Sun. Nov 24th, 2024

ஜெர்மன் குடியுரிமை பெற்ற வித்ஜா என்ற இளம்பெண் , நடிகர் ஆர்யாவுக்கு எதிராக பிரதமர் மோடிக்கு இ.மெயில் மூலம் புகார் ஒன்றை அனுப்பி இருந்தார். அந்த புகாரில், நடிகர் ஆர்யா மற்றும் அவரது தாயார் ஆகியோருடன் தனக்கு பழக்கம் ஏற்பட்டது என்றும், அவர்களுடன் நெருங்கிப் பழகியபோது, தன்னை ஆர்யா காதலிப்பதாக கூறியதால், நானும் அவரை காதலித்தேன் என்றும் கூறியுள்ளார். மேலும், தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா ஆசை காட்டியதை நம்பியதால், அவர் கேட்டபோதெல்லாம் பணம் கொடுத்தாகவும, அந்த வகையில் 70 லட்சத்து 50 ரூபாய் பணத்தை பெற்றுக் கொண்ட ஆர்யா, தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் வேறு பெண்ணை திருமணம் செய்து தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

மேலும், தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதுடன், தான் கொடுத்த பணத்தையும் திருப்பி தராமல் நடிகர் ஆர்யா மோசடி செய்துவிட்டார். எனவே, அவரிடம் இருந்து பணத்தை பெற்றுத் தருவதுடன், அவர் மீது நம்பிக்கை மோசடி, ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியது ஆகிய குற்றங்களுக்கு உரிய தண்டனை வழங்கவும், இந்த மோசடிகளுக்கு உடந்தையாக இருந்த அவரது அம்மா உள்ளிட்ட 4 பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் சென்னை மாநகர காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

வித்ஜாவின் புகார் மீது சட்டத்திற்குட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிரதமர் அலுவலகத்தில் இருந்து சென்னை மாநகர குற்றப்பிரிவுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு, சிபிசிருடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், நடிகர் ஆர்யாவிடம் மேலாளராக உள்ள முகம்மது அர்மான் என்பவர், சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி செல்வகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வித்ஜா தரப்பில் ஆஜரான வக்கில் பி.ஆனந்தன், அர்மானுக்கு முன்ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து தான் வாதாட தயாராக இருப்பதாக கூறினார். ஆனால், மனுதாரர் தரப்பில் யாரும் ஆஜர் ஆகாததால், நடிகர் ஆர்யா மேலாளர் அர்மானின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி செல்வகுமார் தள்ளுபடி செய்தார்.