Sun. Nov 24th, 2024

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சாலையூரில் இரண்டு காட்டு யானைகள் சுற்றி வருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு ஆண் யானைகள் வாழைத்தோட்டம், நெல் பயிர்கள் நடவு செய்துள்ள விவசாய நிலத்தில் புகுந்து, விளைப்பயிர்களை சேதப்படுத்தி வருவதால், அப்பகுதி விவசாயிகளும் கவலையடைந்துள்ளனர். ஆண் யானைகளை விரட்டி மீண்டும் வனப்பகுதிக்கு அனுப்பி வைக்க வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாலையூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

வாழைத்தோட்டத்தில் முகாமிட்ட யானைகளை விரட்டும் வகையில் பட்டாசுகளை கொளுத்தி சப்தம் எழுப்பும் நடவடிக்கைகளில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்குச் சொந்தமான பசு மாட்டை, தத்தத்தால் குத்தியதில், படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. இதேபோல், மற்ற கால்நடைகளையும் காட்டு யானைகள் தாக்குவதற்கு முன்பாக, வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடப்பதால், காட்டு யானைகள், வனப்பகுதியில் இருந்து வெளியேறுவதை தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் சாலையூர் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.