மறைந்த பாஜக தலைவர்கள் சுஷ்மா சவராஜ் மற்றும் அருண் ஜெட்லி பற்றி கூறிய கருத்துகள் தேர்தல் நன்னடத்தை விதிமுறையை மீறிய குற்றமாக கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் செவ்வாய் கிழமை அனுப்பிய நோட்டீஸுக்கு புதன் கிழமை திமுக இளைஞர் பிரிவு தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் கடிதம் அனுப்பியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த “அழுத்தத்தையும் சித்திரவதையையும் பொறுத்துக்கொள்ள முடியாததால்” தான் ஸ்வராஜும் ஜெய்ட்லியும் இறந்துவிட்டதாகக் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின் போது குறிப்பிட்டதாக பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்த புகாருக்கு விளக்கம் அளிக்க கோரி, தேர்தல் ஆணையம் நேற்று உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
அதுதொடர்பாக, உதயநிதி ஸ்டாலின் இன்று தேர்தல் ஆணையத்திற்கு பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தில், தனது உரையின் முழு விவரத்தையும் கருத்தில் கொள்ளாமல், பேச்சில் குறிப்பிட்ட இரண்டு வரியை மட்டுமே புகாராக கூறப்பட்டுள்ளது. தன்னுடைய முழு பேச்சும் பாராட்டு பெற்றிருக்கும் நிலையில், அந்த பேச்சில் இரண்டு வரிகளை மட்டுமே புகாராக கூறப்படுவதும், அதன் அடிப்படையில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை மீறிவிட்டதாக குற்றம் சாட்டுவதையும் தான் முழுமையாக மறுக்கிறேன். அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்ககைப் பற்றியும், பிற கட்சிகளின் நிர்வாகிகளைப் பற்றியும் தான் விமர்ச்சிக்கவில்லை. அந்த விதிப்படி தான் தவறு செய்துள்ளதாக கூறுவதை முழுமையாக மறுப்பதாகவும் உதயநிதி ஸ்டாலின் அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் ஆணையம் நேற்று உதயநிதிக்கு விளக்கம் கேட்டு அனுப்பிய கடிதத்தில், இன்று மாலை 5 மணிக்குள் (07.04,2021) பதில் கடிதம் அனுப்பாவிட்டால், அவருக்கு எதிராக (உதயநிதி) தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக மேல் நடவடிக்கை எடுக்கும் என குறிப்பிட்டிருந்தது. தேர்தல் ஆணையம் கெடு விதித்த நேரத்திற்கு முன்பாகவே திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதில் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.