்து வைத்திருப்பதால்தான், எப்படியாவது எம்.எல்.ஏ.வாகிவிட்டால், மே 2 க்குப் பிறகு எதிரிகள் காலில் விழுந்துகூட தப்பித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில்தான் தேர்தல் வெற்றிக்காக மானம் மரியாதையை எல்லாம் இழந்து விராலிமலை தொகுதி மக்களின் காலில் விழுந்து கெஞ்சாத குறையாக தேர்தல் பிரசாரத்தின் போது நீலிக் கண்ணீர் வடித்தார், விஜயபாஸ்கர்.
வாக்குப்பதிவு முடிந்த பிறகு தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டு விஜயபாஸ்கரை தவிர அனைத்து அமைச்சர்களும் அமைதியாகவே இருக்கிறார்கள். அவரவர் துறை ரீதியிலான நடவடிக்கைகளில் ஐஏஎஸ் அதிகாரிகளே முடிவு எடுத்து செயல்படட்டும் என ஒதுங்கி நிற்கிறார்கள். அவர்களைப் போல, விஜயபாஸ்கரால் ஒதுங்கி நிற்க முடியவில்லை. கொரோனோவை பரிசோதிக்கும் கருவியில் கூட கமிஷன் பார்த்தவர்தானே.. கடந்தாண்டைப் போல இப்போதும் கொரோனோ உச்சத்தை தொட ஆரம்பித்தவுடன் அவரது கைகள் நமநமவென அரிக்கத் தொடங்கிவிட்டது.
எரிகிற வீட்டில் பிடுங்கிற வரையில் லாபம், இழவு வீட்டில் திருட்டு போன்ற இழிபிறவிகளின் செயல்களை விட, படு கேவலமான குணத்துடன் மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதையே மக்கள் சேவை என்ற வைராக்கியத்துடன் இருக்கும் டாக்டர் விஜயபாஸ்கர், தேர்தல் நன்னடத்தை விதிகளால் தனது கைகள் கட்டிப் போடப்பட்டிருக்கும் நிலையில், சுகாதாரத்துறையில் கொள்ளை அடிக்க முடியவில்லையே என துடிக்கிறார்.
2வது அலையாக கொரோனோ உச்சத்தை நோக்கி போய் கொண்டிருக்கும் இந்த தருணத்தில் பல ஆயிரம் கோடி ரூபாயை சுருட்ட முடியவில்லையே என்ற தவிப்பில், எரிச்சலில், கடந்த 4 ஆண்டுகளாக தனது எல்லா வகையான முறைகேடுகளுக்கும் அரணாக பாதுகாத்து நின்ற முதலமைச்சர் பழனிசாமியையே காட்டிக் கொடுக்க துணிந்துவிட்டதைதான் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று கோபத்தில் கொந்தளித்தார் அதிமுக முன்னணி நிர்வாகி ஒருவர்.
சிறிதுநேர இடைவெளிக்குப் பிறகு அவரே தொடர்ந்தார்.
தமிழகத்திற்குரிய ஆக்சிஜனை, பிற மாநிலங்களுக்கு அனுப்புவது தொடர்பாக மத்திய அரசு எடுத்த முடிவு தொடர்பாக, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மூலம் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், அதுவும் மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக கருத்து தெரிவிக்க முடியாத நிலையிலும், பிற மாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவுக்கு இ.பி.எஸ்., எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. அப்போதுகூட தமிழகத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் முடிவு எடுங்கள் என்றுதான் முதல்வர் அறிவுரை கூறியிருந்தார்.
வடமாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் தற்போதைக்கு அச்சப்படும் அளவுக்கு நிலைமை இல்லை என்று கூறி உயரதிகாரிகளும் முதல்வரை சமாதானப்படுத்தினர். இப்படி, முதல்வரை உள்ளடக்கி உயர்மட்ட அளவில் மட்டுமே பேசி முடிவு எடுக்கப்பட்ட ஆக்சிஜன் விவகாரத்தை, என்னமோ அரிச்சந்திரன் பேரன் போல, அமைச்சர் விஜயபாஸ்கர், ஊடகங்களின் கவனத்திற்கு வராத ஒரு விஷயத்தை, வலிய சென்று கூறுகிறார் விஜயபாஸ்கர் என்றால், அங்குதான் அவரின் குள்ளநரித்தனம் வெளிப்பட்டுவிட்டது.
