Sun. Apr 20th, 2025

சிறப்புச் செய்தியாளர் …

தலைமைச் செயலகத்தில் உள்ள உயரதிகாரிகள், அரசியல் கட்சியின் முன்னணி தலைவர்கள், ஊடகவியலாளர்களில் பெரும்பான்மையானர், அரசியல் சார்பு இல்லாத தேர்தல் கள ஆய்வாளர்கள் என ஒட்டுமொத்த கூட்டமும், மே 2 ம் தேதியன்று தமிழகத்தின் அடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்தான் என்பது உறுதியாகிவிடும் என சத்தியம் செய்யாத குறையாக கூறி வருகிறார்கள்.

திமுக.தான் ஆட்சிக்கு வரும் என்பதை கடந்த 2,3 நாட்களாக முதல்வர் பழனிசாமியும் உணர்ந்திருப்பதாக அவருக்கு நெருக்கமான அதிமுக முன்னணி நிர்வாகிகளே முணுமுணுக்க தொடங்கிவிட்டனர். அதனால், திரைப்படத்தின் முதல் பாதி சுபமாக நிறைவடைந்திருக்கிறது. இரண்டாம் பாகமாக, அமைச்சர்கள் யார், யார் என்பதும் அரசல் புரசலாக தகவல்கள் வெளியே வரத்தொடங்கிவிட்டன.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசை வழிநடத்தும் நிர்வாக மட்டத்தில் உள்ள உச்சபட்ச பதவியான தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனர் ஆகிய இரண்டு பதவிகளிலும் யார் நியமிக்கப்படுவார்கள் என்ற பேச்சுதான், தலைமைச் செயலகத்தில் கடந்த பல நாட்களாக சூட்டை கிளப்பியுள்ளது.

தலைமைச் செயலகத்தில் வலம் வந்தபோது, ஐஏஎஸ் அதிகாரிகளில் பெரும்பான்மையானோர் திமுக ஆட்சியை வரவேற்கும் மனநிலைக்கு வந்துவிட்டார்கள். அவர்களுக்குள்ளாகவே, தலைமைச் செயலாளர் இவர்தான் என்று உயரதிகாரி ஒருவரின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் யாரென்றால் தற்போதைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்.

தமிழக அரசின் தற்போதைய தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் பதவியேற்பதற்கு முன்பாகவே, ஹன்ஸ்ராஜ் வர்மா ஐஏஎஸ்.,தான் புதிய தலைமைச் செயலாளராக வருவார் என்று செய்திகள் வெளியாகின. கடைசி நிமிடத்தில் ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ், அதிமுக அரசின் கடைசி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மனதில் இருப்பவர் வெ.இறையன்பு ஐஏஎஸ் என்று கூறுகிறார்கள், அவரை நெருக்கமாக அறிந்த முன்னணி நிர்வாகிகள். கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த நிமிடம் வரை அதிமுக அரசால் பழிவாங்கப்பட்டவர்களில் முதல் இடத்தில் இருப்பவர் இறையன்பு ஐஏஎஸ்.

2006 முதல் 2011 ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு, துறை ரீதியான வழிகாட்டுதல்களை கூறுவதற்காக, அனுபவம் வாய்ந்த மூத்த ஐஏஎஸ் உயரதிகாரிகளைக் கொண்ட குழு செயல்பட்டது. .

அந்தக் குழுவில், கட்டாய விருப்ப ஓய்வுப் பெற்ற அசோக் வரதன்ஷெட்டி, வெ.இறையன்பு, பிரதிப் யாதவ் ஆகியோரின் அறிவுரைபடிதான், உள்ளாட்சித்துறையே இயங்கியது. அதேபோன்ற குழு ஒன்றைதான் தற்போது அமைப்பது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் யோசித்து வருவதாக அவருக்கு மிக,மிக நெருக்கமான முன்னணி நிர்வாகி ஒருவர் கிசுகிசுத்தார்.

தலைமைச் செயலாளர் என்ற பதவியில் வெ.இறையன்பு ஐஏஎஸ்.ஸை அமர்த்தாமல், முதலமைச்சர் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் அவரை அமர்த்தி, அவரது நேரடி கட்டுப்பாட்டில் தலைமைச் செயலாளர் உள்பட அனைத்து துறை செயலாளர்களையும் நியமித்து, தனது தலைமையிலான தமிழக அரசை, நேர்மையான பாதையில் நேர்த்தியாக வழிநடத்திச் செல்வதற்கான திட்டமிடலில்தான் திமுக தலைவர் தற்போது சிந்தனையை செலுத்தி வருவதாக கூறுகிறார் அந்த முன்னணி நிர்வாகி.

இதேபோல, தமிழக காவல்துறையின் தலைமை இயக்குனர் பதவிக்கான தேடலில், தற்போதைய பதவி மூப்பு அடிப்படையில் தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு, முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கு அடுத்த நிலையில் கரண் சின்ஹா ஐபிஎஸ் உள்ளார். இருவருமே 1987 ல் ஐபிஎஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்துள்ளார்கள். இருவரில், முன்னவர், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் நேசிப்பிற்குரியவர் டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ்.என்பால், அவரைதான் புதிய காவல்துறை தலைமை இயக்குனராக தேர்வு செய்வார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்கிறார்கள் அவரது மனவோட்டத்தை அறிந்த அண்ணா அறிவாலய நிர்வாகி ஒருவர்.

இதேபோல, சென்னை மாநகர காவல் ஆணையர் பதவியில் தற்போது உள்ள மகேஷ்குமார் அகர்வால் ஐபிஎஸ்.ஸும் மாற்றப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும், அவருக்குப் பதிலாக அந்தப் பதவியில், ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விரைவு அதிரடிப்படை கூடுதல் டிஜிபி எம்.ரவி ஐபிஎஸ் நியமிக்கப்பட 99.99 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக கூறுகிறார் அதே நிர்வாகி.

மே 6 ல் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் மு.க.ஸ்டாலின், மறைந்த திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதியின் பிறந்தநாளான ஜுன் 3 ஆம் தேதிக்கு முன்பாக தமிழக அரசின் நிர்வாகத்தையே தலைகீழாக மாற்றியமைத்து, தொடக்கத்திலேயே டாப் கியரில் தமிழக அரசை வழிநடத்திச் செல்வார் என்று உற்சாகமாக கூறுகிறார்கள், திமுக தலைவருக்கு நெருக்கமான எம்.எல்.ஏ., ஒருவர்.

நடக்கட்டும்…நடக்கட்டும்…