Sat. Nov 23rd, 2024

சென்னை உள்பட காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகள், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் எண்ணப்படவுள்ளன.

இங்குள்ள அறைகளில்தான் வாக்குகள் பதிவான மின்னணு வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. 24 மணிநேரமும் மூன்று ஷிப்ட்டுகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதுபோல, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வளாகத்தில் மின்னணு வாக்குப் பெட்டிகள் வைக்கப்ப்டடுள்ள அறைகளை, அரசியல் கட்சியினர் பார்வையிடுவதற்காக கண்காணிப்பு அறை அமைக்கப்பட்டு, அங்குள்ள டிவி திரையில், பாதுகாப்பாக உள்ள அறைகளை பார்த்து கொள்ளலாம்.

அந்த வகையில் லயோலா கல்லூரி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சி ஒளிபரப்பு சற்று முன் திடீரென தடைபட்டதால் பாதுகாப்பு பணியில் இருந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

உடனே களத்தில் இருந்த வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை நோக்கி செல்ல தொடங்கினர்.

உடனே காவலர்கள் விரைந்து வந்து Strong Room பின்புறம் உள்ள சிசிடிவி காமிராவை இணைக்கும் பணியின் காரணமாக சிறு தடங்கல் ஏற்பட்டதாகவும், அதற்கு வருந்துவதாகவும் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து உடனடியாக சிசிடிவி காட்சிகள் ஒளிபரப்பு தொடங்கியது.