ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அதில், திருநங்கையர் உரிமையை காத்து நிற்பதில் திமுக எப்போதுமே முன்னிலையில் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக அவரை, திருநங்கையர்கள் நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி விவரம் இதோ…..
ஆண் – பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் இன்று (ஏப்ரல் 15) திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.
திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்கத் தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர். அவர் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளைக் காத்து நிற்கும் என்ற உறுதியினை வழங்கி, திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!