இப்போதும் சுகாதாரத்துறை அமைச்சராக தான் இருக்கும் போது, தடுப்பூசி கொள்முதல், மருந்து, மாத்திரைகள், பாதுகாப்பு சாதனங்கள் என கொரோனோ கால கொள்முதல்களில் கொள்ளையடிக்க முடியாத அளவுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் தடையாக இருக்கிறார்களே என்ற கோபத்தில்தான், முதல்வரையும், அதிமுக அரசையும் காட்டி கொடுக்க துணிந்துவிட்டார் விஜயபாஸ்கர்.
தேர்தல் முடிந்த பிறகும் அதிமுக.வை பாஜகவின் அடிமை அரசு என்று திமுக விமர்சனம் செய்யும் அளவுக்கு அவப்பெயரை தேடித் தந்த விஜயபாஸ்கரை, உண்மையான அதிமுக. தொண்டன் ஒருவன் கூட மன்னிக்கமாட்டான்.
மேலும், விஜயபாஸ்கருக்கு எதிரான ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை எல்லாம் கிடப்பில் போட்டு வைத்திருக்கும் மத்திய அரசையை அவர் சீண்டிப் பார்த்ததுதான் எங்களை எல்லாம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மத்திய பாஜக அரசின் தயவு தேவை என்று அதிமுக தலைவர்கள் அமைதியாக இருக்கும் இந்த நேரத்தில், எந்த தைரியத்தில் விஜயபாஸ்கர் இப்படி நடந்து கொள்கிறார் என்பதுதான் எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஒருவேளை திமுக.விடம் சரணாகதி அடைய, தமிழகத்தின் உரிமைக்காக குரல் கொடுக்கும் உத்தமன் போல தன்னை அடையாளப் படுத்திக் கொள்ள ஆடும் நாடகமா இது?
குட்கா ஊழலில் அவரை பிடித்து சிறையில் போட்டிருந்தால் இன்றைக்கு மத்திய அரசுக்கு எதிராக அவர் பொங்கும் நிலை வந்திருக்குமா? ஆர்.கே.நகர் பணப்பட்டுவாடா முறைகேட்டில், அவரின் சொத்துகளை எல்லாம் வருமான வரித்துறை முடக்கியிருந்தால், இன்றைக்கு இந்த கூச்சல் போடுவாரா? அவரை காட்டிக் கொடுக்கும் எண்ணம் எங்களுக்கு உண்மையில் இருந்தால், இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.
தமிழக மக்களின் மீது உண்மையான அக்கறை அவருக்கு இருக்குமானால், அவரது காலத்தில் பணிமாற்றம் செய்யப்பட்ட, பழிவாங்கப்பட்ட அரசு மருத்துவர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எதிரான நடவடிக்கைகளையாவது, பதவி இழப்பதற்கு முன்பு ரத்து செய்து பரிகாரம் தேட விஜயபாஸ்கர் முயற்சி எடுக்கட்டும்.
அதேபோல, அரசு மருத்துவமனைகள், மினி கிளினிங், கொரோனோ தடுப்பு மையங்கள் போன்றவற்றில் தனது பினாமி நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்பரவு பணியாளர்களை நியமித்து, அவர்களது சம்பளத்திலும் கமிஷன் பார்த்து அவர்களின் வயிற்றில் அடித்து கொண்டிருக்கும் ஈனச்செயலுக்கு ஒரு முடிவு கட்டட்டும்.
இல்லையெனில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஏற்படுத்திய மனஉளைச்சலால் கடந்தாண்டு மரணமடைந்த அரசு மருத்துவர்கள்- பட்ட மேற்படிப்பு மாணவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.லட்சுமி நரசிம்மனின் ஆவியும்,அவரது மனைவி விட்ட சாபமும், அவரை மட்டுமல்ல அவரது வம்சத்தையுமே அழித்துவிடும் என்று கூறி முடித்த போதும் ஆவேசம் அடங்காதவராகவே காட்சியளித்தார் முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு நெருக்கமான அதிமுக முன்னணி நிர்வாகி.