தி.மு.க மூத்த தலைவர்களில் ஒருவரும், அக்கட்சியின் பொதுச்செயலாளருமான துரைமுருகன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு சிகிச்சைப் பெறுவதற்காக அவரது வீட்டிலேயே அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் இன்று காலை முதல் வாட்ஸ் அப்.பில் தகவல் பரபரவென பரவியது.
சமூக ஊடகங்களில் பதிவான தகவலை உறுதி செய்யாமல், அதனை நம்பி தமிழ் மற்றும் ஆங்கில ஊடகங்களில் துரைமுருகனுக்கு கொரோனோ தொற்று என செய்தி வெளியானது. அதனைக் கண்டு, திமுக.வினர் அதிர்ச்சியடைந்தனர். மாவட்டங்களில் உள்ள முக்கிய திமுக நிர்வாகிகள், அண்ணா அறிவாலயத்திற்கும், துரைமுருகன் இல்லத்திற்கும் தொலைபேசி செய்து செய்தி உண்மைதானா? என்று தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
ஒரு கட்டத்தில் விசாரிப்புகளுக்கு பதில் சொல்ல முடியாத நிலை ஏற்பட்டதையடுத்து, துரைமுருகனுக்கு காய்ச்சல் உள்ளிட்ட சில பாதிப்புகளுக்கான அறிகுறிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதனால், அவர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டதாகவும், பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவும் கூறப்பட்டது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக அவரின் புதல்வரும், வேலூர் திமுக எம்.பி.யுமான கதிர் ஆனந்த், துரைமுருகனுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதியாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனோ தொற்று பாதிப்பிற்காக துரைமுருகன் சிகிச்சைப் பெற்று வருகிறார் என்று கூறப்படும் தகவலில் துளியும் உண்மை இல்லை என்றும் கதிர் ஆன்ந்த் உறுதிபட தெரிவித்துள்ளார்.