கப்பல் விபத்தில் மாயமான மீனவர்களை தேடும் பணியை துரிதப்படுத்த வேண்டும் மற்றும் உயிரிழந்த மீனவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறு மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மனு கொடுத்துள்ளனர். அதன் விவரம் வருமாறு :
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களை சார்ந்த ஏழு மீனவர்கள; மேற்கு வங்கத்தைச் சார்ந்த 7 மீனவர்கள் உள்பட 14 மீனவர்கள் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் ஜாபர் என்பவர் பெயரில் பதிவு செய்யப்பட்ட ரப்பா என்ற மீன்பிடி விசைப்படகில் கடந்த 11 ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வேப்பூர் என்ற மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குள் சென்றுள்ளனர்.
அங்கு மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது கடந்த 13 ம் தேதி அதிகாலை சுமார் 2 மணி அளவில் அவ்வழியாக வந்த சிங்கப்பூர் நாட்டில் பதிவு செய்யப்பட்ட ஏபிஎல்- lee- ஹாவரே என்ற சரக்கு கப்பல் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியது. இந்த விபத்தில், விசைப்படகு கடலுக்குள் மூழ்கியதுடன், மீனவர்கள் தூக்கி வீசப்பட்டுள்ளனர். உயிருகாக போராடிக்கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த வேல்முருகன் என்ற மீனவரையும் மேற்கு வங்கத்தைச் சார்ந்த சுநில்தாஸ் என்ற மீனவர்கள் உயிரோடு மீட்கப்பட்டனர்.
தகவலின் பேரில் இந்திய கடலோர காவல் படைகள் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்ட போது கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சார்ந்த அலெக்சாண்டர் மற்றும் தாசன் என்ற இரண்டு மீனவர்களும், மேற்கு வங்கத்தைச் சார்ந்த மாணிக் தாஸ் என்ற மீனவர் என 3 பேரின் சடலங்கள் மீட்டகப்பட்டது.
மேலும், ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த மாணிக்கவேலு, பாலமுருகன், பழனி என்ற மீனவர்களும்; தூத்துக்குடி மாவட்டம் மணப்பாறை சார்ந்த டென்சன் என்ற மீனவரும்; மேற்கு வங்கத்தைச் சார்ந்த மாணிக்க தாஸ், உத்தம் தாஸ் உட்பட 9 மீனவர்கள் மாயமாகி உள்ளார். மாயமான மீனவர்களை இந்திய கடலோர காவல்படை தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.
அரசு உயரிய வாகனங்களை பயன்படுத்தி மாயமான மீனவர்களை விரைந்து மீட்டு தருமாறு மாநில அரசை கேட்டுக்கொள்கின்றோம். இதுபோன்ற கப்பல் விபத்து இந்திய கடலோர பகுதிகளில் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அரசின் கவனத்திற்கு கீழ்காணும் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
- தேசிய கடல் பகுதியிலும், சிறப்பு பொருளாதார கடல் பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன் பிடிப்பதற்கு உரிய வழி வகையை மத்திய மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும்.
- ஏற்கனவே இதுபோன்ற விபத்துக்களை ஏற்படுத்திய கப்பல் மாலுமி மீது கப்பல் உரிமையாளர் மீது குற்றவழக்கு பதிவு செய்யப்படாததால் தொடர்ந்து இத்தகைய விபத்துக்கள் நடப்பதற்கு காரணமாக இருக்கின்றது. எனவே மீன்பிடி விசைப் படகு மீது மோதி மூன்று மீனவர்கள் பலியாகவும், ஒன்பது மீனவர்கள் மாயமாகவும் காரணமான கப்பல் மாலுமி, கப்பல் உரிமையாளர் மீது கொலை மற்றும் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை மாநில மத்திய அரசுகள் வழங்க வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உரிய நிவாரணம் ரூபாய் 10 லட்சம் வீதம் மாநில மத்திய அரசுகள் வழங்க வேண்டும்.
- கப்பல் விபத்தில் கொல்லப்பட்ட, மாயமான, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு சர்வதேச சட்டப்படி கப்பல் உரிமையாளர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
- ஆழ்கடலில் இதுபோன்று பேராபத்து நடக்கின்ற சூழலில் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்பதற்கு சக்திவாய்ந்த உபகரணங்களை மாநில மத்திய அரசுகள் உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.
- பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அவர்களின் படிப்பின் தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.
குமரி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டள்ள கோரிக்கை மனுவில், தெற்காசிய மீனவர் தோழமை என்ற அமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு அமைதி மற்றும் வளர்ச்சி குழு இயற்றினார் அருட்பணி ஸ்டீபன் குளச்சல் பங்குத்தந்தை அருட்பணி செல்வன் தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் அருட்பணி சர்ச்சில் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்தினர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.